புகழ்பெற்ற மலையாள இயக்குனர்-தயாரிப்பாளர் KP குமாரனின் மகனும், இரண்டாம் தலைமுறைத் தயாரிப்பாளருமான மனு குமாரன்,
தனது ‘மீடியன்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பிலும் , மனோஜ் கேசவன் என்பவர் தனது ‘லைகர்’நிறுவனத்தின் சார்பிலும் இணைந்து தயாரிக்க ,
நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் படம் பாரிஸ் பாரிஸ் .
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு நகைச்சுவை நடிகர் செந்தில் கதாநாயகனாக நடிக்க,
ஏழு கதாநாயகிகள் உடன் நடிக்க வெளிவந்த ஒரு படத்தின் பெயர் கூட பாரிஸ் பாரிஸ் தான்.
ஆனாலும் இந்தத் திரைப்படம் சாதாரண பாரிஸ் அல்ல.
ஹிந்தியில் கங்கனா ரனாவத் நடித்து 12.5 கோடி பட்ஜெட்டில் தயாராகி, வசூலில் 97 கோடிகளைக் குவித்துச் சாதனை படைத்ததோடு மட்டுமில்லாமல்,
சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது உட்பட 32 விருதுகளை பெற்ற“குயின்” இந்திப் படத்தின் மறு உருவாக்கம்தான் இந்த பாரிஸ் பாரிஸ்
நாயகனாக நிப்பான் பெயின்ட் உட்பட பல விளம்பரப் படங்களில் நடித்த சஷி வருண் வருகிறார் .
வசனங்கள் மற்றும் பாடல்களை தமிழச்சி தங்கபாண்டியன் எழுதுகிறார்.
முதல் முறையாக தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் என நான்கு தென்னக மொழிகளில்,
ஒரே நேரத்தில் படமாக்கப்படவிருக்கும் இந்தப் படம் , ஒரே சமயத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு நாயகி. தமிழ் தவிர கன்னட படத்தையும் ரமேஷ் அரவிந்தே இயக்குகிறார்
கடந்த இருபது வருடங்களாக அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பணியாற்றி வருகிற ரமேஷ் அரவிந்த்,
நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தும், ஏழு படங்களை இயக்கியும்,
பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பிரபலமாகவும், இரண்டு புத்தகங்களை எழுதிய எழுத்தாளராகவும் இருப்பவர்.
பிரபல வானொலி தொகுப்பாளரான ரமேஷ் தனது மனைவி அர்ச்சனா, குழந்தைகள் நிஹாரிகா, மற்றும் அர்ஜுனுடன் பெங்களூரூவில் வசித்து வருகிறார்.
1964ம் பெங்களூரூவிலேயே பிறந்து, வளர்ந்த ரமேஷ் தன்னுடைய பள்ளி கல்லூரி நாட்களிலேயே கலையின் மேல் தீராத அதிதீவிர பற்றுக் கொண்டு,
கலை-நாடகத் துறைகளில் கவனம் செலுத்தினார். “பரிச்சயா” என்ற தொலைக்காட்சித் தொடர் அவரைக் கலை உலகிற்கு அடையாளம் காட்டியது.
அவரது சுறுசுறுப்பான திரை ஆளுமையால் ஈர்க்கப்பட்ட இயக்குனர் K.பாலச்சந்தர், “சுந்தர ஸ்வப்னகலு” என்ற,
மும்மொழி திரைப்படத்தின் மூலம் (கன்னடம், தெலுங்கு, தமிழ்) அவரை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தினார்.
புத்துணர்ச்சி மிக்க நடிப்பால் ரசிகர்கள் இதயத்தைக் கவர்ந்த ரமேஷ், வெகு எளிதில் கன்னடத் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக முன்னேறினார்.
தொடர்ச்சியாக ஒன்பது வெற்றிப்படங்களை வழங்கி, 1997 ம் ஆண்டின் கன்னட திரையுலகின் சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்தவர்.
அவரது எழுத்து திறமைக்கு ஹூமலே, அம்ருததாரே, ஆக்சிடென்ட் ஆகியன மேலான ஆவணங்கள்.
