ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, கௌதம் கார்த்திக், சனா ஆகியோர் நடிக்க, ( எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் பெயர் ஞாபகம் இருக்கா?)
விஜய் தொலைக்காட்சியில் பல பரபரப்பான வெற்றிகரமான நிகழ்ச்சிகளை இயக்கியவரும் , முருகதாஸிடம் உதவியாளராக இருந்தவருமான ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள படம் .
அறிமுக இசையமைப்பாளர் விக்ரம் மற்றும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார்.
படத்தின் முன்னோட்டமும் இரண்டு பாடல்களில் சில பகுதிகளும் திரையிடப் பட்டன .
அழகியலான காட்சி அமைப்புகள் , காதல், செண்டிமெண்ட், நம்பிக்கை, துரோகம் , இனிமையான பாட்டு, அதிரடியான ஃபைட்டு எல்லாம் கலந்த முன்னோட்டம் ஈர்ப்பாக இருந்தது .

‘பலம்கறது அடுத்தவனை அடிச்சு முன்னேர்றது இல்ல . எதுவுமே இல்லாத கீழ் நிலையில் இருந்து முன்னேறி உயர்ந்த இடத்துக்குப் போறதுதான் பலம் ‘ என்ற ரீதியில்,
முன்னோட்டத்தில் வரும் வசனம் , இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமியை தனித்துக் கவனிக்க் வைக்கிறது . படத்தின் மீதான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது .
பாடல் துளிகளும் சிறப்பு. முழுக்க முழுக்க வட சென்னைப் பையனாக மாறித் தெரிகிறார் ஊட்டி சாக்லேட் பாயான கௌதம் கார்த்திக் . சனா ஓங்கு தாங்காக பளீர் சிரிப்புடன் பளிச்சிடுகிறார் .
குறைந்த பட்சம் அசத்தலான் என்டர்டைனராக படம் இருக்கும் என்பது தெரிகிறது .
நிகழ்ச்சியை துவக்கி வைத்துப் பேசிய இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் “இயக்குனர் ராஜ்குமார் என்னிடம் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் எனக்காக வந்து என் படங்களுக்கு உதவி செய்பவர்.
ஒரு முதல் பட இயக்குனரின் படத்தை நான்தான் தயாரிப்பேன் என்று இரண்டு பெரிய தயாரிப்பாளர்கள் போட்டி போடுவது நடக்கிற விசயமா ?
ஆனால் ராஜ்குமார் இயக்கும் முதல் படத்தை தயாரிக்க இரண்டு பெரிய தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு நின்றார்கள் . ஆனால் அந்த வாய்ப்பு எங்களுக்கு அமைந்தது.
சிலர் உதவி இயக்குனர் ஆவதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள், ஒரு சிலர் இயக்குனர் ஆவதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள். ராஜ்குமார் இரண்டுக்குமே ரொம்ப கஷ்டப்பட்டார்.
தவிர படப் பிடிப்புக்காக புதுப்புது இடங்களாகத் தேடித்தேடி, திரையில் தான் நினைத்ததைக் கொண்டு வர ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து வந்து இயக்குனராகி இருக்கும் ராஜ்குமார் வெற்றி பெற்றால்தான் அவரை போல முயற்சி செய்து வரும் பலருக்கும் நம்பிக்கை வரும்.
நாயகன் கௌதம் கார்த்திக் படத்துக்காக தன் நிறத்தை மாற்றி, பாடி லாங்குவேஜ் மாற்றி நடித்துள்ளார். சிம்ரன் நடித்த முதல் படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறேன்,
அதை வைத்து ப் பார்க்கையில் இந்தப் படத்தின் நாயகி சனா, சிம்ரன் விட்டுச் சென்ற இடத்தைப் பிடிப்பார் என நம்புகிறேன். நல்ல படங்களை கொடுக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வரும்,
ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்கு தமிழ் சினிமா சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் ஏஆர் முருகதாஸ்.
நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் (இவர் தவிர ஆர் ஹெச் கார்த்திக் என்பவர் இரண்டு பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்),
”வழக்கமா நடக்கிற மாதிரி கதை கேட்டு நான் இந்த படத்துக்கு ஒப்பந்தம் ஆகலை. ஏன்னா இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி என் நண்பர். படத்தை போட்டுக் காட்டினார்.
