கம்பீரக் கண்ணீரில் தனி ஒருவன் வெற்றிச் சந்திப்பு

Thani Oruvan Thanks Meet Event Stills (35)

சமூக அக்கறை உள்ள கதை , பொறி பறக்க வைத்த திரைக்கதை, நெருப்பு வசனங்கள், அசத்தலான இயக்கம் , உணர்வுகளுக்கு உருவம் கொடுத்த ஒளிப்பதிவு, விறுவிறுப்பேற்றும் பின்னணி இசை, பொருத்தமான  சிறப்பான நடிப்பு இவற்றால் எல்லோரையும் அதிர வைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது தனி ஒருவன் .

Thani Oruvan Thanks Meet Event Stills (32)

படம் வெளியாகி பத்து நாள் கடந்த பின்னரும் ஹவுஸ்புல் ஆகிக் கொண்டிருக்கிறது . நிலைமையைப் பார்த்தால் சின்ன ஸ்பீட் பிரேக்கர் கூட இல்லாமல் குறைந்தது இன்னும் ஒருவாரம் எகிறும் போல இருக்கிறது இந்தப் படம் .

இந்த சமயத்தில்  மக்களுக்கும் நல்ல விமர்சனம் தந்த ஊடகங்களுக்கும் நன்றி சொல்ல பத்திரிக்கையாளர்களை சந்தித்தது தனி ஒருவன் படக் குழு .

Thani Oruvan Thanks Meet Event Stills (33)

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் பேசும்போது “தனி ஒருவன் படத்தில் நடித்த ஒவ்வொரு சிறு கதாபாத்திரத்துக்கும் பெயர் கிடைத்து இருக்கிறது . அந்த அளவு எல்லா கதாபாத்திரங்களையும் இயக்குனர் மோகன் ராஜா சிறப்பாக பயன்படுத்தி இருந்தார் . வெளியே வந்தால் ஆட்டோ டிரைவர்கள் எல்லாம் என்னைப் பாராட்டிக் கை கொடுக்கிறார்கள். இது என் வாழ்வில் மறக்க முடியாத படம்” என்றார்.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி பேசும் போது “

Thani Oruvan Thanks Meet Event Stills (19)

ஆரம்பத்தில் என்னை இயக்குனர் ராஜா பின்னணி இசைக்கு மட்டும்தான் என்று அழைத்தார். அப்புறம் பாடல்களும் கொடுத்தார் . இன்று எல்லோரும் பின்னணி இசையைப் பாராட்டும்போது சந்தோஷமாக இருக்கிறது. , இப்போது நான் ராஜா-  ரவி ஆகிய இரண்டு அண்ணன்களின் குடும்பத்தில் ஒன்றாகி விட்டேன் ” என்றார் .

தம்பி ராமையா பேசும்போது ” பொதுவாக நான் நடித்த படங்களை நான் தியேட்டரில் போய்ப் பார்ப்பது இல்லை . காரணம் பெரும்பாலும் நேரம் அமைவதில்லை . காரணம் சினிமாவுல எனக்கு இப்போதான் நேரம் வந்திருக்கு . அதை ஒழுங்கா பயன்படுத்திக்குவோம்னுதான் ஓடிக்கிட்டு இருக்கேன் . ஆனா இந்த தனி ஒருவன் படத்தை எல்லாரும் கொண்டாடுறத பார்த்து சந்தோஷப் பட்டு தியேட்டருக்குப் போய்ப் பார்த்தேன் .

Thani Oruvan Thanks Meet Event Stills (18)

ஒரு இடத்துல கூட யாரும் எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவுக்கு படத்தை உருவாக்கி இருந்தார் ராஜா . அப்புறம் ஜெயம் ரவியின் உழைப்பு . இந்தப் படத்துல டோட்டலா புதுசா மாறி இருந்தார் ரவி. இனி அவரை நம்பி எந்த இயக்குனரும் எப்படிப்பட்ட கேரக்டரும் கொடுக்கலாம் என்ற அளவுக்கு உயர்ந்து விட்டார் ” என்று பாராட்ட , எழுந்து நின்று தம்பி ராமையாவைப் பார்த்து நெகிழ்ச்சியோடு வணங்கினார் ஜெயம் ரவி .

