ப்ரோகன் மூவீஸ் சார்பில் பீட்டர் ராஜ் என்பவர் தயாரித்து ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, குரு சோமசுந்தரம், (மறைந்த) நிதிஷ் வீரா, ஸ்ரீதர் மாஸ்டர், துர்கா , ஸ்வேதா நடிப்பில் வெங்கட் புவன் இயக்கி இருக்கும் படம்.
பார்வை மாற்றுத் திறனாளியும் சித்த மருத்துவத்தில் அறிவும் பிடிப்பும் உள்ள ஓர் இளைஞன் , அவனுக்கு ஒரு காதலி. ஒரு நெருங்கிய நண்பன் . ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் இயற்கை மருத்துவருக்கு ஏற்படும் பிரச்னை சம்மந்தமான ஒரு வழக்கில், பார்வை மாற்றுத்
திறனாளி போலீசாரால் கைது செய்யப்படுகிறான் . அவன் நண்பர்கள் விசாரிக்கப்படுகின்றனர் .
தமிழ் மருத்துவத்தையும் அதன் பலன்களையும் கார்ப்பரேட் வியாபார சிந்தனையோடு வெளிநாட்டுக்கு விற்கும் அந்த பணக்கார மருத்துவருக்கும் அவனுக்கும் முன் பகை இருக்கிறது
மனிதரின் ஆயுளை நீட்டிக்கும் நிசம்பசூதனி என்ற மூலிகை, பார்வை மாற்றுத்திறனாளி இளைஞனுக்கு மட்டுமே தெரியும் நிலையில் அவனை நெருக்கி அதைக் கண்டுபிடிக்க முயன்ற கார்ப்பரேட் மருத்துவருக்கும் இளைஞனுக்குமான பிரச்னையும் அதன் விளைவுமே படம்.
மாற்றுத் திறனாளி இளைஞன், அவன் காதலி , நெருங்கிய நண்பன் ஆகிய மூன்று கதாபாத்திரங்களுக்கும் தலா இரண்டு நடிகர்கள் .
பார்வை மாற்றுத் திறனாளி இளைஞனுக்கு எட்டு வயதில் கண் பார்வை போயிருக்கும் . அதன் பிறகு அவன் மனதுக்குள் இருக்கும் அவன் உருவம் ( நிதிஷ் வீரா) , இப்போது இருக்கும் அவனது நிஜமான உருவம் ( ஸ்ரீதர் மாஸ்டர் ) என்று இரண்டு நடிகர்கள் . காதலி பற்றி அவனுக்குள் தோன்றும் உருவம் (துர்கா) , அவளது நிஜமான தோற்றம் ( ஸ்வேதா) என்று இரண்டு நடிகைகள் . நண்பனுக்கும் அப்படியே ( தயார்ப்பாளர் பீட்டர் ராஜ், விக்ரம் ரஜினி ) என்று இரண்டு நடிகர்கள்.
நிதிஷ் வீரா அகால மரணம் அடைந்ததால் ஏற்பட்ட திட்டமா அல்லது ஆரம்பத்திலேயே இப்படித்தான் திட்டமிட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால் இது பாராட்டுக்குரிய உத்தி. இயக்குனருக்குப் பாராட்டுகள் . ஆனால் ஒரு நிலையில் டைரக்டோரியல் ஷாட்ஸ் என்ற பெயரில் இந்த நாயக நடிகர் , அந்த நாயகி நடிகையோடு ஆடுவது போல எல்லாம் காட்சிகள் வைத்தது வெகுஜனப் பார்வையாளனைப் குழப்பும்.
பரணி கண்ணன் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது .ராபர்ட்டின் இசை ஓகே
கார்பரேட் மருத்துவர் என்று கதை சொன்னாலும் காட்டை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டி ராத்திரியில் ஆடும் ஒரு கார்ப்பரேட் சாமியாரை நினைவு படுத்தும் படி இருக்கிறது குரு சோமசுந்தரம் நடித்து இருக்கும் கார்ப்பரேட் மருத்துவர் கதாபாத்திரம். அவரது அடியாட்கள் வரும் காரைக் கூட கர்நாடகப் பதிவு எண் கொண்ட காராகக் காட்டி குறிப்பால் உணர்த்துகிறார்கள்
ஏற்காடு காடு மலைப், பகுதிகளை அழகாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் . நிதிஷ் வீரா கதாபாத்திரத்தின் காதலியாக வரும் துர்கா சிறப்பாக நடித்து உள்ளார் . கிளைமாக்ஸ் வரை ஈர்க்கிறார் .
படமாக்கல் முறை , மெதுவாக நகர்வு சில நடிகர்களின் நாடகத்தனமான காட்சிகள், இரைச்சல் மிக்க வசனம் பேசும் விதம் இவை எல்லாம் படத்துக்குப் பெரிய பின்னடைவு .
கார்ப்பரேட் சாமியார் ஆயுள் நீட்டிக்கும் மூலிகையை வைத்து விற்று கோடிக்கணக்கான ரூபாய் காசு பார்க்க முயல்கிறார் . அப்படி இருக்க நாயகன் அதை வைத்து என்ன செய்யவேண்டும்? நல்லவர்கள் சமூக அக்கறை உள்ளோரின் ஆயுளை நீட்டிக்கும் பணியை இலவசமாக செய்ய வேண்டும் .
ஆனால் ”அந்த மூலிகையை யாரும் பயன்படுத்தக் கூடாது . ஏனென்றால் யாருடைய ஆயுளையும் நீட்டிக்கக் கூடாது” என்கிறான். அப்புறம் எதுக்கு அந்த மூலிகையை பாதுகாக்க வேண்டும் ?
இப்படி சிறு பிள்ளைத்தனமான சித்தாந்த குளறுபடிகளும் பெரும் ,குறை
