
லக்ஷ்மி ராம கிருஷ்ணன் இயக்கிய படங்களில் அசோசியேட் டைரக்டராக இருந்தவர் தாமரை கண்ணன்.
இவர் மலையாளத்தில் இயக்கிய திங்கள் முதல் வெள்ளிவரை மற்றும் ஆடு புலி ஆட்டம் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாம் .
மேற்படி ஆடு புலி ஆட்டத்தை இவர் மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் எடுக்க , அந்தப் படம் செண்பக கோட்டை என்ற பெயரில்,
தமிழில் விரைவில் வெளியாக இருக்கிறது .
(செண்பகக் கோட்டை அல்ல . ஏன்னா எட்டெழுத்து செண்டிமெண்ட் )
ஜெயராம் , ரம்யா கிருஷ்ணன், ஓம் புரி , சம்பத் , ஆடு களம் நரேன் ஆகியோர் நடிக்க, ஹர்ஷினி மூவீஸ் தயாரித்து உள்ளது . படத்தின் வசனம் தயாரிப்பாளர் இயக்குனர் சித்ரா லட்சமணன் .
படம் பற்றி சொல்லும் இயக்குனர் தாமரைக் கண்ணன் (இவரது மலையாளப் பெயர் கண்ணன் தாமரக் குளம் ),
” இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு நடக்கும் ஒரு வரலாற்றுக் கதை, இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கதை, இப்போது நிகழும் கதை…
ஆகிய மூன்று கதைகளின் பின்னலே இந்தப் படம் .
இதில் பேய் உண்டு . ஆனால் வழக்கமான பேய்ப் படம் அல்ல . வழக்கமான பேய்ப் படங்களில் பேயை கட்டுப்படுத்துவதே படம் பார்க்கும் ரசிகனின் விருப்பமாக இருக்கும் .
இந்தப் படத்தை பார்க்கும் ரசிகன் அந்தப் பேய் ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்படுவான் .
நடிகர ஜெயராமை ஹீரோவாக பார்த்து இருப்பீர்கள் . வில்லன் என்ற வார்த்தையை விடவும் கொடுமையான ஒரு கேராக்டரில் இந்தப் படத்தில் பார்ப்பீர்கள் .
தேசிய விருதுகள் பல பெற்ற நடிகர் ஓம் பூரி இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் பிரம்மாதமாக நடித்துள்ளார் .
ரம்யா கிருஷ்ணன், சம்பத் இருவரும் தங்கள் கதா பாத்திரங்களில் கலக்கி இருக்கிறார்கள் .
இப்படி பெரிய நடிகர் பட்டாளம் இருந்தாலும் படத்தின் ஜீவனாக வரும் இரண்டு சிறுமிகளின் கதாபாத்திரத்தில் பேபி அக்ஷரா கிஷோரும் பேபி அஞ்சலீனாவும் அசத்தி இருக்கிறார்கள்.
படம் எல்லோரையும் கவரும் ” என்கிறார் .
படத்தை பற்றி சித்ரா லட்சுமணன் , ” படத்தில் சென்டிமென்ட்டுக்கு கொடுத்துள்ள முக்கியத்துவம் எல்லோரையும் கவரும்” என்கிறார்