ஜே எஸ் பி பிலிம் ஸ்டுடியோஸ் மற்றும் பிவிஆர் ஐநாக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தேசிய அளவில் விருதுகள் பெற்ற ட்ரையத்லான் வீராங்கனை ஆர்த்தி, ஷில்பா மஞ்சுநாத், பிரேம், சென்றாயன், பசங்க சிவகுமார், ஏ கே வெங்கடேஷ் நடிப்பில் ஜே எஸ் பி சதீஷ் தயாரித்து எழுதி இயக்கி இருக்கும் படம் .
சிறுவயதில் அப்பாவின் வெறுப்பான தடைகளை மீறி , நீச்சல் வீராங்கனையாகி சென்னையில் நீச்சல் பயிரிச்யாளராக இருக்கும் பெண்ணை ( ஷில்பா மஞ்சுநாத்) ஊருக்கு வரவழைத்து திருமணம் செய்து வைக்க அப்பா முயல , அதை முறியடிக்கும் மகள் ,
அதே ஊரில் சிறு வயதில் இருந்து தனது வீட்டில் பணியாற்றியதோடு , தன் உயிரையும் காப்பாற்றிய ஒரு பெண்மணியின் பேத்திக்கு ( நிஜ வீராங்கனை ஆர்த்தி) அபாரமான நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப்பந்தயத் திறமைகள் இருப்பதைப் பார்த்து வியக்கிறாள்.
ஆனால் அந்தப் பெண்ணின் குடிகார முறைமாமன் அவளைத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட பாட்டியும் இறந்து விட , அவளை தன்னோடு சென்னைக்கு கொண்டு வந்து , நீச்சல் போட்டிக்குப் பயிற்சிகள் தருகிறாள் அந்த நீச்சல் பயிற்சியாளர்.

ஆனால் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் தன மகளுக்கு உயர்கல்வியில் இடம் வாங்குவதற்காக , பயிற்சியாளர் மற்றும் போட்டி நடத்துபவர்களை கையில் போட்டுக் கொண்டு கோல்மால் செய்ய , அவரது மகள் வெல்கிறாள் . நியாயமாக வெல்ல வேண்டிய கிராமத்துப் பெண் தோற்றுப் போக ,
ஐ ஏ எஸ் அதிகாரி ஆணவத்தோடு ”கிராமப்புறம்…. ஏழை…பொம்பளைங்க…” என்று கேவலமாகப் பேசுகிறார் .
மனம் தளராத நீச்சல் பயிற்சியாளர் , ஏழைப் பெண்ணை நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப் பந்தயத் திறமைகள் மூன்றும் தேவைப்படும் டிரையத்லான் போட்டிக்கு தயார் செய்கிறாள் .
இந்நிலையில் ஒரு விபத்தில் சிக்கும் அந்த ஏழைப் பெண்ணுக்கு சற்று அதிகமான சத்தம் கேட்டாலோ உடல் வறண்டு போனாலோ மயங்கி விழும் நிலை ஏற்பட,
அவர்களின் டிரையத்லான் கனவு என்ன ஆனது என்பதே இந்தப் படம்.
படத்தின் பெரும்பலம் நிஜ டிரையத்லான் வீராங்கனை ஆர்த்தி அந்த ஏழைப் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுதான். எமோஷனல் காட்சிகளில் எளிமையான நடிப்பால் தங்கப் பெண்ணாக மனம் கவரும் ஆர்த்தி , போட்டிக் காட்சிகளில் சிங்கப் பெண்ணாக அல்ல சிங்கமாகவே ஜொலிக்கிறார் . வாழ்த்துகள்

அவருக்கே கோச் என்ற கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக பொருத்தமாக நடித்துள்ளார் ஷில்பா மஞ்சுநாத்.
வில்லனாக பிரேம் ஓகே.
நிஜ டிரையத்லான் காட்சிகளைப் படம் பிடித்து, அதில் இருந்து தேவையான காட்சிகளை தொகுத்து எடுத்து தேர்ந்தெடுத்து அதற்கேற்ப குளோசப்களை எடுத்து அதற்கேற்ப சில வசனங்களை எழுதி .. இப்படி ஒரு ஃபார்மட்டில் படம் எடுத்து இருக்கிறார்கள் . அந்த வகையில் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரமும் படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல் லும் பாராட்டுப் பெறுகிறார்கள் .
ஆனால் கதை திரைக்கதை என்று பார்த்தால் பலமுறை பார்த்துச் சலித்த படங்களின் வழக்கமான வடிவத்தில் படம் துவங்கி முடிவதால் , புதிதாக ஒன்றும் இல்லை . அதுதான் பெரிய பலவீனம் .
எனினும் ஸ்போர்ட்ஸ் பிடித்தவர்கள், பெண்களின் முன்னேற்றத்துக்கு குரல் கொடுப்பவர்கள் , சமூக நீதியில் அக்கறை உள்ளவர்கள் இந்தப் படத்தை ரசிக்கலாம்