க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்க , லார்க் ஸ்டுடியோ சார்பில் கே.குமார் தயாரிக்க, சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சிவதா, ரேவதி ஷர்மா ,சமுத்திரக்கனி, ரோஷினி ஹரிப்பிரியன், மைம் கோபி, ஆர் வி உதயகுமார்மற்றும் வடிவுக்கரசி நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி துரை செந்தில்குமார் இயக்கி இருக்கும் படம்.
கோம்பை நகரில் உள்ள அம்மன் கோவிலில் பாரம்பரியமாக மரியாதை பெறும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி செல்லாயி ( வடிவுக்கரசி) கோவில் உடமைகளுக்கும் பொறுப்பானவர்.
சிறு வயது முதலான நண்பர்கள் ஆதியும் (சசிகுமார்) கருணாகரனும் (உன்னி முகுந்தன்) .
ஆதி சுய உழைப்பால் முன்னேறியவன் . கருணாகரன் ஒரு காலத்தில் ஓகோ என்று இருந்த குடும்பத்தில் இருந்து இப்போது பலவீனமாகிக் கொண்டு இருக்கிறோமோ என்ற ஏக்கம் உள்ளவன். செல்லாயி குடும்பத்தைச் சேர்ந்தவன்
அப்பா அம்மா யாரென்று அறியாத ஒரு சிறுவனுக்கு சின்ன வயது முதலே கருணாகரன் அடைக்கலம் கொடுத்து வளர்க்க, சொக்கன் என்ற அவன் (சூரி) கருணாகரனின் தீவிர விசுவாசியாக இருக்கிறான் . அவனுக்கும் ஏழைப்பெண் அங்கயற்கண்ணிக்கும் ( ரோஷினி ஹரிப்பிரியன்) காதல் .
கோவிலுக்குச் சொந்தமான பல நூறு கோடி நிலத்தை கபளீகரம் செய்ய திட்டமிடுகிறார் அமைச்சர் தங்கபாண்டி ( ஆர் வி உதயகுமார்) , அந்தப் பணியை தன் உறவினரான தியேட்டர்காரன் நாகராஜ் (மைம் கோபி) என்பவனிடம் ஒப்படைக்கிறார். நேர்மையாக இருக்க விரும்பும் போலீஸ் அதிகாரியையும் ( சமுத்திரக்கனி ) அதற்கு வற்புறுத்தி துணை போக வைக்கிறார் அமைச்சர் .
கருணாகரனின் பண ஏக்கம் இவர்களுக்குத் தெரிய வருகிறது . அதே நேரம் செல்லாயி , ஆதி இவர்களை மீறி இவர்களின் நேர்மையை மீறி, நினைத்ததை செய்வது கடினம் என்பதும் புரிகிறது
எனவே ஆதி மேல் கருணாகரனுக்கு உள்ள நட்பை உடைக்கிறது அமைச்சர் குழாம். . துரோகியான உன்னி முகுந்தன் ஆதி குடும்பத்துக்கு பல இழப்புகளை ஏற்படுத்த சொக்கனுக்கு நியாயத்தின் பக்கம் நிற்பதா இல்லை விசுவாசத்தின் பக்கம் நிற்பதா என்பதில் குழப்பம் .
அந்த குழப்பம் நீடிப்பதால் மேற்கொண்டு நடக்கும் சம்பவங்களும் அதன் விளைவுகளும் சொக்கனின் மன நிலையுமே இந்தப் படம்
தமிழ் சினிமா மென்று சலித்துத் துப்பிய கதை .
பலமுறை பார்த்து அலுத்த திரைக்கதை . ஆனால் சில சூழல்கள் அபாரம்.
கேட்டுச் சலித்த வசனங்கள் .
ஆனால் நடிக நடிகையர் தேர்வு அவர்கள் நடிப்பு , காட்சி அமைப்பு , படமாக்கல் இயக்கம் இவற்றால் படம் போரடிக்காமல் போகிறது .
ஆதி குழந்தையோடு கருணாகரனைப் பார்க்கப் போகும் காட்சியும் அதன் விளைவும்…. அது படமாக்கப்பட்ட விதம், விவரணை (டீட்டெயிலிங்) சூரி சசிகுமார் ஆகியோரின் நடிப்பு அற்புதம் . இயக்குனர் துரை செந்தில் குமார் உட்பட எல்லோரும் அசத்தி இருக்கும் காட்சி அது.
