சங்கத் தலைவன் @ விமர்சனம்

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கருணாஸ், சமுத்திரக் கனி, சுனு லக்ஷ்மி, ரம்யா, மாரி முத்து நடிப்பில் மணிமாறன் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் சங்கத் தலைவன். 

சங்க நாதம் எழுப்பும் தலைவனா? சங்கிப் போன தலைவனா? பேசலாம். 
விசைத்தறி நெசவுத் தொழிற்சாலை ஒன்றில் மனசாட்சி இல்லாத முதலாளி( மாரிமுத்து)யின்  கீழ் வேலை செய்யும் விசுவாசமான தொழிலாளி ( கருணாஸ்) ஒருவன் .சக தொழிலாளிகள் மேல் கருணையும்  அன்பும் கொண்டவன் .

அதிக நேரத் தறி ஓட்டம், நியாயமான ஓய்வு இல்லாத பணி மற்றும் சில மனிதாபிமானம் அற்ற காரணங்களால் ஒரு பெண் தொழிலாளியின் கை துண்டிக்கப் படுகிறது . அவளுக்கு ஒழுங்கான சிகிச்சை, மற்றும் உரிய நஷ்ட ஈடு கிடைக்காமல் முதலாளி ஏமாற்றப் பார்க்க, 

தொழிலாளிகளின்  நலனுக்காகப் போராடும் பொது உடமைச் சங்கத்தின் தலைவரிடம் ( சமுத்திரக்கனி) விஷயத்தை ரகசியமாகக் கொண்டுய் செல்கிறான் விசுவாசத் தொழிலாளி. 

முதலாளி நியாயமான நஷ்ட ஈடு லட்சங்களில் தரவேண்டி இருக்கிறது . 

அதனால் கோபத்தில் இருக்கும் முதலாளிக்கு விசுவாச தொழிலாளியின் செயல் தெரிய வர, விசுவாசத் தொழிலாளியை அவர் பழிவாங்க முயல 
 சங்கம் என்றாலே வெறுக்கும் அந்த விசுவாச தொழிலாளியே ஒரு நிலையில்அநியாய முதலாளிக்கு எதிராக,  சங்கத்தில் சேர்ந்து களமாட வேண்டிய சூழல் வருகிறது . 

முதலாளி போடும் எலும்புத் துண்டுக்கு நாய் போல வாலாட்டும் போலீஸ் தன் பங்குக்கு தொழிலாளியைத் தாக்க…அப்புறம் நடப்பது என்ன என்பதே இந்த சங்கத் தலைவன் . 

விசைத்தறித் தொழிலாளர்களின் பரிதாப நிலை,  சர்வாதிகார முதலாளிகளின் மனச் சாட்சியின்மை,  அந்த முதலாளிகளுக்கு வாலாட்டும் காவல்துறை, தொழிலாளர்களுக்காகப் போராடும் தொழிற் சங்கப் பொதுவுடமைவாதிகள் அவர்களின் தியாக வாழ்வியல்… 

இந்தப்  பின்னணியில் பாரதிநாதன் எழுதிய ‘தறியுடன்…’  என்ற நாவலுக்கு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் மணிமாறன் . 

தொழிற்சாலைச் சூழல், தொழிலார்களின் நிலைமை என்று வரும் ஆரம்பக் காட்சிகள் அபாரம். பொதுவுடமைவாதிகளின் தீவிரப் பணி, அவற்றின் மீது தொலைநோக்கு இல்லாத எளிய மனிதர்களின் ஒவ்வாமை இரண்டும் அருமையாகப் பின்னிப் பிணைகிறது திரைக்கதையில். 

ஊடே ஒரு பாவு நூல் போல ஓடும் நகைச்சுவை இன்னும் சிறப்பு . 

இடைவேளை வரும்போது அட அதற்குள் இடைவேளையா  என்று தோன்றுகிறது. 

யதார்த்தமான பிரச்னைகள் பேசும் ஒப்பனையற்ற ஒரு கதைக்கு இவ்வளவு விறுவிறுவிறுப்பாக திரைக்கதை அமைப்பது சாதாரண விஷயம் இல்லை . சபாஷ் .

அந்த இடைவேளை திருப்பம் . அபாரம் . சமுத்திரக்கனி கொடுக்கும் அதே எக்ஸ்பிரஷனை படம் பார்க்கும் நாமும் கூட கொடுக்கிறோம். 

அப்பாவித்தனமான தோற்றப் பொருத்தம், இயல்பான நடிப்பு என்று நன்றாக நடித்துள்ளார் கருணாஸ். 

ஒரு பக்குவமான தொழிற்சங்கவாதியாக அட்டகாசமாக அலையடிக்கிறார் சமுத்திரக் கனி.  பண்பட்ட நடிப்பு . 

சுனு லட்சுமியும் சகோதரியாக வரும் நடிகையும் பாந்தம். 

சங்கத் தலைவரின் மனைவியாக வரும் ரம்யா , பிணத்தை சுமந்து வரும்போது நடக்கும் பொருத்தமான நடையில் கவர்கிறார். 

தறித் தொழிற்சாலை முதலாளி வில்லனாக அசத்தி இருக்கிறார் மாரிமுத்து . 

ஸ்ரீனிவாசன் தேவாம்சத்தின் ஒளிப்பதிவு தறித் தொழிற்சாலைகளை- மக்களுக்குச் சேவை செய்து காட்டிலும் மேட்டிலும் கல்லிலும் முள்ளிலும் அல்லலுறும் தொழிற்சங்கவாதிகளை மிகச் சிறப்பாக உணர வைக்கிறது. 

