புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் , நடிப்பில் சத்யா மூவீஸ் சார்பில் ஆர் எம் வீரப்பன் திரைக்கதை அமைத்துத் தயாரிக்க, எம் கிருஷ்ணன் இயக்கிய படம் ரிக்ஷாக்காரன் .
சிறப்பான கதையம்சமும், இனிமையான பாடல்களும், எம்.ஜி.ஆரின் ஸ்டைலான நடிப்பும், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளும் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து,
1971 ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே
‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது,
மஞ்சுளா, பத்மினி , அசோகன், மேஜர் சுந்தரராஜன், மனோகர், தேங்காய் சீனிவாசன், சோ, என்று படத்தில் நட்சத்திர பட்டாளம் இருப்பது மட்டுமல்ல, அவர்களது கதாபாத்திரங்களும் சிறப்பாக அமைந்திருந்தன.
“அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…”, “அழகிய தமிழ் மகள் இவள்…”, “கடலோரம் வாங்கிய காற்று…”, “பம்பை உடுக்கை கொட்டி…” என இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் தேனாறு .
அதுமட்டுமின்றி, இந்த படத்தில் நடித்ததற்காக 1971 ஆம் ஆண்டின் இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான மத்திய அரசின் பாரத் விருது எம்.ஜி.ஆருக்கு கிடைத்ததோடு,
பாரத் விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற புகழும் அவருக்கு கிடைத்தது.
இப்படி பல சிறப்பம்சங்களை உள்ளடக்கி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடி தந்த ‘ரிக்ஷாக்காரன்’, தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேறி,
மீண்டும் ஒருமுறை தமிழக ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கிறது.
‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் டிஜிட்டல் பதிப்பை வெளியிடுகின்றனர் ‘குவாலிட்டி சினிமா’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி. மணி, டி.கே. கிருஷ்ணகுமார்
மற்றும் ‘பிலிம் விஷன்’ நிறுவனத்தின் உரிமையாளர் கே. ராமு
இதையொட்டி நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் ‘ரிக்ஷாக்காரன்’ படத்தின்
டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள ‘தேவி பாரடைஸ்’ திரையரங்கில் நடைபெற்றது
திரு ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்கிய இந்த விழாவில் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், நடிகர்கள் மயில்சாமி, சின்னி ஜெயந்த்,
ரிக்ஷாக்காரன் படத்தில் நடித்த பழம்பெரும் வில்லன் நடிகர் அசொகனின் மகன் வின்சென்ட் அசோகன், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்
சினிமாஸ்கோப்பில் புதிய முன்னோட்டம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. . பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் இப்போதும் வியந்து ரசிக்க வைக்கிறது .
புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் என்ற பெயரை முன்னோட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்று டைட்டிலில் வருமே….அந்த பாணியில் போட்டு இருந்தார்கள் .
அதை தவிர்த்து இருக்கலாம் . அல்லது சாதரணமாகவே போட்டு இருக்கலாம் . எம்ஜியாருக்கு இணையாகுமா?
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் மணி ”இந்த விழாவை நாங்கள் எந்த அரங்கில் வைத்திருந்தாலும், இப்படி ஒரு சிறப்பு எங்களுக்கு அமைந்திருக்காது.
ஏனென்றால், இதே ‘தேவி பாரடைஸ்’ திரையரங்கில் தான் கடந்த 1971 ஆம் ஆண்டு ‘ரிக்ஷாக்காரன்’ படம் வெளியிடப்பட்டது.
தற்போது அதே இடத்தில் அந்த படத்தின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள டிரைலரையும்,
பாடல்களையும் வெளியிடுவது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி மட்டுமின்றி பெருமையாகவும் இருக்கிறது “என்றார்
“ஏழை சிரிச்சா அது மகிழ்ச்சி…ஆனால் நம் தலைவர் எம்.ஜி.ஆர் சிரித்தால் அது புரட்சி…” என்று நடிகர் சின்னி ஜெயந்த் கூற,
திரையரங்கில் அமர்ந்திருந்த அனைத்து எம்.ஜி.ஆர் பக்தர்களும் மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
“தவறான வார்த்தைகளை பயன்படுத்தாத ஒரே மாமனிதர், நம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தான்.
