ஒன்று கூடி சிலிர்த்த ‘ஒரு தலை ராகம்’

1980ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் வெளியாகி ஒவ்வொரு உள்ளத்தையும் உலுக்கிய மாபெரும் காவியம் ஒரு தலை ராகம்.

t.rajenthar
உதயமான சகலகலா வல்லவன்

உலகின் எந்த நாட்டு சினிமா உலகிலும் இல்லாத அளவு….  எடுத்த எடுப்பிலேயே கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் … பின்னர் அவற்றோடு நடிப்பு, ஒளிப்பதிவு தயாரிப்பு என்று பல்வேறு துறைகளில் ஈடுபட்டு… வெகு ஜன மக்களின் பேராதரவையும் பெற்ற  டி.ராஜேந்தர் என்ற சகலகலாவல்லவனை தந்த படம் அது .

டூயட் பாடல்களே இல்லாத – அனைத்துப் பாடல்களையும் ஆண்களே பாடிய– முக்கியமாகக் கதாநாயகன் கதாநயகி இருவரின் நிழல்கள் கூட தொட்டுக் கொள்ளாத — ஆனால் உண்மையான தூய்மையான காதல் படம் அது.  நாயகன் இறந்த பிறகுதான் அவரை தொடுவார் நாயகி

அந்தப் படத்தில்  நடித்த ஷங்கர் ஒருதலை ராகம் ஷங்கர் என்ற பெயரிலேயே இன்றும் அறியப்படுகிறார் .  120க்கும் மேற்பட்ட தமிழ் மலையாள படங்களில் நடித்திருக்கும் சங்கர் முன்பே மலையாளத்தில் வைரஸ், கேரளோத்ஸவம் 2009 ஆகிய படங்களை இயக்கி இருக்கும் நிலையில் , இப்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் ‘மணல் நகரம்’ படத்தை இயக்கியுள்ளார்.முழுக்க முழுக்க துயாயில் உருவாகியுள்ள இப்படத்தை டிஜெஎம் அசோசியேட்ஸ் சார்பில் எம்.ஐ.வசந்த்குமார் தயாரித்துள்ளார். ஆர்.வேலுமணியின் வசனத்தில் கௌதம் கிருஷ்ணா, ப்ரஜின், தனிஷ்கா, வருணா ஷெட்டி இவர்களுடன் ஒருதலைராகம் சங்கரும் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரெனில் கௌதம் இசையமைக்க,  ஜெ.ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார் .

மேற்படு மணல் நகரம் படத்தின் பாடல் வெளியீட்டுக்கு ஒரு தலைராகம் படத்தில் நடித்த பலரையும் அழைத்த சங்கர் ஒவ்வொருவரிடமும் சம்மந்தப்பட்ட நபரை மட்டுமே அழைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்க , நிகழ்ச்சிக்கு வந்தவ அந்த பிரமுகர்களுக்கு ஆச்சர்ய அதிசய அழகிய அதிர்ச்சி . 

ஒரு தலைராகம் படத்தில் நாயகன் ராஜாவாக நடித்த சங்கருடன் டி.ராஜேந்தர், ஒளிப்பதிவாளர் (ராபர்ட்) ராஜசேகரன் , நடிகர் தியாகு ,ஹைதராபாத்தில் இருந்து நாயகி சுபத்ராவாக நடித்த ரூபா,,திருவனந்தபுரத்தில்மிருந்து தும்பு கைலாஷ்,  ஆகியோர் ஒன்று கூட …எஸ் பாஸ் !

 

reunion of oruthalairagam
சிலிர்ப்பூட்டும் சங்கமம்

முப்ப்ப்பப்பப்ப்ப்ப்பத்த்த்த்தத்த்த்தத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு…. ஒரு தலைராகம் குழுவின் மறு ஒன்றிணைவு (ரீயூனியன்) நடந்தது .

இவர்களில் சங்கர், ரூபா இருவரும் அடிக்கடி தொலைபேசியில்  பேசிக்கொள்வது உண்டாம். ஒரு தலைராகம் படத்துக்குப் பிறகு  ரூபாவும்   ராஜேந்தரும் பேசியதே இல்லையாம்.  டி.ஆரின்  மனைவியும், படத்தில் ரூபாவின் தோழியாக நடித்தவருமான உஷாவிடம்தான் எப்போதாவது  போனில் பேசுவாராம். மற்றவர்கள் 34 வருடங்களுக்குப் பிறகுதான் நேரில் சந்தித்து இருக்கிறார்கள்.

மேடையில் ஏறியபோது டி.ஆரைப் பார்த்த ரூபா, அவருடன் கைகுலுக்க அருகில் சென்றார். ஆனால் ராஜேந்தர் தனது வழக்கப்படி ,ரூபாவை நோக்கி கரம் குவித்து வணக்கம் சொன்னார்.

