பி வி பிரேம்ஸ் சார்பில் பி வி ஷர்மிளா தயாரிக்க, ஜெய் . மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு , கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், நடிப்பில் பாபு விஜய் எழுதி இயக்கி இருக்கும் படம்
ஏழைகளுக்கு இரங்கும் குணம் கொண்ட ஓர் இளம் பெண்ணை( மீனாட்சி கோவிந்தராஜன்) காதலிக்கிறான் ஐ டி நிறுவனத்தில் வேலை செய்யும் ஓர் இளைஞன் (ஜெய்) .
அந்தப் பெண் ஓர் அமைச்சரின் மகள். சீனியர் அமைச்சர் ஒருவர் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்ப, அப்பா அமைச்சரும் பதவிக்காக அதை ஏற்க,
வீட்டை விட்டு வெளியேறி நண்பன் ஒருவன் உதவியில் அவள் ஹாஸ்டலில் தங்கி இருக்கிறாள். அந்த நண்பன் அவளை வளைக்க முயல்கிறான். காரணம் அவளது சொத்துக்கள்.
இந்த நிலையில்தான் அவளை பார்த்த ஐ டி இளைஞன் அவளை காதலிக்க ஆரம்பித்து அதை அவளிடம் சொல்ல அவளும் காதலை ஏற்க கல்யாணம் நடக்கிறது.
அமைச்சரும் சொத்துக்கு ஆசைப்படும் நண்பனுக்கும் அது பிடிக்கவில்லை.
நாடெங்கும் நிறைய ஹோட்டல்கள் வைத்திருக்கும் ஒரு நபர் (கருடா ராம்) அந்த ஹோட்டல்களில் அறைகளை எல்லாம் ஐம்பது சதவீத தள்ளுபடிக்கு ஜோடிகளுக்கு கொடுத்து, அங்கே நடப்பதை எல்லாம் வீடியோ எடுத்து , உலகம் எங்கும் ஆபாச வெப் சைட்டுகளுக்கு விற்பதன் மூலம், வருடம் ஆறாயிரம் கோடி பணம் சம்பாதிக்கும் வேலையில் ஈடுபடுகிறான்.
நாயகன்- நாயகியும் ஹனிமூன் சமயத்தில் அவனது ஹோட்டலில் தங்க, அவர்களின் கூடலும் வீடியோவாக எடுக்கப்படுகிறது.
ஒரு நிலையில் விஷயம் நாயகனுக்கு தெரிய வர, என்ன செய்தான்? நாயகனையும் நாயகியையும் பிரிக்க நினைக்கும் பணத்தாசை நண்பன் மாற்று அமைச்சர் அப்பாவின் திட்டம் என்ன ஆனது என்பதே படம்.
பாடலில் இடம் பெற்ற வார்த்தைகளைக் கொண்ட அருமையான தமிழ்ப் பெயரை படத்துக்கு வைத்திருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.
படத்தின் டைட்டில் அட்டகாசமான பின்னணியில் கம்பீரமாக இருக்கிறது. என்னமோ பார்க்கப் போகிறோம் என்று ஏகப்பட்ட நம்பிக்கியை ஏற்படுத்தும் டைட்டில்.
ஜெய் கேரக்டருக்கு பொருத்தமாக நடித்துள்ளார்,மீனாட்சி கோவிந்தராஜன் நன்றாக நடித்துள்ளார். ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் யோகிபாபு.
கிரிஷ் கோபால கிருஷ்ணனின் இசை ஆரம்பத்திலேயே கவர்கிறது.
மிக அட்டகாசமாக அற்புதமாக ஒளிப்பதிவு செய்து படத்துக்கு ஒரு ஹை கிளாஸ் லுக் தருகிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன். படத்துக்கு பெரிய பலம் இவர்கள் இருவரும்
மிக சிறப்பான ஷாட்கள் . நடிக நடிகையரிடம் வேலை வாங்கிய விதம் ஆகியவற்றில் கவர்கிறார் இயக்குனர் பாபு விஜய்
தங்களின் பாலியல் பகிர்வு வீடியோ எடுக்கப்படுவதை அறிந்த ஒரு ஜோடி தற்கொலை தற்கொலை செய்து கொள்வது போன்ற ஒரு சில காட்சிகள் அதிர வைக்கின்றன.
