ழ சினிமா சார்பில் பிரேமா செழியன் தயாரிக்க, சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார், தருண், ஆதிரா பாண்டி லக்ஷ்மி, ரவி சுப்ர மணியன், அருள் எழிலன், மருது மோகன், எம் கே மணி, ஆறுமுக வேலு ஆகியோர் நடிப்பில்,
ஒளிப்பதிவாளர் செழியன் கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் டூ லெட் . உலகப் பட விழாக்களில் பல விருதுகளை வென்று வந்த படம் .
வாடகை வீட்டில் வசிக்கும் ஏழை எளிய குடும்பங்களை, கல் மனம் கொண்ட வீட்டு ஓனர்கள் என்ன பாடுபடுத்துகிறார்கள்…. அதனால் அவர்களது வாழ்க்கையின் சுயம், , தனிமை , அடிப்படை சுதந்திரம் , சுய மரியாதை , கணவன் மனைவி பந்தம் , பிள்ளைகளின் படிப்பு , நிம்மதி , இருத்தல் ஆகியவை எப்படி பாதிக்கப் படுகிறது என்பதை சொல்லும் படம் இது .

சினிமாத்துறையில் கதாசிரியனாக இருந்தபடி இயக்குனர் ஆகவும் முயலும் கணவன் (சந்தோஷ் ஸ்ரீராம் — இவர் கத்துக் குட்டி படத்தின் ஒளிப்பதிவாளரும் கூட ) , வீட்டில் இருக்கும் மனைவி ( ஷீலா ராஜ்குமார் ) , பால்ய வயது மகன்(தருண் ) அடங்கிய
ஒரு அழகிய குடும்பம் , வாடகைக்கு குடியிருப்போரை மனிதராகவே மதிக்காத வீட்டு ஒனர்களிடம் சிக்கி பல்வேறு விதமான அவலங்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாவதை ரத்தமும் கண்ணீருமாக சொல்கிறது டூ லெட் .
வாடகை வீடு , பக்கத்தில் உள்ள வாடகை வீடு, சிறு நட்பு , அது கூட திடீரென காணமல் போகும் அவலம், ”சுவரில் கிறுக்காதே , சத்தம் போடாதே…” என்று வாடகை கொடுத்தாலும் வீட்டை வீடாக பயன்படுத்த முடியாத நிலை , குடியிருக்கும் போதே அடுத்து வாடகைக்கு வர இருப்பவர்கள் உள்ளே நுழைந்து வீடு பார்ப்பதால் ஏற்படும் தர்ம சங்கடங்கள்…

வாடகைக்கு விடுவதற்கு என்றே காற்றும் வெளிச்சமும் இல்லாமல் புறாக் கூண்டு போல கட்டப்படும் வீடுகள் என்று…… சென்னையில் ஓர் ஏழை குடும்பம் வாடகை வீட்டியல் வாழ்வில் படும் அத்தனை சிரமங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக உரித்து வைக்கிறது படம்.
இவை அனைத்தும் சினிமாத்தனம் இல்லாமல் எந்த வித ஜோடனை பூச்சும் இல்லாமல் மிக யதார்த்தமாக வாழ்வியலுக்கு நெருக்கமாக சொல்லப் படுவது படத்தின் சிறப்பு .
அதிலும் கரண்ட இல்லாததால் மின் விசிறியில் கூடு கட்டிய குருவிக்கு கரண்ட் வந்த நொடியில் நிகழும் அவலம், வாடகை வீட்டில் வசிக்கும் வயது முதிர்ந்த ஏழை மனிதர்கள் , பிள்ளைகள் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட வாடகைப் பணத்தில் வாழ்க்கை நடத்தும் முதியவர்கள் என்று கண்ணீர்க் கவிதைகள் பல .
இன்னொரு பக்கம் வீடு விடுவதிலும் ஜாதிப் பாகுபாடு , நிரந்தர வேலை இல்லாதவர்கள் குறிப்பாக சினிமாக்காரர்களுக்கு வீடு கிடைப்பதில் உள்ள கஷ்டங்கள் என்று பன்முகங்களையும் காட்டுகிறது டூ லெட்.