மணல் நகரம் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் திரையிடப்பட்ட பிறகு, படத்தின் பாடல்களை டி.ராஜேந்தர் வெளியிட ரூபா பெற்றுக் கொள்ள … அதன் பிறகு மணல் நகரம் விழா,  முழுக்க ஒரு தலைராகத்தின்  மலரும் நினைவுகள் விழாவாகவே மாறிப் போனது.

 

re unipn of oruthalairagam
மீட்டும் ராக நினைவுகளில்

சங்கர் பேசும்போது ”நான்’ஒருதலை ராகம்’ படத்தில் அறிமுகமாகி 34 ஆண்டுகள் ஆகின்றன. இன்னமும் நான் ‘ஒருதலை ராகம்’சங்கர் தான். அந்தப்படத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது. அது என்னைச் சினிமாவுக்கு நாயகனாக அறிமுகம் செய்த படம். அந்தப் பெயரை வைத்துக் கொண்டுதான் இத்தனை காலம் திரையுலகில் இருக்கிறேன். நான் அன்று  படத்தில் ரூபாவிடம் ஒரு வார்த்க்தை பேசியிருந்தால்அந்த  படமே இல்லை” என்றார்.

ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் நடிகருமான (ராபர்ட்) ராஜசேகர் பேசும்போது..டி.ஆர் பக்கம் திரும்பி, ‘அப்போ உன்னை ‘ராஜேந்திரன்’னுதான் கூப்பிடுவேன். இப்பவும் அப்படியே கூப்பிடலாமா?’ என்று கேட்க  மலர்ந்த டி.ராஜேந்தர் “‘நான் எவ்வளவுதான் வளர்ந்து இருந்தாலும், உனக்கு எப்பவுமே நான் ராஜேந்திரன்தான். பழசை மறக்கிற ஆள் நான் கிடையாது’ என்று சொல்ல , அரங்கம் அதிர்ந்தது

தொடர்ந்து பேசிய ராஜசேகர் ” இன்று எங்களை இணைத்து வைத்த சங்கருக்கு நன்றி.  ‘ஒருதலை ராகம்’ படம் ஒரு சரித்திரம் . அப்படி ஒரு படம் அதற்கு முன்னும்  வர வில்லை.அதற்குப் பின் இனியும்  வர முடியாது. அதன் வித்து ராஜேந்தர் .விதைத்தது.  நான் சந்தித்த ஜினியஸ்களில் ராஜேந்தர் ஒருவர். ஒருதலை ராகம்’ படத்தில் 70 பாடல்கள் போட்டுக் காட்டினார். ஆனால் படத்தில் 7 பாடல்கள் தான் வரும். படத்தில் ரூபா கண்ணாலேயே நடித்து இருப்பார். . தும்பு கைலாஷ் கேரக்டரின் பாதிப்பு  அவரது ஜோல்னாபை,கண்ணாடி இவற்றின் பாதிப்பு அப்போது பலருக்கும் இருந்தது.”என்றார்.

 

t.r and roopaa
நிஜ ராஜாவும் நிழல் சுபத்ராவும்

தியாகு வந்த போதே நெகிழ்ந்தார் ”எனக்கு அழுகையாக வருகிறது ”என்றவர் தொடர முடியாமல் திணறி நிறுத்தினார். ”நண்பா ராஜா” என்று  ராஜேந்தரை அழைத்தவர்… நினைவுகளின் அழுத்தத்தில் இருந்த ராஜேந்தரை பார்த்து “என்னை பாரு “என்றார் பெருமையுடன். தொடர்ந்து பேசியவர் ”இவன் ராஜா.  எங்கள் பக்கத்து வீட்டுக்காரன்.  ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தோம்.  பள்ளியில் நாலாம் வகுப்பு படித்த போதே போர்வையை கட்டி நாடகம் போட்டோம். ‘ஒருதலை ராகம்’படத்தை மறக்க முடியாது. அதை வைத்துதான் 34 ஆண்டுகளாக  என் சினிமா வண்டி ஓடுகிறது. .” என்றார்..

தும்பு கைலாஷ் பேசும் போது.“”ஒருதலை ராகம்’படத்தை வைத்து 90 படங்கள் நடித்துவிட்டேன். நான் இப்போது திருவனந்தபுரத்தில் இருக்கிறேன். இன்று எங்களை ஒன்றாக  இணைத்து வைத்த சங்கருக்கு நன்றி.இப்போது என்னால் பேசமுடியவில்லை.  கொஞ்ச காலம் முன் எனக்கு முதல் ஹார்ட் அட்டாக் வந்தது பிழைத்து விட்டேன். இன்றைக்கு 2 வது ஹார்ட் அட்டாக்  வந்தது போல இருக்கிறது.ஆனால் சந்தோஷத்தில்  உறைந்து போய் நிற்கிறேன். .  “என்றார்.