வசனம் பல இடங்களில் ரசனைக்குரியதாக இருக்கிறது பாராட்டுகள்.
ஆனால் இது எல்லாமே (நடிக நடிகையரைத் தவிர) இடைவேளை வரைதான் . இரண்டாம் பகுதியில் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு ஏதோ மந்திரித்து விட்ட மாதிரி ஒட்டு மொத்தமாக ஓ பி அடிக்கிறார்கள்.
இரண்டாம் பகுதியில் எல்லாமே படு செயற்கையாக இருக்கிறது. காமெடி என்ற பெயரில் ரொம்ப சோதிக்கிறார்கள். அதுவும் கல்யாணமான சக பெண் ஊழியரை யோகிபாபு கலாய்க்கும் காட்சிகள் எல்லாம் அறைக்கும்போதே புளித்துப் போன – ஜெயமோகன்- மாவு
ஒரு அமைச்சருக்கு மகளை தேடி கண்டு பிடிக்க முடியாதா? அமைச்சர் தனது மகளை வெறுத்த பிறகு அவர் சொத்து எப்படி மகளுக்கு வரும் என்று நண்பன் பிளான் பண்ணுகிறான்? . அப்படி செய்கிறவன் அவள் மீது கோவித்துக் கொண்டு அவளை நடு இரவில் ரோட்டில் விட்டு விட்டு வருவானா?
யோகிபாபு கதாபாத்திரம் ஜெய்க்கு துரோகம் செய்கிறது. அப்புறம் உதவுகிறது.. அப்புறம் கறுவுகிறது. அப்புறம் கெஞ்சுகிறது.. அது எதையுமே ஜெய் கதாபாத்திரம் சீரியஸாக எடுத்துக் கொள்ளவே இல்லை.. இதெல்லாம் என்ன மாதிரியான காட்சிகள்?
இப்படி கேரக்டர் டிசைன் பற்றி எந்த அக்கறையும் புரிதலும் இல்லாமல் காட்சிகள் போவதால்தான் இரண்டாம் பாகம் ரொம்பவும் சோதிக்கிறது.
பல பல காட்சிகளில் காமெடி என்று ஏதாவது பேசுகிறார்கள். ஆனால் அவை காமெடியாக இல்லை.
ஆரம்பத்தில் அரசியல்வாதிகளின் கதையில் ஆரம்பிக்கிறது. அப்புறம் அது இல்லை. அப்புறம் நாயகியின் நண்பனின் கதை. அதையும் ஒழுங்காக சொல்லவில்லை. திடீர் என்று ஆபாச வீடியோ கதை.. அதையும் விட்டு விட்டு கணவன் மனைவி புரிதலின்மை மற்றும் டைவர்ஸ் காட்சிகள் … இப்படி திரைக்கதை ஜம்ப் அடித்துக் கொண்டே இருப்பதால் எதிலும் அழுத்தம் கிடைக்கவில்லை.
கணவன் மனைவியோ காதலன் காதலியோ இல்லை மேற்படியோ….
யாராக இருந்தாலும் ஹோட்டல் அறைகளில் தங்கும்போது தங்கள் அந்தரங்கம் காட்சியாகிறதா என்று கவனமாக இருங்கள் என்ற கதை இன்றும் சொல்ல வேண்டியதுதான் . டைரக்ட்டாக அதில் மட்டும் கவனம் செலுத்தி இருந்தால் படம் சென்சேஷனலாக மாறி இருக்கும் . ரசிகர்கள் ஆதரவும் கிடைத்து இருக்கும் .
கிளைமாக்ஸ் பகுதி ஐடியாவாக ஓகே தான். ஆனால் அதை லாஜிக்காக சரி செய்து இன்னும் டீடைலாக அழுத்தமாக சொல்லி இருந்தால், இது ஷ்யூர் ஷாட் படமாக ஆகி இருக்கும் . அதுவும் செய்யவில்லை.
சட்டென்று மாறுது வானிலை ..ஆரம்பத்தில் கொஞ்சம் குளிர்ச்சி போகப் போக புழுக்கமும் சூடும்.