உணர்வுப் பூர்வமான காட்சிகளைத் தரக் கூட்டல் செய்கிறது ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை. 

நறுக்குத் தெரித்தாற்போன்ற ஜி பி வெங்கடேஷின் படத் தொகுப்பும் அட்டகாசமான அந்த முதல் பாதிக்கு ஒரு முக்கியக் காரணம். 

ஆனால் படத்தின் இரண்டாம் பாதிதான் ஏமாற்றுகிறது .

இந்தத் திரைக்கதைக்குள்ளேயே ஒரு நல்ல- வெற்றிப் படத்துக்கான கதை இருக்கிறது .  ஆனால் ரொம்ப கவனமாக அதை விடுத்து விட்டு காதல் தோல்வி, கர்ப்பவதி, உள்ளிட்ட வழக்கமான பழகிய காட்சிகளோடு ‘தறி’கெட்டு அலைகிறது இரண்டாம் பகுதி . 

அதே போல தேவை இல்லாத பில்டப்புகள் எரிச்சலூட்டுகின்றன. 

உதாரணமாக சமுத்திரக்கனியை போலீஸ் கைது செய்ய வரும் . என்னமோ நடக்கப் போகிறது என்பது போல  அவர், கர்ப்பிணி மனைவி, அப்பாவி அம்மா, தூங்கும் குழந்தை எல்லோரையும் காட்டி,  கனம் ஏற்றுகிறார்கள். ஆனால் சில காட்சிகளுக்குப் பிறகு , ” காற்று வாங்கப் போனேன்; ஒரு கவிதை வாங்கி வந்தேன் ” என்று பாடாத குறையாக வீட்டுக்கு வருவார் கனி. 

ஒரு படம் கம்யூனிச , பொதுவுடைமை தத்துவங்களை முன்னெடுப்பது என்றுமே தேவையான விஷயம்தான்.அதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.  ஆனால் அது ‘செம்’புலப்பெயல் நீர் போல இருக்க வேண்டும் . சிவப்பு வண்ணத்தைக் கரைத்துத் திப்பித் திப்பியாய் ஊற்றிய  கதையாக இருக்கக் கூடாது. 

கம்யூனிஸ்டுத் தலைவர் சி. மகேந்திரனின் மகன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்கிறார்கள்.அவர் கூட இப்படி நடிப்பது சந்தேகம்தான் என்ற அளவுக்கு படத்தில் கம்யூனிஸ்ட்டுப் பிரச்சார நெடி. 

அதுவும் இன்றைக்கு கம்யூனிஸ்டுத் தலைவர்கள் எல்லாம் இன்னோவா , அதற்கு மேலும் என்ன என்னாவோ வாங்கி விட்ட நிலையில் சிரிப்புதான் வருகிறது . கால தேச வர்த்த மானம் முக்கியம் இயக்குனரே. 

நியாயத்துக்காகப் போராடுபவர்களை சட்டத்தின் பெயரால் வீழ்த்த ஒரே வழி … அவர்களை உணர்ச்சிவசப்பட வைத்து வன்முறை செய்ய வைப்பதுதான் . அதைப் போய் இந்தப் படம் கிளைமாக்ஸ் ஆக வைத்து முடிக்கும்போது, அடப் போங்கப்பா இது ரொம்ப போங்குப்பா என்று சொல்ல வைக்கிறது. 

சரி…. அப்போது என்னதான் செய்திருக்கலாம்?

இடைவேளை சமயத்தில் கருணாஸ் ஒரு விஷயம் சொல்வார். இரண்டாம் பகுதியில் அதைச் செயலாக்க முயலும்போது வரும் பிரச்னைகள் , உறவுத் துரோகங்கள், பாசப் படுகுழிகள், அதில் சில சோகம் – தியாகம் , அப்போது நாயகனுக்கு  சங்கவாதிகள் செய்யும் உதவி,அதில் யதார்த்தமாகக் கிடைக்கும் வெற்றி என்று படத்தைக் கொண்டு போய் ,

இப்போது படத்தில் வரும் அந்த முதலாளி –  தொழிற்சங்க பேச்சு வார்த்தைக் காட்சியை வைத்து ( உள்ளீடு, வசனம், கனியின் நடிப்பு என்று அந்தக் காட்சி அற்புதமாக இருக்கிறது.  தறி ஓட்டம் – தரம் குறித்த அந்த விவரணை அபாரம்) அந்த வெற்றியோடு படத்தை முடித்து, 

‘தொழிலாளர்களுக்கு உலகெங்கும் கிடைக்கும் ஒவ்வொரு சிறு சிறு  வெற்றிக்குப் பின்னாலும்  இப்படி போராட்டம் தியாகம், சோகம் எல்லாம்  இருக்கிறது’ என்று சொல்லிப் படத்தை முடித்து இருந்தால்…

இந்தப் படம் இன்னும் சிறப்பாக மாபெரும் வெற்றிப் படமாக இருந்திருக்கும் .  

ஆனாலும் என்ன … 

சினிமா என்பது மக்கள் நலனுக்கான ஊடகம் என்பதைப் புரிந்து கொண்டு ஒரு வாழ்வியல் பிரச்னையைக் கையில் எடுத்து சமூக அக்கறையோடு உருவாக்கப் பட்டு இருக்கும்,

சங்கத் தலைவன் .. தங்கத் தலைவன்தான்!

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *