ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் , ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் , அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், நடிகர்கள் கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் எஸ். ஜி. சார்லஸ் என்பவர் இயக்கத்தில் வந்திருக்கும் படம் சொப்பன சுந்தரி
அப்பா படுத்த படுக்கையாக இருக்கும் வீட்டில், அண்ணன் (மைம் கோபி) தன் இஷ்டத்துக்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு , வீட்டில் இருந்த பொருட்களையும் துடைத்து எடுத்துக் கொண்டு போய் விட, அப்பாவி அம்மா (தீபா) , பேச்சு மாற்றுத் திறனாளி அக்கா (லக்ஷ்மி பிரியா சந்திரமவுலி ) இவர்களை வைத்துக் கொண்டு, வேலை செய்து சம்பாதித்துக் கஷ்டப்படும் இளம்பெண் ஒருத்தி ( ஐஸ்வர்யா ராஜேஷ்)
நகைக்கடையில் அந்தப் பெண் எழுதிப் போட்ட அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டுக்கு, கார் பரிசு விழுகிறது . கார் வீட்டுக்கு வரும்போது அண்ணன் வந்து பிரச்னை செய்கிறான் . காரணம் நகை வாங்கியது அவன் . போலீஸ் வரை தங்கை அண்ணன் சண்டை போக, அண்ணன் நகை வாங்கியது அவனுக்காக அல்ல . வேறொருவர் பணத்தில் அவருக்கு வாங்கிக் கொடுத்தது என்பது தெரிய வருகிறது.
யார் பெயரில் பில் இருக்கிறதோ அவருக்குத்தான் கார் பரிசு என்று சம்மந்தப்பட்ட நிறுவனம் அறிவிக்க, அவர் யார் என்று தெரியாத நிலையில் போலி பில் , பிறகு ஓனரின் வீட்டுக்குள் திருட்டு என்று எல்லோரும் தனித்தனியாகவும் பிறகு சேர்ந்தும் களவாணித்தனம் செய்ய, ஒரு நிலையில் இதையே சாக்காக வைத்து ஒரு காமுக இன்ஸ்பெக்டர் (சுனில் ரெட்டி), நாயகியை அடைய முயல, நடந்தது என்ன என்பதே படம்.
எளிய கதை என்பது முதல் பலம். அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் அடுத்த பலம் .
ஐஸ்வர்யா ராஜேஷ் , கேரக்டருக்கான தோற்றப் பொருத்தத்தில் கவர்கிறார். நடிப்பில் உள்ள கொள்ளை அடிக்க வைக்கிறார் லஷ்மி பிரியா சந்திரமௌலி. தீபா வழக்கம் போல நீட்டி முழக்கினாலும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார் . கோபி, ரெடின், சுனில் யாவரும் ஒகே .
பாதிப்படம் ஓடிய நிலையில் திடீர் என வரும் இன்ஸ்பெக்டர் மீதிப் படத்தை ஆக்கிரமிப்பதால் திரைக்கதை தடுமாறுகிறது .
ஒரு நிலையில் நாயகி கதாபாத்திரமும் காசுக்காக அப்பாவின் கிட்னிக்கு அதிக விலை பேசுகிற, ( காமெடியாமாம்) எதையும் செய்யத் துணிகிற கதாபாத்திரம் என்று தெரிய வரும்போது யாருக்காக இந்தப் படம் பார்க்கிறோம் என்ற விரக்தியே வருகிறது .

படத்தில் நேர்மையாக இருக்கக் கூடிய அக்கா கதாபாத்திரத்தையும் ஒரு நிலையில் ஓரம் கட்டி விட்டார்கள் . இருக்கிற காட்சிகளிலும் பிரேமில் வேறு அவர் பெரும்பாலும் பின்னாடியே நிற்கிறார் .
அந்த அக்கா கதாபாத்திரம் திரைக்கதையில் நாயகி கதாபாத்திரமாக இருந்திருந்தால் கூட நமக்கு ஒரு உணர்வுப் பூர்வமான தொடர்பு ஏற்பட்டு இருக்கும் .
அதையும் செய்யவில்லை .
கிளைமாக்சில் அம்மா மகளை வைத்து ஓர் அருவருப்பான காட்சி எடுத்து இருக்கிறார்கள்.
இவர்களுக்கு எல்லாம் திரைக்கதை என்றால் அவ்வளவு விளையாட்டாகப் போய்விட்டது
சொப்பன சுந்தரி – பகல் கனவு காண்பவள்