படத்துக்கு பின்னணி இசை அமைக்க சொன்னார். கூடவே படத்தில் இரண்டு பாடல்களுக்கும் இசையமைத்தேன், அவை இரண்டும் படத்தில் அமைந்திருப்பது மகிழ்ச்சி.
படத்தில் வரும் பயணத்தை பின்னணி இசையின் மூலம் நகர்த்தியிருக்கிறேன். பர்மிய மொழிப் பாடல் வரிகளையும் உபயோகப்படுத்தி இருக்கிறோம் . உங்களுக்கு வித்தியசனமான் அனுபவமாக் இருக்கும் “என்றார்
நாயகன் கௌதம் கார்த்திக் தன் பேச்சில் ” நான் ரொம்ப லக்கி . ஏன்னா ‘ராஜ்குமார் சாருக்காக ரெண்டு பெரிய தயாரிப்பாளர்கள் போட்டி போட்டாங்க .
அதை மீறி எங்களுக்கு படம் பண்ண வந்தார்’னு முருகதாஸ் சாரே சொல்றார் . அதுவும் இது முருகதாஸ் சாரும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் தயாரிக்கிற படம் .
இவ்வளவு பெரிய படத்துக்கு அவங்க நினைச்சு இருந்தா எவ்வளவு பெரிய ஹீரோவைக் கூட கொண்டு வர முடியும் .
ஆனா இந்தப் படத்துக்கு நான்தான் ஹீரோன்னு ராஜ்குமார் சார், முருகதாஸ் சார் ரெண்டு பேருமே உறுதியா இருந்தாங்க .
அது என் லக். ஆனா அவங்க நம்பிக்கைக்கு ஏற்ற மாதிரி உழைச்சு இருக்கேன் . ராஜ்குமார் சார்ரொம்ப அன்பானபர், தெளிவான இயக்குனர்
ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இரட்டையர்கள் . இரட்டையர்கள் என்றாலே ஒரு மேஜிக் மாதிரி தான். அவர்களுடன் இந்த படத்தில் பணியாற்றியது ஒரு புது அனுபவம்.
குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதுக்கு எனக்கு எப்பவுமே பயம். ஆனால் இந்த படத்தில் ரொம்ப கூலான சதீஷ் மாஸ்டர் தயவால் குத்துப் பாட்டுக்கும் ஆடியிருக்கிறேன்.
நல்ல பாடல்களை கொடுத்துள்ளார் விஷால் சந்திரசேகர் . என்றார்
நிறைவாகப் பேசிய இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி
“இங்க எல்லோரும் என்னைப் பற்றி அதிகமா புகழும் போது எனக்கு பயமும், அதிக பொறுப்பும் வந்திருக்கிறது.
இங்கு என்னை மாதிரி நிறைய திறமையான உதவி இயக்குனர்கள் படம் இயக்கும் முயற்சியில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களில் வாய்ப்பு கிடைச்சவங்க, வாய்ப்பு கிடைக்காதவங்கன்னு ரெண்டு பிரிவு மட்டுமே இருக்கு என்பதுதான் உண்மை. எனக்கு அப்படி ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார் முருகதாஸ் சார்.
அவருக்கு உதவி இயக்குனர்கள்தாம் குடும்பம். உதவி இயக்குனர்களுக்கு என்ன வேணும்னாலும் முதல்ல வந்து நிற்பவர். அவரிடம் வேலை செய்தால் படம் இயக்கி விடலாம்.
அவர் படம் தயாரிக்கிறதுக்கு முக்கிய காரணம் நிறைய திறமையானவர்களை அறிமுகப்படுத்துவதற்குதான். கௌதம் கார்த்திக் தன் எல்லைகளில் இருந்து வெளியே வந்து ரொம்ப மெனக்கெட்டு நடித்திருக்கிறார்.
ஊட்டி கான்வெண்ட்ல படிச்சவர், வடசென்னை இளைஞராக கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்.
குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்தாலும், படத்தின் உண்மைத் தன்மைக்காக கடுமையாக மெனக்கெட்டிருக்கிறோம்.
படத்தின் தலைப்பு பாடலான யாத்ரீகா என்ற பாடலை நா. முத்துகுமார் எழுதிக் கொடுத்தார். இப்போது அது நெகிழ்வான விசயமாக தங்கி விட்டது” என்றார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.
ரங்கூன் வெல்லட்டும் !