2005ம் ஆண்டு இயக்குனராக களமிறங்கி, கமல்ஹாசனுடன் சேர்ந்து “ராமா ஷாமா பாமா” என்ற,
முழுநீள நகைச்சுவை படத்தை இயக்கி நடித்ததோடு, தொடர்ந்து ஆறு கன்னட படங்களையும் இயக்கி இருக்கிறார்.
கமல்ஹாசன், K பாலச்சந்தர், K விஸ்வநாத் ஆகியோர் நடித்த “உத்தம வில்லன்” என்ற படத்தை இயக்கியதன் மூலம்,
2015ம் ஆண்டு, தமிழில் திரைப்பட இயக்குனராக அறிமுகமானார்.
மூன்றாவது சீசனாக நடைபெறும், வீக் எண்ட் வித் ரமேஷ் என்ற அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகவும் பிரசித்தம்.
பல்வேறு விருதுகளைப் பெற்ற ரமேஷுக்கு, இரண்டு முறை சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதும், இரு முறை கர்நாடக அரசின் சிறந்த நடிகர் விருதும்,
ஸ்க்ரீன் பத்திரிக்கையின் சிறந்த நடிகர் விருதும் கிடைத்துள்ளது. உதயா தொலைகாட்சி சிறந்த அறிமுக இயக்குனர் விருதை வழங்கி கௌரவித்தது.
சிறந்த கதைக்காக ராகவேந்திரா சினி விருதும், அகில இந்திய அறிவுசார் சங்கம் கிரேட் சன் ஆஃப் கர்நாடகா விருது வழங்கி கௌரவித்து மகிழ்ந்தது.
“இட்ஸ் நோ பஃன் வித்தௌட் யூ” என்று ஆங்கிலத்திலும், “குஷியிண்ட ரமேஷ்” என்று கன்னடத்திலுமாக, இரு புத்தகங்கள் எழுதி இருக்கிறார்.
பெங்களுரு, மைசூரு நகரங்களின் குழந்தைகளின் குடிமை விழிப்புணர்வு இயக்கத்தின் விளம்பர தூதுவராகவும் இருக்கிறார்.
இவ்வியக்கம் நகரங்களை தூய்மையாக வைப்பதற்கும், மக்களிடையே அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செயல்படுகிறது.
அவர் 2013ம் ஆண்டிற்கான தேர்தல் கமிஷனின் விளம்பர தூதுவராகவும் இருந்து, ஓட்டுகளின் முக்கியத்துவத்தையும்,
ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தையும் மக்களிடையே கொண்டு சேர்த்தார். முதியோருக்கான டிக்னிட்டி ஃபவுண்டேஷன் உட்பட,
பல்வேறு தரப்பட்ட இயக்கங்களுக்கும் விளம்பர தூதுவராகப் பணியாற்றியதோடு கர்நாடகாவில் எய்ட்ஸ், ஹெச்ஐவீ பற்றிய விழிப்புணர்வு பணியிலும் ஈடுபட்டார் .
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் அவருக்கு “7 நயமான மனிதர்களில் ஒருவர் விருது வழங்கி கௌரவித்து உள்ளது.
படம் பற்றிக் கூறும் ரமேஷ் அரவிந்த் , ” விருது நகரில் வாழும் தன்னம்பிக்கை குறைவான ஒரு இளம் பெண்ணின் திருமணத்தை ,
அவளது வருங்கால கணவனே தடுத்து நிறுத்திவிடுகிறான். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அப்பெண், தனியாகவே தேனிலவுக்கு செல்வது என முடிவெடுத்து,
தனது பயணத்தைத் துவங்குகிறாள். அப்பயணத்தில் அவள் சந்தித்த புதிய மனிதர்களின் மூலம், அவளுக்கு ஏற்பட்ட,
புதுப்புது அனுபவங்களில் தனது சுய அடையாளத்தைக் கண்டுகொள்கிறாள். என்பதுதான் படத்தின் கதை .
குயின் படத்தை நாங்கள் அப்படியே ரீமேக் செய்யவில்லை . கதையை மற்றும் எடுத்துக் கொண்டு நிறைய மறு உருவாக்கம் செய்கிறோம் .
விருதுநகர் , பாரிஸ் , பார்சிலோனா , ஆம்ஸ்டர்டாம் , லண்டன் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது ” என்றார் ரமேஷ் .
வாழ்த்துகள் !