யுவன் சங்கர் ராஜாவின் இசையும் பிரதீப் ராகவின் படத் தொகுப்பும் made for each other லெவலில் இருக்கிறது . பிரம்மதம்
“சொக்கா… நான் மட்டும் என்ன தொக்கா? என்று காட்சி ராஜாங்கம் செய்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன்
சூரிக்கு கனமான கதாபாத்திரம் . ஒரு காமெடி நடிகர் ஆக்ஷன் ஹீரோவாக ஆவது, அதுவும் காமெடியின் துணை இல்லாமலே ஆக்ஷன் ஹீரோவாக ஆவது சாதாரண விஷயம் இல்லை. என்ன செய்தாலும் ரசிகர்கள் சிரிக்கத் தயாராக இருப்பார்கள் . ஆனால் அந்த ரிஸ்க்கை அனாயாசமாகக் கடந்து இருக்கிறார் சூரி . விடுதலையை விட இதில் வீச்சு அதிகம். சிறப்பு
இந்த கேரக்டருக்கு என்றே பிறந்த சிங்கம் மாதிரி ஜொலிக்கிறார் சசிகுமார் அப்படி ஒரு பொருத்தம் . அவருக்கு என்று இருக்கும் இமேஜ் ஒரு சிம்மாசனமாகவும் அதில் அவரது பங்களிப்பு மகுடமாகவும் ஜொலிக்கிறது .
ஆனால் எதிர்பாராத பிரம்மிப்பு தந்தவர் ஆதியின் மனைவி தமிழ்ச் செல்வியாக வரும் ஷிவதா .விதிர்விதிர்க்க வைக்கும் நடிப்பு .
சுய உழைப்பால் முன்னேறிய மனிதனின் மனைவியாக , யார் மீதும் பொறாமை இன்றி நேசம் காட்டி , எவனுக்குச் சோறு போட்ட கையின் ஈரம் காயவில்லையோ அதற்குள் அவனே துரோகியாக மாறும் நிலை கண்டு பொங்கி உடையும் பெண்ணாக நடிப்பில் சிகரம் தொடுகிறார்.
சபரிமலை ஐயப்பனை பக்தி சிரத்தையாக வணங்குவது தமிழர்கள்தான். அங்கே கஞ்சா விற்பது சாராயம் விற்பது பெண்களைக் கடத்துவது எல்லாம் மலையாளிகள்தான் . ஆனால் சபரிமலையில் தமிழர்கள் மாலை போட்டுக் கொண்டு சிறுமிகளைக் கற்பழிப்பார்கள், கடத்தி பாலியல் விற்பார்கள் என்று கூசாமல் வேசித்தனமாகப் பொய் சொன்ன மாளிகப்புரம் என்ற படத்தின் ஹீரோ உன்னி முகுந்தன் . அவருக்கு கருணாகரன் கேரக்டரைக் கொடுத்து இருக்கிறார்கள் .
அவர் இந்தக் கதை , மக்கள் மொழிக்குச் சற்றும் பொருந்தாமல் மலையாள நாற்றம் அடிக்கும் தமிழில் பேசுகிறார் . பொங்கல் சோற்றில் கிடக்கும் கரப்பான் பூச்சி மாதிரி இருக்கு அவரது வசன உச்சரிப்பு. தமிழ்நாட்டில் அந்த கேரக்டருக்கு ஆளே கிடையாதா?.
தமிழ் சினிமா படைப்பாளிகள் கொஞ்சமும் மான ரோஷம் இல்லாமல் இப்படி மலையாளச் சேவகம் செய்யும் அடிமை மன நிலையில் இருந்து எப்போதான் வெளியே வருவார்களோ . கேவலம் !
ரோஷினி ஹரி பிரியனும் , சமுத்திரக்கனியும் மைம் கோபியும் உறுத்தாமல் கடக்கிறார்கள் .
இயக்குனர் ஆர் வி உதயகுமார் இதுவரை நடித்த படங்களிலேயே இதில்தான் சிறப்பாக நடித்திருக்கிறார் . பாராட்டு இயக்குனருக்கே உரித்தாகும்.
படத்தின் மிகப்பெரிய பிரச்னை… ஓவராக நெஞ்சை நக்குவதுதான்.
விசுவாசம் என்ற பெயரில் சூரி நடந்து கொள்வது முட்டாள்தனமாகவும் நாடகமாகவும் இருக்கிறது .
ஒரு காலத்தில் சோறு போட்டவன் என்பதற்காக அவன் செய்யும் அநியாயங்களை எல்லாம் ஒருவன் கடைசி வரையில் பொறுத்துக் கொள்கிறான் என்பது ஒரு துணைக் கதாபாத்திரத்துக்கு ஒகே . ஆனால் ஒரு மக்கள் சினிமாவில் வரும் நாயகன் கதாபாத்திரத்துக்கு அது சரி இல்லை .
இல்லை.. இல்லை … அதுதான் கதை என்றால் தப்பில்லை . அது படைப்பாளியின் உரிமை . ஆனால் ஒரு நாயகன் கதாபாத்திரம் எந்த எல்லையில் எந்த நிகழ்வில் எந்த கணத்தில் எந்த கனத்தில் நியாயத்துக்காக அந்த விசுவாசத்தைத் தூக்கிப் போட வேண்டும் என்பதில் ஓர் அளவு எல்லை நியாய தர்மம் இருக்கிறது .