இன்று நான் பங்கேற்று இருக்கும் இந்த விழாவானது, என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை தேடி தந்திருக்கிறது…” என்று பெருமையுடன் கூறினார் நடிகர் சின்னி ஜெயந்த்
நிகழ்ச்சியில் பேசிய ஆர் எம் வீரப்பன் ” இது எம் ஜி ஆர் அவர்களை வைத்து நான் எடுத்த ஐந்தாவது படம். இந்தப் படத்தில்தான் மஞ்சுளாவை நான் கதாநாயகி ஆக்கினேன். .
பத்மினி கேரக்டரில் வேறொருவர் நடித்து மூவாயிரம் அடிவரை படமாக்கிய பிறகு அவர் நடிப்பு திருப்தி இல்லாத காரனத்தால் அமெரிக்காவில் இருந்த பத்மினியை அழைத்து நடிக்க வைத்தோம்.
படத்தின் கிளைமாக்ஸ் செட் மூன்று அடுக்குகள் மற்றும் நாற்பது அடி உயரம் கொண்டது . ஒரு தளத்தின் கூரைப் பகுதியில் தண்ணீர் விட்டு சின்ன கால்வாயை உருவாக்கினோம்
இப்படி எவ்வளவோ சொல்லலாம்
எனக்கு வயது தற்போது 90 என்றாலும், இந்த நாள் மூலம் எனக்கு நாற்பது வயது குறைந்து இருக்கிறது.
என்னை இங்கு அழைத்து என்னை அன்போடு வரவேற்ற ஒவ்வொரு எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்…. எஎன்றார் .
மிகவும் உணர்ச்சிகரமாக – சிறப்பாக பேசிய மயில்சாமி ” குற்றம் இல்லாத மனிதன், கடவுள் இல்லாத கோவில் நம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
என்னுடைய சிறு வயதில் இருந்தே நான் புரட்சி தலைவரின் படங்களையும் அவரின் பாடல்களையும் மட்டுமே பார்த்து வளர்ந்தேன்
. ‘ஆங்கிலம் என்பது அறிவை வளர்த்து கொள்வதற்காக மட்டுமே தவிர ஆடம்பரத்திற்காக இல்லை…’ என்ற நம் தலைவரின் ‘ரிக்ஷாக்காரன்’ பட வசனத்தை இன்றளவும் என்னால் மறக்க முடியாது
எம் ஜி ஆர் அவர்கள் தனது சம்பளத்தை உயர்த்தும் முன்பு பல முறை யோசிப்பார் . விநியோகஸ்தர்களை அழைத்து எந்த அளவுக்குள் உயர்த்தினால் அது ரசிகர்களை பாதிக்காமல் இருக்கும் என்று விவாதிப்பார் .
அடிப்படையில் ஏழைகளான தனது ரசிகர்கள் கஷ்டப்படக் கூடாது என்று நினைப்பார் .
உலகம் சுற்றும் வாலிபன் படப் பாடல்களை எம் எஸ் விஸ்வநாதன் ஒரு விலை உயர்ந்த நவீன ஒலிக் கருவியில் போட்டுக் காட்டியபோது ,எம் ஜி ஆர் அதை கிராமபோனில் போட்டுக் காட்டச் சொன்னார் .
காரணம் கேட்டபோது என் ரசிகன் இதை இப்படித்தானே கேட்பான் . அதான் நானும் அவனுக்குரிய வசதியில் இருந்தே கேட்கிறேன் ‘ என்று பதில் சொன்னார் .
அவரைப் போல ஒரு நடிகரை – தலைவரை இனி பார்க்கவே முடியாது .
அப்படிப்பட்ட தெய்வத்தின் ‘ரிக்ஷாக்காரன்’ படத்தை மீண்டும் நவீன முறையில் மெருகேற்றி வெளியிடும் ‘குவாலிட்டி சினிமா’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.கே.கிருஷ்ணகுமார், பி. மணி அவர்களுக்கு
என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்