சந்திரசுதா ஃபிலிம்ஸ் PG.ராமச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில் சைனு சாவக்காடன் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ஆர் கே வெள்ளி மேகம் (தப்பு எல்லாம் இல்லை . பேரே அதுதான்) திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
இந்த நிகழ்வில் விருகம்பாக்கம் MLA AMV.பிரபாகர் ராஜா சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.கே.அன்புச்செல்வன் இந்திய ஜனநாயக கட்சி துணைத் தலைவர் ஆனந்த முருகன் தயாரிப்பாளர் ARK.ராஜ ராஜா நடிகர்கள் காதல் சுகுமார்அப்புகுட்டி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.மேடையில் பேசினர்.
தயாரிப்பாளர் PG.ராமச்சந்திரன் பேசுகையில், ” நான் மலையாளியாக இருந்தாலும் தமிழ் பிடிக்கும் . அதான் தமிழில் படம் எடுத்து இருக்கேன்.நான் பாலக்காட்டில் பிறந்தவன். அங்கு தமிழர்கள்தான் அதிகம் . பின்னாடி மாநில எல்லை பிரிக்கும் போது, நாங்கள் கன்யாகுமரியை தமிழ்நாட்டுக்குக் கொடுத்துவிட்டு பாலக்கட்டை எடுத்துக் கொண்டோம்” என்றார்
தப்பு சார் . கன்னியாகுமரி பாலக்காடு இரண்டும் தமிழர் நிலப்பகுதிகள்தான் . கன்னியாகுமரியை அன்று தமிழ் நாட்டுக்கு என்று மீட்க முடிந்தது. ஆனால் நேருவை சரிகட்டி நீங்கள் பாலக்காட்டை பிடுங்கிக் கொண்டீர்கள் . இதுதான் உண்மை .

சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே. அன்புச்செல்வன் பேசுகையில், “கேரளாவில் இருந்து வந்து தமிழ்ப் படம் எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எந்த ஒரு படத்தையும் யாரும் தடை செய்வதற்கு இங்கு உரிமை இல்லை அப்படி தடை செய்தால் நான் வேடிக்கை பார்க்க மாட்டேன் தக்க நடவடிக்கை எடுப்பேன். ஆர்ட் டைரக்டர் யூனியன் திருவள்ளூர் அருகே யோகி பாபு நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது”என்றார் . நியாயமான விஷயம் .
எம் எல் ஏ AMV. பிரபாகர் ராஜா பேசுகையில், “திரைத் துறையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய பணிகள் ஏராளம். மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களும் திரைப்படத்துறையில் இருந்து தான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல நல்வழிகளை செய்யும் ஒரு ஊடகமாகும் ” என்றார் .
படத்தின் இயக்குனர் சைனு சாவக்காடன் பேசும்போது, ” நான் இந்தப் படத்துக்கு விளம்பர போஸ்டருடன் விஜய் சேதுபதியை சந்தித்து ஒரு போட்டோ எடுத்து அதை வைத்து விளம்பரம் செய்ய நினைத்து அவரது அலுவலகம் போனேன் ஆனால் யாரும் என்னை உள்ளே விடவில்லை. சந்திக்க முடியவில்லை. நாங்கள் தமிழ்ப் படம்தானே எடுத்து இருக்கோம்? மலையாளப் படமா எடுத்து இருக்கோம்?
நான் என்ன விஜய் சேதுபதியிடம் நாலு சென்ட் நிலம் கேட்கவா போனேன்? ஒரு போட்டோ கேட்கத்தானே போனேன். கொடுக்கக் கூடாதா? அப்புறம் எதற்கு விஜய் சேதுபதி பேட்டிகளில் எல்லாம் ‘ கஷ்டப்பட்ட காலத்தில் என்னை அவர் சந்திக்கவில்லை இவர் சந்திக்கவில்லை ‘என்று சொல்ல வேண்டும்? ” என்று சென்னையில் பிரசாத் ஸ்டுடியோவில் நின்று கொண்டு முழங்கினார் .

