100 படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதியதோடு ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் , விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள், நானே ராஜா நானே மந்திரி , கார்த்திக் நடித்த கேள்வியும் நானே பதிலும் நானே , உள்ளம் கவர் கள்வன் ஆகிய படங்களை தயாரித்த – மறைந்த தூயவனின் மகனும் திரைப்படக்கல்லூரி மாணவருமான பாபு தூயவன் இயக்கி இருக்கும் படம் கதம் கதம் .
“பொதுவாக படங்களில் மோசமான போலீஸ் அதிகாரியோடு ஹீரோ மோதுகிற கதையும், நல்ல போலீஸ் அதிகாரியோடு வில்லன் மோதுகிற கதையும்தான் பார்த்து இருப்பீர்கள். ஆனால் இந்தப் படம் ஒரு நல்ல போலீஸ் அதிகாரிக்கும் மோசமான போலீஸ் அதிகாரிக்கும் நடக்கும் போராட்டம் . இதுவரை தமிழ் சினிமாவில் இந்தக் கதை வந்ததில்லை என்றே நினைக்கிறேன் ” என்று படத்துக்கு அறிமுகம் தருகிறார் இயக்குனர்.
நல்ல போலீஸ் அதிகாரியாக நந்தாவும் , அடாவடி போலீஸ் அதிகாரியாக சதுரங்க வேட்டை புகழ் நட்ராஜும் நடித்து கலக்கி இருப்பது பாடல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட டிரைலர் மற்றும் பாடல்களில் தெரிந்தது . தாஜ்நூர் இசையில் பாடல்கள் ஈர்க்கும்படியாகவே உள்ளன . நந்தாவுக்கு ஜோடியான அம்புலி படத்தில் நடித்த சனம் ஷெட்டியும் நட்ராஜுக்கு ஜோடியாக அரும்பு மீசை குறும்பு பார்வை படத்தில் நடித்த ஷாரிகாவும் நடித்து இருக்கிறார்கள்.
அபோகலிப்டா , சூப்பர் மேன் ரிட்டர்ன்ஸ், ஃ பண்டாஸ்டிக்ஃ போர் , கேப்டன் அமெரிக்கா, இம்மார்டல்ஸ் படங்களை உருவாக்கிய பானாவிஷன் என்ற கேமராவை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படத் தொகுப்பாளர் முத்துலட்சுமி வரதன் கமல் யூனிட்டில் பணியாற்றியவர் .
படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் வட போச்சே என்ற ஒரு பாடலை பாடியுள்ளார் . (உத்தமான உப தொழில்!) . இது என்ன மயக்கம் நேர பாடலை கிரீன் மேட் தொழில் நுட்பத்தில் படமாக்கி இருக்கிறார்கள் .(ஒரு கோடி செலவு பண்ணி செட் போட்டு எடுத்தோம்னு பொய் சொல்லிக்கத் சொல்லத் தெரியாம.. இப்படியா ஒத்துக்கறது ?)
படத்துக்கு இரண்டு வசனகர்த்தாக்கள் . இதில் ராதாகிருஷ்ணன் என்பவர் நல்ல போலீஸ் அதிகாரியான நந்தா கேரக்டருக்கான வசனங்களையும் நிமிஷ் என்பவர் கேட்ட போலீஸ் அதிகாரியான நடராஜ் கேரக்டருக்கு பொருத்தமான வசனங்களையும் எழுதி இருக்கிறார்களாம். இது புதுசு .
