Redhan-The Cinema People நிறுவனம் சார்பில் இந்தர் குமார் தயாரிக்க, அருண் விஜய், யோகி பாபு, தன்யா ஹோப், சஸ்முருதி வெங்கட், வித்யா பிரதீப் நடிப்பில்,
தடையறத் தாக்க, மீகாமன் போன்ற சிறப்பான படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி இருக்கும் படம் தடம் .
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் .
திரையிடப்பட்ட முன்னோட்டம் காதலுக்கும் , த்ரில்லுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து ஈர்ப்பாக இருந்தது .
கோபி நாத்தின் ஒளிப்பதிவு மிக சிறப்பு.

காதல் வந்த பெண்ணிடம் காபி சாப்பிடப் போலாமா என்று நாயகன் ஆங்கிலத்தில் கேட்கும் விதத்தை வைத்து ஒரு புதிர் போல உருவாக்கி இருக்கும் காட்சி அழகு.
பாடல்கள் இனிமையும் சிறப்பான படமாக்கலுமாக ஜொலிக்கின்றன இந்தப் படத்தில் அருண் ராஜா என்ற புது இசை அமைப்பாளரை அறிமுகப்படுத்தி இருக்கிறார் மகிழ் திருமேனி .
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் இந்தர் குமார், ” மகிழ் திருமேனியோடு பணியாற்றுவது மகிழ்வான அனுபவம் . படம் மிக சிறப்பாக வந்துள்ளது . அருண் ராஜா, மகிழ் திருமேனியை வாழ்நாள் முழுக்க மறக்கக் கூடாது .

காரணம் நாங்கள் ஐந்து மிக பிரபல இசை அமைப்பாளர்களை லிஸ்டில் வைத்து இருந்தோம். ஆனால் அனைவரையும் தாண்டி மகிழ் திருமேனி அருண் ராஜாவுக்கு வாய்ப்பளித்தார் ” என்றார் .

“எனக்கு வாய்ப்பளித்த மகிழ் சாரையும் தயாரிப்பாளர் இந்தர் குமார் , அருண் விஜய் அண்ணன் ஆகியோருக்கு நன்றி ” என்றார் அருண் ராஜா.
மதன் கார்க்கி பேசும்போது, ” மகிழ் திருமேனிக்கு பாட்டு எழுதுவது என்பது எப்போதுமே இனிமையான விஷயம் . அவரே தாமிழில் சிறந்த ஆளுமை உள்ளவர் .

எனவே நல்ல தமிழ் சொற்களை எழுத முடியும் . இந்தப் படத்திலும் அந்த சிறப்பு அரங்கேறி உள்ளது ” என்றார்.
நிகழ்ச்சியில் மகிழ் திருமேனி பேசும்போது, “இந்தப் படத்தின் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் . மிக சிறப்பான நடிப்பு.
நல்ல இயக்குனர்களின் தொடர் வழிகாட்டுதல்கள் இருந்தால் அருண் விஜய் தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகனாக உயர்வார் . அதற்காக தகுதி திறமை உழைப்பு அவரிடம் உண்டு .
அருண் ராஜா என்னை மட்டும் அல்ல .. தயாரிப்பாளர் இந்தர் குமாரையும் மறக்கக் கூடாது . படத்தில் மிக சிறப்பான பாடல்களை மட்டும் அல்ல..நல்ல பின்னணி இசையையும் கொடுத்து இருக்கிறார்.

நான் மதன் கார்க்கியின் ரசிகன் . ‘கவிதை எழுத மாட்டேன் . பாடல்கள்தான் எழுதுவேன்’ என்ற நிலைப்பாட்டில் இருப்பவர் அவர். ஆனால் இசையை எடுத்து விட்டுப் பார்த்தால்,
அவர் பாடல்களே கவிதை போலதான் இருக்கும் . இந்தப் படத்திலும் சிறப்பான பாடல்கள் கொடுத்துள்ளார் .
நாயகி தான்யா ஹோப் மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர் . அவரை பெண் போல நடக்க வைக்க ரொம்ப கஷ்டப்பட்டேன் . ஸ்மிருதி வெங்கட்டுக்கு கேமராவைப் பார்த்து வெட்கப் படவே வரவில்லை . வித்யா பிரதீப் நைஸ் .

மூன்று பேரும் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர் . மூவருக்கும் மீடியாக்களின் ஆதரவு வேண்டும்.
கோபி நாத்தின் ஒளிப்பதிவு மிக சிறப்பாக படத்துக்கு பலமாக இருந்துள்ளது .
காதல் , திரில், விசாரணை, மனித மனங்களின் பன்முக சிந்தனைகள், என்று பல விசயங்களை உள்ளடக்கிய படம் இது . அதே நேரம் மிக இலகுவான அழகான படமாக வந்துள்ளது . உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ” என்றார்.

அருண் விஜய் தன் பேச்சில் , ” நான் எப்போதுமே மகிழ் சாரிடம் என்னை நம்பி ஒப்படைப்பேன் . மற்றவற்றை அவர் பார்த்துக் கொள்வார் . எனக்கு எப்போதும் சிறப்பானதையே கொடுப்பார் . இப்போதும் அப்படியே கொடுத்துள்ளார் .
வெகு நாட்களாகவே அவரோடு மீண்டும் (முதல் படம் தடையறத் தாக்க) இணையும் முயற்சியில் இருந்தேன் ஆனால் கதை முழுமை பெறும் வரை அவர் வாய் திறக்க மாட்டார் . புன்னகைத்துக் கொண்டே இருப்பார் . இந்த முறையும் அதுவே நடந்தது .
அவர் தயாரான பிறகு ஆரம்பித்தோம். சின்சியராக உழைத்தோம் படம் மிக சிறப்பாக வந்துள்ளது ” என்றார் .
தடம் பதிக்கட்டும் தடம் !
