செல்லி சினிமாஸ் சார்பில் ஆர் செல்வகுமார் மற்றும் ராம் பிரசாத் இருவரும் தயாரிக்க,
சரண் , பிருத்வி , கிஷோர் , ஸ்ரீராம், பாண்டி ஆய்ரா, நீரஜா நடிப்பில் முருகேஷ் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் சகா .
இந்த சகா தோழனா , தொல்லையனா ? பேசுவோம் .
அனாதைகளாக உலகை எதிர்கொண்டு, ஒரு திருநங்கை பெண்மணியால் வளர்க்கப்பட்ட
சத்யா( சரண்) மற்றும் கதிர் ( பாண்டி) இருவரும் , அந்த வளர்ப்புத் தாயை கொன்ற நபர்களை எதிர்த்து

அதன் விளைவாக ஜெயிலுக்கு வருகிறார்கள் .
இந்த நண்பர்களுக்கும் ஜெயிலுக்குள் இளம் தாதாவாக இருக்கும் கைதி கங்காவுக்கும் (பிருத்வி) இடையே பகை உண்டாகிறது .
ஜெயிலுக்குள் காசு வைத்து சூதாட்டமாக ‘மல்யுத்தம் செய்கிறோம்’ என்ற பெயரில் பிடிக்காதவர்களை கொன்று ஒழிப்பது கங்காவின் வேலை .
காதலித்த பெண்ணுக்காக காசு திருடி ஜெயிலுக்கு வரும் சிவாவையும் (கிஷோர்) கங்கா சீண்டுகிறான் .

எனவே சத்யா மற்றும் கதிருக்கு சிவா நண்பன் ஆகிறான் .
சிறைக்கு வரும் இன்னொரு சிறுவன் ஜாக்கிக்கும்( ஸ்ரீராம்) , சத்யாவுக்கும் ஒத்துப் போகாத நிலை .
சிறையில் சத்யாவை கங்கா கொல்ல திட்ட மிட , அந்த பிரச்னையை பாண்டி தன்பக்கமாக திருப்பிக் கொள்ள , அதன் விளைவாக பாண்டியை கொல்கிறான் கங்கா .
கங்காவை கொல்ல சத்யா திட்டமிடுகிறான் .
அந்த நேரம் பார்த்து கங்கா சிறையில் இருந்து வெளியே வந்து விட , அவனை கொல்வதற்காக சத்யாவும் , காதலியை பார்ப்பதற்காக சிவாவும் தப்பிக்க திட்டமிடுகின்றனர் .

அதை ஜெயில் அதிகாரியிடம் ( தீனா) காட்டிக் கொடுப்பது போல பாவ்லா செய்யும் ஜாக்கி , ஒரு நிலையில் சத்யா, சிவாவுடன் சேர்ந்து தப்பிக்க விரும்புகிறான் .
ஆனாலும் அவனை நம்பாத சத்யா, சிவா இருவரும் அவனை மாட்டி விட்டு விட்டு தாங்கள் மட்டும் தப்பிக்கின்றனர் .
தப்பிய இருவரில் சத்யா கங்காவை கொல்லவும் சிவா காதலியை பார்க்கவும் போகின்றனர் .
இருவரையும் பிடிக்க ஜெயிலர் வெறியோடு தேடுகிறார்
ஜாக்கியும் தப்பிக்கிறான் .

ஆறு பேரும் சந்தித்த போது நடந்தது என்ன என்பதே இந்த சகா .
வழக்கமான கதைதான் .
ஆனால் உண்மைக்கு மிக நெருக்கமான எடுத்து படத்தின் முதல் பாதியில் நாமும் ஜெயிலுக்குள் கைதிகளில் ஒருவராக இருக்கும் உணர்வை தருகிறார் இயக்குனர் . சபாஷ்
சரண் , பிருத்வி , கிஷோர் , ஸ்ரீராம், பாண்டி ஆய்ரா, நீரஜா அனைவருமே சிரமப்பட்டு உழைத்தும் நன்கு நடித்தும் உள்ளனர் .
பாடல்கள் எழுதி இசை அமைத்து இருக்கும் ஷபிர் அசத்தி இருக்கிறார்

”யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே.”
– என்ற குறுந்தொகைப் பாடலை பயன்படுத்தி அவர் எழுதி இருக்கும் பாடலும் அந்த ”ஏலேலே ஏலேலோ… ஓ ஓ… ஹம்மிங்கும்
அந்த தீம் மியூசிக்கும்…. ஆகா ஆகா ஆகா …… காதில் தேன் பாய்ச்சுகிறது . படத்தின் பெரும் ஆறுதல் பாடல்களும் இசையும்.

நிரன் சந்தரின் ஒளிப்பதிவும் ஜெயில் காட்சிகளில் மிக சிறப்பு .
முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் நண்பர்கள் ஜெயிலில் இருந்து தப்பிய உடன் குறைகிறது .
அப்புறம் தறிகெட்டு அலைகிற திரைக்கதை , ஒரு முழுமையான நோக்கம் இல்லாத ஒரு வகையில் இருக்கிறது .சில காட்சிகளில் ஓவர் பில்டப் வேறு படத்தின் உடம்புக்கு ஆகலை
ஜாக்கி பற்றிய அந்த கடைசி திருப்பம் அட போட வைக்கிறது . எனினும் திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் .