எம் ஜி ஆர் நடித்த நான் ஆணையிட்டால் படம் பாருங்கள் அந்த விசுவாசத்தின் எல்லை புரியும் .
ஆனால் இந்தப் படத்தில் அந்த எல்லை குறித்த புரிதல் இல்லை. சோறு போட்டு வளர்த்தவன் அயோக்கியன் ஆன பின்னும் அவனுக்கு உண்மையாக இருப்பதுதான் விசுவாசம் என்றால் ,
இன்னொருவன் பொண்டாட்டி போட்ட கறிச் சோறு வயிற்றில் ஜீரணம் ஆவதற்குள் அவள் தலையில் இடி விழுந்து விட , அப்போது அவள் தரப்பில் நிற்பதுதானே விசுவாசம்?. அவளுக்கு துணை போகாதது விசுவாசத்துக்கு எதிரான செயல் இல்லையா?. ஒரு வேலை சூரி கேரக்டர் விசுவாசத்தில் கூட எலைட் டாஸ்மாக் மாதிரி எலைட் விசுவாசம்தான் பார்க்குமா?
இப்படி ஒரு கேரக்டரை மகிமைப்படுத்துவதன் (glorification) மூலம் இந்தப் படத்துக்கு எழுதியவர்கள் சமூகத்துக்கு என்ன சொல்ல வருகிறார்கள் ? கையில் காசு இருக்கா? ஒரு சிறு வயது அனாதையைப் பிடி . சோறு போட்டு வளர். அவனை நீயும் செய்யும் அயோக்கியத்தனத்துக்கு எல்லாம் துணையாக வைத்துக் கொள். அவன் மூலம் நீ தப்பிக்கலாம் . அவனையும் ‘ஆகா அவன் விசுவிசுவிசுவிசுவாஆஆஆஆசி ஈஈஈஈஈ.. ‘ என்று சமூகம் கைதட்டும்… என்பதையா ? நான்சென்ஸ்!
உண்மையில் சசிகுமார் குழந்தையோடு வரும் காட்சிக்கு அடுத்தபடியாகவே சூரி கேரக்டர் மாறி இருந்து, அதன் பிறகு இந்தப் படத்தில்,வரும் சம்பவங்கள் எல்லாம் நடக்க அதற்கு ஏற்ப சூரி பொங்கி இருந்தால் இந்தப் படம் எப்படி ஒரு உணர்வெழுச்சியைக் கொடுத்து இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள் . தீப்பொறி பறந்திருக்கும். அதுதான் நியாயமாகவும் கமர்ஷியலாகவும் சிறப்பாக இருந்திருக்கும் . வித்தியாசமாகச் செய்கிறேன் என்ற பெயரில் விவகாரமாகவோ விகாரமாகவோ எழுதக் கூடாது
இப்போது சூரி கதாபாத்திரத்தின் விசுவாசம் மீது நேசம் வரவில்லை. ”நீயும் செத்துரு நாய…” என்ற கோபம்தான் வருகிறது .
சரி போகட்டும் என்றால் அதன் பிறகும் அயோக்கியன் செய்யும் எல்லாச் செயல்களுக்கும் துணை நிற்பதோடு எல்லாம் நடந்து படம் முடிந்து நாம் கிளம்பி வீடு வரும் போதும் வழியெலாம் விசுவாசம் விசுவாசம் என்று கூவிக் கொண்டு கூடவே வருகிறான் சொக்கன்
நல்லவேளை.. இயக்குனர் விசு இப்போது உயிரோடு இல்லை.
இதையெல்லாம் மீறி இந்தப் படத்துக்கு ஒருவேளை மக்கள் வரவேற்பு கிடைத்தால் அதற்கு சில காட்சிகள் மட்டும் சரியாக எடுக்கப்பட்டதும் , நடிக நடிகையரின் பங்களிப்பும்…
கடந்த அஞ்சு மாசமாக தமிழில் கொஞ்சமும் உருப்படி இல்லாத படங்களை எடுத்து ரசிகர்களைக் கதற விட்ட மற்ற படங்களின் படைப்பாளிகளும்தான் காரணம் .
இப்படி ஒரு படத்தைக் கூட அஞ்சு மாசமா ஒருத்தரும் தரல என்று அர்த்தம் .
அவர்களுக்கு எல்லாம் இந்தப் படக் குழு நெற்றிப் புடைப்பு நிலத்தில் பட விழுந்து வணங்கி நன்றி சொல்ல வேண்டும்
கருடன்… பூனை, மதில் மேல் !