லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் சார்பில் பி.செந்தில் முருகன் தயாரிக்க, விருதகிரி , ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா , சம்பத் ராம், பாவா லட்சுமணன் நடிப்பில்
ரத்தன் கணபதி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் விருத்தாசலம் . போகலாமா ? பார்க்கலாம் .
சிற்றிளம் வயதிலேயே தன் மீது காதல் கொண்ட அத்தை மகளை கையைப் பிடித்து இழுத்த வேலு என்ற நண்பனின் கையை வெட்டி விடுகிறான் சிறுவன் விருதகிரி.
அத்தை மகளை அழைத்துக் கொண்டு அத்தை ஊரை விட்டே போய் விடுகிறார்.
வேலு விருதகிரி இருவரும் சண்டையிட்ட காரணத்தால் இருவரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு அங்கும் பகை வளர்த்துக் கொள்கிறார்கள்
விடுதலை ஆன பிறகும் ஊருக்குள் விருதகிரிக்கும் (விருதகிரி) ஒத்தக் கை வேலு (சம்பத் ராம்) பகை தொடர்கிறது .
ஊரில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கு ஒரு ஆசிரியையும் ( ஸ்வேதா) , மருத்துவமனைக்கு அவளது தோழியான ஒரு நர்சும் (ஷெரீன் ) வருகிறார்கள் .
டீச்சருக்கு விருதகிரி மீது காதல் வருகிறது . ஒத்தகை வேலுவின் அண்ணனான் ஊர்த்தலைவரின் மகளும் (சமீரா) விருதகிரியை காதலிக்கிறாள்
ஆனால் விருதகிரி சிறு வயதில் பிரிந்து போன தன் அத்தை மகளுக்காக காத்திருக்கிறான் ஆள் பலம் பண பலம் கொண்ட வேலு எப்படியாவது விருதகிரியை கொல்லத் துடிக்கிறான் .
அவன் பகை என்ன ஆனது ? விருதகிரி , டீச்சர், ஊர்த்தலைவர் மகள் இவர்களில் யாருடைய காதல் வென்றது அல்லது தோற்றது என்பதே இந்த விருத்தாசலம்.
கல்மிஷம் இல்லாத சிறுவயது காதலை சின்னச் சின்ன பிளாஷ் பேக்குகளில் உறுத்தாமல் சொல்கிறார் இயக்குனர் ரத்தன் கணபதி,
விருதகிரியின் அம்மா மரணச் சடங்குகளை என்ன பெத்த சாமி பாடலில்; மனம் நெகிழும்படி சொல்லி இருக்கிறார் .
உமா சங்கர் ஸ்ரீராம் இசையில் பாடல்கள் மண் மனத்தோடு ஒலிக்கின்றன . பயர் கார்த்திக்கின் சண்டைக்காட்சிகளும் ஒகே ரகம்
சிறுவயது அத்தை மகளாக வரும் சிறுமி சிறப்பாக நடித்துள்ளார் . கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான முகங்கள் .
இப்படி பாராட்ட விஷயங்கள் சில உண்டு . ஆனால் அதி முக்கியமாக கதை திரைக்கதை வசனம் படமாக்கல் போன்ற விசயங்களில் போதாமை .
இன்னும் தனித்தன்மை வாய்ந்த கதை, அதற்கேற்ற திரைக்கதை வசனம், படமாக்கல், செய்நேர்த்தி இவை யாவும் நிறைய தேவைப்படும் படம் இது .