மேடையில் அதற்குப் பதிலாக, ” மலையாளப்படங்களில் எத்தனை தமிழர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறீர்கள்? காலகாலமாக தமிழ்ப் படங்களில் மலையாளிகளை கேவலமாக சித்தரிக்கிறீர்களே அது ஏன் ? உலகப் பெரும் நடிகரான சிவாஜி கணேசனையே நீங்கள் மலையாள நடிகர் சங்கத்து வாசலில் உட்கார வைத்து அவமானப் படுத்தியவர்கள்தானே? விஜய் சேதுபதி உங்களை அப்படி எதுவும் அவமனப்படுத்தினாரா? நீங்கள் போன உடனே உங்களுக்கு போட்டோ கொடுக்கவோ அல்லது உங்களை அவரைப் பார்க்க அனுமதிக்கவோ விஜய் சேதுபதியோ அவரது ஆட்களோ உங்கள் அடிமைகளா?
தமிழ் நாட்டுக்கு வர வேண்டிய பல்லாயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை அபகரித்துக் கொண்ட பிறகும் உங்களுக்கு இன்னும் நாலு சென்ட் நிலம் வேணுமா?
நீங்க தமிழ்ப் படம் எடுத்ததுக்கு உங்களுக்கு என்ன சிலையா வைக்கணும்? நீங்க என்ன வர்ற லாபத்தை தமிழ்நாட்டுக்கா கொடுக்கப் போறீங்க ?
விஜய் சேதுபதியை பார்க்க முடியல என்பதற்காக உங்களுக்கு இப்படி கோபம் வருகிறதே. நம் நாட்டை ஆண்ட வெள்ளைக்காரன் கூட நம் மக்கள் மீது இரக்கப்பட்டு கட்டிய முல்லைப் பெரியாறு அணையை – அது இன்னும் நூறு ஆண்டுகளுக்கும் மேல் பலமாக இருக்கும் என்று கேரளா தலைமை பொறியாளர் தாமஸ் என்பவரே சொன்ன பிறகும் , அவரை அடித்து விரட்டி விட்டு , அந்த அணையை இடிக்க இன்னும் இப்போதும் திட்டமிடுகிறீர்களே… உங்கள் மீது எங்களுக்கு எவ்வ்வ்வ்வளவு கோபம் வர வேண்டும்?
ஒழுங்காக தமிழில் நாலு வார்த்தை கூட பேச வக்கில்லாத நீங்கள் இப்படி சென்னையில் நின்று கொண்டு பொறாமையோடும் பொச்சரிப்போடும் திமிரோடும் ஒரு தமிழ் நடிகரை உங்கள் சுயநல நோக்கம் நிறைவேறவில்லை என்பதற்காக ஆணவத்தோடு விமர்சிக்கிறீர்களே…
நியாயத்துக்காகக் கூட ஒரு தமிழன்கேரளாவில் ஒரு மலையாளிகள் சபையில் இப்படி பேச முடியுமா? பேசி விட்டு பிரச்னை இல்லாமல் வர முடியுமா? ஆனால் நீங்கள் ஒரு சிறு நகக் கீறல் கூட இல்லாமல் இப்போது திரும்பிப் போகிறீர்களே. ? இதில் யார் நல்லவர்கள்? விஜய் சேதுபதியை விமர்சிக்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கு? என்ன தைரியம் இது? “
— என்று மேடையில் இருந்த – மேலே பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருக்கிற ஒருவருமே .. ஒருத்தர் கூட .. ஒரு வார்த்தை கூட .. ஒரு துளி கூட … ஒரு துணுக்குக் கூட .. ஓர் இணுக்குக் கூடக் கேட்கவில்லை

“ஹக்காங்… ஹக்காங்.. ஹக்காங்.. விஜய் சேதுபதி பெரிய நடிகருங்க… . அவர் அப்படி செய்யக் கூடியவர் இல்லீங்க . அவரை நீங்கள் முறைப்படி அணுகி இருந்தால் அவர் உதவி செய்து இருப்பாருங்க.. . அவரை அப்படி எல்லாம் பேசாதீங்க …. சரிங்களா செல்லக் குட்டி … ? ஹக்காங்… ஹக்காங்.. ஹக்காங்.. ” என்று சப்பைக்கட்டுதான் கட்டினார்கள்.
எப்படி நம்ம ஆட்கள்? ?