ரூபா பேசும் போது ஒருதலை ராகம் படப்பிடிப்பில் ஒவ்வொரு நடிகருக்கும் ராஜேந்தர்  எப்படி நடித்துக் காண்பித்தார்என்பதையும்  தனது காட்சி படமாகும்போது தன் வாயிலேயே ரீ-ரெக்கார்டிங் வாசித்து நடிக்க வைத்த  டி.ஆரின் திறமையைவியந்து பேசினார். 

”இப்போது என்ன பேசுவது என்றே புரியவில்லை. நெகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்று நடந்தது போல இருக்கிறது. ‘ஒருதலை ராகம்’ படத்தில் நடித்தது. காலேஜ் பிக்னிக் போல போய் வந்தோம். ஒவ்வொரு ஷாட் எடுக்கும் போதும் ராஜேந்தர் தனது வாயால் மியூசிக் போட்டுக் கொண்டே அதற்கேற்ப நடக்க வைப்பார். நடிக்க வைப்பார். படத்தில்  அருமையான பாடல்கள்.ஆனால்  ஒரு குறை. படத்தில்  எனக்கு  ஒரு பாட்டு கூட இல்லை”என்றார்.

 

shankar and roopa of oruthalairagam film
தொட்டுக் கொள்ளாத சரித்திரம்.. அருகருகே

டி.ராஜேந்தர் பேச ஆரம்பித்ததுமே அரங்கு சிலிர்த்து அதிர்ந்தது. தன் ‘ஒருதலை ராகம்’ படக்குழுவினரை மகிழ்ச்சியுடன் வரவேற்றவர் பேச ஆரம்பித்தார்.

”.நான் என்றும் பழையதை மறக்கமாட்டேன். நான் ‘ஒருதலை ராகம்’ எடுத்த மாயவரம் ஏவிசி கல்லூரியை பார்த்தாலே  இன்றும் விழுந்து கும்பிடுவேன்.34 ஆண்டுகளாக இது வரை அங்குபோனது இல்லை. அங்கு இந்த ஆண்டு போகவுள்ளேன்.

இன்று எல்லாம் மாறி விட்டது.கேட்டால் ட்ரண்ட் என்கிறான். அன்று நாகரிகமாக காதல் இருந்தது.  இன்று மாறிவிட்டது. நூன் ஷோவில் பிக் அப்… மேட்னியில் ஸ்டெப் அப் … என்றாகு சகலமும் முடிந்தநைட் ஷோவில் பேக் அப் என்று மாறிவிட்டது. அன்று கதைக்காகப் படம் எடுத்தார்கள் இன்று சதைக்காகப் படம் எடுக்கிறார்கள். இன்று புரிகிற மாதிரி பாட்டு இருக்கக் கூடாது. கேட்டால் ட்ரண்ட் என்கிறான்.

முதலில் ‘ஒருதலை ராகம்’ படத்துக்கு வைக்கப்பட்டிருந்த டைட்டில், ‘தடை போடும் மேகங்கள்’. படத்தில்  சந்திரசேகர் நடித்திருந்த கேரக்டரில் நான்தான் நடிக்க இருந்தேன் .  ஒரு காட்சியில் கையில் சிகரெட் பிடிப்பது போல் நடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததால், அது என் கொள்கைக்கு எதிரானது என்பதால் சந்திரசேகரை நடிக்க வைத்தேன் .

ஒரு தலை ராகத்துக்கு பிறகு ‘ராகம் தேடும் பல்லவி’யில் சங்கரை நான் ஒரு இயக்குநராக நடிக்க வைத்தேன்  இன்று அது பலித்து விட்டது

எனக்கு மலையாளத்தில் படமெடுக்க ஆசை. அங்குதான் கலாச்சாரம் இருக்கிறது. அங்குதான் குடும்பக்கதை ‘திரிஷ்யம்’ ஓடுகிறது. மலையாளத்தில்தான் மம்முட்டி, மோகன்லால், திலீப்  என எல்லாரும் வேட்டி கட்டி நடிக்கிறார்கள். இங்கு வேட்டி கட்டி நடிக்கிறார்களா? எல்லாரும் எதற்கெடுத்தாலும் ஜீன்ஸ் போட்டு நடிக்கிறார்கள்” என்றவர். பேச்சின் இடையிடையே ஆங்காங்கே பாடியும், குரல் மாற்றிப் பேசியும் அரங்கை மகிழவும் நெகிழவும் வைத்தார்

reunion
பாடல் வெளியீடு

விவரம் தெரிந்த வயதில் பார்த்த முதல் யதார்த்தப் படம் என்ற நிலையில்  மனதில் உறைந்து நிற்கும் ஒரு தலைராகம் படத்தின் கலைஞர்கள் மீண்டும் ஒன்று கூடிக் கூறிய அனுபவங்களை கேட்ட அன்று இரவு…

 நினைவில் முழுக்க முழுக்க இசைத்துக் கொண்டிருந்தது ஒருதலை ராகம் . !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →