லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் மற்றும் ஜி கே எம் தமிழ்க் குமரன் தயாரிக்க, இயக்குனர் இமயம் பாரதிராஜா, அருள் நிதி , ஆத்மிகா, பேபி மோனிகா, சுபத்ரா நடிப்பில் ஹரிஷ் பிரபு என்பவர் இயக்கி இருக்கும் படம் .
கட்டிட மேஸ்திரி ஒருவரின் (பாரதிராஜா) மகனான திரு ( அருள்நிதி ) பேச்சு மற்றும் கேட்பு மாற்றுத் திறனாளி, அவனுக்கு அத்தை பெண்ணோடு (ஆத்மிகா) காதல்.
அக்கா மகளிடம் ( பேபி மோனிகா) ஒருவன் பேருந்தில் தவறாக நடந்து கொள்ள முயல, அவனை திரு , அடி பின்னி விடுகிறான் . இந்த நிலையில் அப்பா கட்டுமானக் கட்டிடத்தில் ஒரு விபத்தில் சிக்க, அவரை சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர் .
அங்கே சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட காமுகன் லிஃப்ட் ஆப்பரேட்டர். அங்கே அவனோடு வார்டு பாய், செக்யூரிட்டி, டெக்னீசியன் என்று ஒரு கும்பல், பெண்களைக் கடத்துவது , பிடிக்காத பெஷண்டுகளை விஷ ஊசி போட்டுக் கொல்வது, தவிர வெளியே போய் கொள்ளை அடிப்பது , கொலை செய்வது என்று பல தீய செயல்களில் ஈடுபடுகிறது .

லிஃப்ட் ஆபரேட்டர் திருவின் அக்காவையும் (சுபத்ரா) காதலி ( ஆத்மிகா) , சிறுமி மூவரையும் காமப் பார்வை பார்க்க, மீண்டும் சண்டை எழுகிறது . ஒரு நிலையில் அந்த கும்பல் திருவின் அப்பாவை மருத்துவமனையிலேயே கொன்று விட்டு மற்ற எல்லோரையும் நாசம் செய்ய திட்டமிட என்ன நடந்தது என்பதே இந்தப் படம் .
அருள்நிதி அற்புதமாக நடித்து இருக்கிறார் . பேசாத குறையையும் சேர்த்து நடிப்பில் கவர்கிறார் . பாரதிராஜா மிக இயல்பாக நடித்துள்ளார். சற்றே பூசினாற் போன்ற சமந்தா மாதிரி இருக்கும் ஆத்மிகா சிறப்பாக நடித்துள்ளார். லிப்ட் ஆப்பரேட்டராக வரும் அஷ்ரப் மிரட்டுகிறார் .
சாம் சி எஸ் இசை, சிண்டோவின் ஒளிப்பதிவு, சண்டைப் பயிற்சி, இயக்குனரின் படமாக்கல் எல்லாம் அருமை .
ஆனால் என்ன சொல்லி இருக்கிறார்கள் . எப்படி சொல்லி இருக்கிறார்கள் என்பதில்தான் ஏகத்துக்கும் கொடுமை

சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் உள்ள லிஃப்ட் ஆபரேட்டர், அட்டன்டர், ஊழியர்கள் பலர் கொடூரமானவர்கள், காமவெறியர்கள், கொலைகாரர்கள், இரவில் ஆள் கடத்தும் பேர்வழிகள் , சைக்கோ ஆட்கள், என்று , ( மருத்துவமனையின் பெயரையும் கட்டிடத்தையும் நேரடியாகக் காட்டியே ) சொல்லி இருக்கிறார்கள்.
அந்த மருத்துவமனையால், தமிழக அரசு மருத்துவமனைகளால் காப்பாற்றப் பட்ட உயிர்கள் எத்தனை! தமிழக பொது மருத்துவ கட்டமைப்பின் பலமும் சாதனையும் எத்தனை பெரியது. ஏதோ அவர்கள் காசுக்கு ஆசைப்படுவார்கள் . கையில் சில நூறு ரூபாய்களை திணித்தல் கவனிப்பே வேறு . ஆனால் இந்தப் படத்தில் காட்டி இருக்கும் விதம் அக்கிரமம்
படத்தில் வருவது போல ஏதோ ஒரு சில இடங்களில் ஒரு சில சம்பவங்கள் நடக்கலாம். ஆனால் இவர்கள் காட்டி இருப்பதைப் பார்த்தால் படத்தைப் பார்க்கும் யாருக்கும் ‘இனி உடம்பு சரி இல்லை என்றால் அரசு மருத்துவமனைக்குப் போகவே வேண்டாம். காட்டை வீட்டை விற்றாவது தனியார் அரசு மருத்துவமனைக்குப் போய் லட்ச லட்சமாகக் கொட்டுவதே மேல்’ என்றுதான் தோன்றும். இந்தப் படம் சம்மந்தப்பட்ட யாருக்கோ தனியார் மருத்துவமனைச் சங்கிலிகளை உருவாக்கும் திட்டம் இருக்கும் வாய்ப்பு உண்டு.

(படத்தில் சொல்லப்படுவது ஒருவேளை உண்மை என்றால் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் உள்ள குற்றவாளி ஊழியர்களை சுகாதாரத்துறை அமைச்சர் களையெடுக்க வேண்டும் )
பொதுவாக ஆளுங்கட்சியின், அரசின், அரசுத் துறைகளின் தவறுகளை , குற்றங்களை ஒரு திரைப்படத்தில் கதைப்போக்கிலோ , காட்சியிலோ , வசனத்திலோ வைக்கும்போது,
அதற்காக ஆள்வோர்கள் கோபித்துக் கொள்வார்கள் அல்லது முகம் சுளிப்பார்கள் . அவர்கள் செய்யாவிட்டாலும், செய்வார்கள் என்ற பயமோ தயக்கமோ படைப்பாளிகளுக்கு இருக்கும். அதற்காக அவர்கள் படைப்பில் தாமாகவே சமரசம் செய்து கொள்வார்கள்.
அதனால் படைப்பாளிகள் சொல்ல வேண்டிய விஷயத்தை சரியாகச் சொல்ல முடியாமல் போவது உண்டு . படைப்பும் பாதிக்கப்படுவது உண்டு .அவர்கள் எல்லாம் உதயநிதிக்கும் அருள் நிதிக்கும் மனமார, உளமார, ஆன்மா ஆர நன்றி சொல்ல வேண்டும் .

ஏனென்றால் , கலைஞரால் ஐம்பது வருடம் எதிரியாகக் கருதப்பட்ட புலவர் கலிய ‘பெருமாள் வாத்தியார்’ புகழ் பாடும் விடுதலை படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது . அருள்நிதி நடித்து வெளிவந்துள்ள இந்த திருவின் குரல் படத்தில் இப்படி .
ஆகவே, இனி வேறு படைப்பாளிகள் ஆளும் அரசை அரசுத் துறைகளை விமர்சித்து, அழுத்தமாக வீரியமாக தைரியமாக படம் பண்ணலாம்.
ஆளும் திமுக தரப்பில் யாராவது புருவம் நெறித்தால் அவர்களிடம் ”அன்பு அண்ணன்கள் உதயநிதி , அருள்நிதி காட்டிய வழியில்தான் நாங்களும் படம் எடுத்துள்ளோம்’ என்று சொல்லி விடலாம்.

இதுதான் இப்படி என்றால் இரண்டாம் பகுதியில் திரைக்கதை தேங்கி நிற்கிறது .ஏகப்பட்ட குழப்பம், லாஜிக் மீறல்கள். திரு கதாபாத்திரம் வேறு பல காட்சிகளில் அந்தக் காலப் படங்கள் போல வில்லன்களிடம் அடி வாங்கி மயங்கி மீண்டும் மீண்டும் எழுந்து அடிக்கிறான் . கிளைமாக்ஸ் வரை இதே கொடுமை. இதனால் ஆரம்பத்தில் மிரட்டும் வில்லன்கள், அப்புறம் அருவருப்புக்கு ஆளாகி கடைசியில் காமெடி பீஸ் ஆகிறார்கள் .
இதனால் திருக்குரல் தேவையற்ற கூக்குரலாகி நின்று விடுகிறது