அப்ளாஸ் என்டர்டைன்மென்ட், E4 எக்ஸ்பரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோஸ் (நிறுவன லோகோ அழகு) சார்பில் சமீர் நாயர், தீபக் சேகல், முகேஷ் ஆர் மேத்தா , சி வி சாரதி, பூனம் மெஹ்ரா, சந்தீப் மெஹ்ரா ஆகியோர் தயாரிக்க,
அசோக் செல்வன், சரத் குமார், நிகிலா வர்மா, சரத்பாபு, பி எல் தேனப்பன் நடிப்பில் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி இருக்கும் படம். போர்த் தொழில் என்பதே இலக்கணப்படி சரி. இவர்கள் போர் தொழில் என்று பெயர் வைத்துள்ளனர்.
திருச்சியில் பெண்கள் சிலர், கைகள் மற்றும் தலை பின்பக்கமாக இழுத்துக் கட்டப்பட்டு தொண்டையை அறுத்துக் கொல்லப்படுகின்றனர். அதை விசாரிக்க சென்னையில் இருந்து ஸ்பெஷல் டியூட்டியில் சீனியர் கிரைம் பிராஞ்ச் அதிகாரி (சரத்குமார்) நியமிக்கப்படுகிறார்.
புதிதாக பணிக்கு சேர்ந்து இருக்கும் ஓர் இளம் அதிகாரியை (அசோக் செல்வன்) அவரோடு அனுப்பி அவருக்கு பயிற்சி தரச் சொல்கிறார் மேலதிகாரி ( நிழல்கள் ரவி) . ஆனால் சிடுசிடு குணம் கொண்ட அந்த சீனியர் விசாரணை அதிகாரி , எவனுக்கும் பயிற்சி தருவது என் வேலை இல்லை என்கிறார் .
எனினும் மேலதிகாரி சம்மதிக்க வைக்க வேண்டா வெறுப்பாக அழைத்துப் போகிறார் . உடல் டெக்னிக்கல் உதவியாளராக ஒரு பெண் அதிகாரி ( நிகிலா விமல்)
திருச்சிக்குப் போய் விசாரணை செய்து அவர்கள் கண்டு பிடித்தது எப்படி ? குற்றவாளி யார் ? ஏன் என்பதே படம் .
சீனியர் அதிகாரி, இளம் அதிகாரியை நடத்தும் விதம் இவர் நடந்து கொள்ளும் விதம் இவற்றால் வரும் நகைச்சுவை… ரசனை.
ஒரே பிரச்னையில் வளர்ந்தவர்கள் நேர் எதிரான குண நலத்தோடு உருவாவது உண்டு என்ற ரீதியில் சீனியர் அதிகாரியைப் படைத்த விதமும் சிறப்பு .
மிக சிறப்பாக படமாக்கல் செய்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் ராஜா , இணை எழுத்தாளர் ஆல்பிரட் பிரகாஷின் பணிகளும் சிறப்பு . இளம் அதிகாரிக்கும் டெக்னிக்கல் அதிகாரிக்கும் இடையே பூக்கும் மெல்லிய நெருக்கமும் அழகு .
செத்துப் போன நபரின் காதுக்குள் தெர்மாமீட்டர் வைத்து வெப்பநிலை பார்த்து அவர் இறந்த நேரத்தை அனுமானிப்பது, வேட்டைத் துப்பாக்கியை முகர்ந்து பார்த்தது அண்மையில் சுடப் பயன்பட்டதா என்று யூகிப்பது, ஸ்பெஷல் டியூட்டியில் போகும் அதிகாரிகளுக்கும் லோக்கல் அதிகாரிகளுக்கும் இடையிலான பாலிடிக்ஸ் என்று விவரணைகள் யாவும் அதகளம் . இவைதான் இந்தப் படத்தை தனித்துக் காட்டுகிறது.
கலை செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு அருமை . குறிப்பாக வண்ணப் பயன்பாடு .
ஜேக்ஸ் பிஜாயின் இசை , ஸ்ரீஜித் சாரங்கின் படத் தொகுப்பு ஆகியவையும் நேர்த்தி.
முதல் ஒரு மணி நேரம் பிரம்மிக்க வைக்கும் படத்துக்கு அப்புறம் திருஷ்டி விழுகிறது . முப்பது வருட இடைவெளி என்ற விஷயத்தை போகிற போக்கில் கண்டு பிடிப்பதில் துவங்கி படத்தில் பல சிக்கல்கள் விக்கல்கள் .
என்ன இருந்தாலும் கொலைக்கான காரணங்கள் அநியாயம் அக்கிரமம். தப்பான வழிகாட்டல்
”இன்றைய பரபரப்பு டென்ஷன் யுகத்தில் அப்பா அம்மாக்கள் சண்டை போடாமல் எல்லாம் இருக்க முடியாது. அதை பிள்ளைகள் பார்ப்பதும் இயல்புதான் . ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் நீ ஒழுங்காகப் படி .
என்னதான் அடித்துக் கொண்டாலும் அப்பா அம்மா சமாதனம் ஆகி விடுவார்கள் . அல்லது உனக்காகவாவது ஒன்றாக வாழ்வார்கள். எனவே அவர்கள் சண்டை உன் மனதை பாதிக்காமல் பார்த்துக் கொள். அவர்கள் சண்டை போடுவதால் நீ பாதை மாறாதே” என்று இன்றைய இளைஞர்களுக்கு சொல்லி யாராவது படம் எடுக்க மாட்டார்களா என்று ஏக்கமாக இருக்கிறது.
எனினும் பரபரப்பாக விறுவிறுப்பாக சுவாரஸ்யமாகப் படத்தைக் கொண்டு போய் இருப்பதால் போர் தொழில் BORE தொழில் ஆக மாறாமல் போர்த் தொழிலாகவே ஆகி இருக்கிறது
3.5/5