கொடுமைப்படுத்தும் வீட்டு ஓனரிடம் சவால் விட்டு வீடு மாற்ற போராடி , புதிய வீடு பார்த்து , குறிப்பிட்ட நாளில் சாமான்களை எல்லாம் கட்டி வைத்து விட்ட நிலையில் பார்த்து வைத்த வீடும் கிடைக்காமல் தடுமாறி அப்படியே சரிந்து படுத்து ,
மறு நாள் காலை விடியும் அந்தக் காட்சி…. செழியனின் இயக்கத்தில் சிகரமாக அமைந்த காட்சி . எந்த வித சினிமாத்தனமும் இல்லாத ஆனால் யதார்த்தமான வகையில் அமையும் படத்தின் முடிவு சினிமாத்தனமான சோகக் காட்சிகளை விட அதிக வலியைத் தந்து விடுகிறது .
குறைவான ஒளியின் மூலம் கூட தனது ஒளிப்பதிவில் வறுமையை வெறுமையை கொண்டு வருகிறார் செழியன் . அற்புதம் .
இசையே இல்லாத படம் இது . மாறாக ஒலி வடிவமைப்பும் எபெக்ட்சும் மட்டுமே . மிக சிக்கலான கொஞ்சம் அசந்தால் வில்லங்கமாக போகும் வேலை இது .

ஆனால் தபஸ் நாயக்கின் சிறப்பான ஒலி வடிவமைப்பும் சேதுவும் முக்கியத்துவம் நிறைந்த எபெக்ட்சும் அவர்களை சரியாக பயன்படுத்திய செழியனின் ஒளிப்பதிவும் இயக்கமும் வேறொரு விதமான ரசனை உணர்வை கொண்டு வருகின்றன . அபாரம்.
குறைவான கதாபாத்திரங்களே மீண்டும் மீண்டும் வரும் படம் படம் பார்ப்பவர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு ஸ்ரீகர் பிரசாத்தின் படத் தொகுப்பு மாபெரும் பங்களிப்பு செய்துள்ளது.
சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார், தருண், ஆகியோர் யதார்த்தமான ஒரு குடும்பத்தை தங்கள் நடிப்பில் கொண்டு வருகிறார்கள். வாழ்த்துகள் அன்பர்களே !

ஆணவம் பிடித்த வீட்டு ஓனராக ஆதிரா பாண்டி லக்ஷ்மி மிரட்டுகிறார் . வாடகை வீடு புரோக்கராக அருள் எழிலன் அவ்வளவு யதார்த்தம் .
ரவி சுப்ர மணியன், அருள் எழிலன், மருது மோகன், எம் கே மணி, ஆறுமுக வேலு ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர் . பாராட்டுகள்
கதாசிரியராக இருக்கிற , நல்ல கதை எழுதும் திறமையும் கொண்டிருக்கிற — தவிர பணத்துக்காக படைப்பில் எந்த சமரசமும் செய்து கொண்டு ஊறுகாய் விளம்பரத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதவும் தயாராக இருக்கிற —
திறமையை மதித்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிற விளம்பர கம்பெனி முதலாளியின் நட்பை பெற்று இருக்கிற , நாயகன்…. ஏதோ தினக் கூலி போல காசுக்கு கஷ்டப்படுவதாக காட்டுவது யாதார்த்தமாக இல்லை
எனில் மேல சொன்ன விசயங்களில் ஏதோ ஒன்று தப்பு .

எனினும் பெரு நகரங்களில் எளிய குடும்பங்களின் முக்கிய பிரச்னையாக இருக்கிற வாடகை பிரச்னையை எடுத்துக் கொண்டு அதை மனதைத் தைக்கும்படி சொன்ன வகையில் இந்தப் படம் வாங்கிய விருதுகளுக்கு எல்லாம் தகுதி உடையதாக இருக்கிறது .
டூ லெட்…. குடும்பத்துடன் குடியேறலாம்
மகுடம் சூடும் கலைஞர்கள்
செழியன்,ஷீலா ராஜ்குமார் , ஸ்ரீகர் பிரசாத், தபஸ் நாயக், சந்தோஷ் ஸ்ரீராம் , அருள் எழிலன் , ஆதிரா பாண்டி லக்ஷ்மி