இயக்குனர் மோகன் ராஜா எழுந்து வந்து பேச ஆரம்பித்தவர் சில நிமிடங்களில் பேச முடியாமல் அழ ஆரம்பித்தார் . அதை பார்த்து ஜெயம் ரவியும் அழுது விட்டார் .

ராஜா தனது பேச்சில் ” இதுவரை நான் எடுத்த படம் எல்லாமே ரீமேக் படங்கள் . அதனால என்னை கொஞ்ச பேர் நல்ல டைரக்டராவே பார்க்கல. எனக்கே நான் எந்த மாதிரி டைரக்டர் என்ற குழப்பம் இருந்தது . நான் என்ன பெருசா சாதிச்சுட்டேன் னு எனக்கே தோணுச்சு.

அந்த சமயத்துலதான் 2008 ஆம் வருஷம் இந்த தனி ஒருவன் படத்துக்காக ஏ ஜி எஸ் நிறுவனர் கல்பாத்தி அகோரம் கிட்ட அட்வான்ஸ் வாங்கினேன் . அப்போ அவர்  சொன்ன வார்த்தை ரீமேக் படம் வேணாம் சொந்தமா பண்ணுங்க என்பதுதான் . அப்படியே பண்ண முடிவு பண்ணேன்.

எங்கப்பா மோகன் மிகச் சிறந்த சினிமாக்காரர் . எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு . என்னோட பத்து வயசுல என்னை அவரோட மடியில உட்கார வச்சுகிட்டு தி கிரேட் எஸ்கேப் என்ற படத்தைப் பாக்க வச்சு இதுதான் ஒளிப்பதிவு இதுதான் எடிட்டிங் னு சொல்லிக் கொடுத்தார் . அவரோட எடிட்டிங் ரூம்லதான் நான் வளர்ந்தேன் .

எனக்கு சினிமா எல்லா வசதியும் கொடுத்தது . வசதியான வீட்ல பிறந்தவன் நான் . காரணம் எங்கப்பா சினிமாக்காரர் . இந்த சினிமா மூலமா மக்களுக்கு என்ன உருப்படியா கொடுத்தோம் என்ற கேள்வி என்னை கொன்னுக்கிட்டு இருந்தது .

Thani Oruvan Thanks Meet Event Stills (20)

அப்போதான் இந்த படம் ஆரம்பிச்சோம் . என்னை எல்லாரும் ஜெயம் ராஜான்னு கூப்பிட்டாங்க . ஆனா இந்த படம் முடிவான உடனே இந்தப் படத்து டைட்டில்ல,  என்னை உருவாக்கின என் அப்பாவோட பெயரும் வரணும்னு முடிவு பண்ணினேன் . அதனால ஜெயம் ராஜாவை மோகன்ராஜா மாத்திக்கிட்டேன் . எனக்கு ஜெயத்தை கொடுத்ததே என் அப்பா மோகன் தானே .

தயாரிப்பாளர் அகோரம் சாரோட மகள் அர்ச்சனா அண்மையில் இமிக்ரேஷன் செக்கிங்குக்கு போய் இருக்காங்க . அங்க இருந்த எல்லாரும் எழுந்து ஓடி வந்து அவருக்குக் கை கொடுத்து’ என்ன ஒரு சூப்பரான படத்தை கொடுத்துருக்கீங்க!’ன்னு பாராட்டினாங்களாம்.

பொதுவா அவங்க எல்லாம் யார் வந்தாலும் சீட்டை விட்டு எழ மாட்டங்க. எனக்கு போன் பண்ண அர்ச்சனா ” அவங்க எல்லாரும் எழுந்து ஓடி வந்து கை கொடுத்தாங்க . எத்தன கோடி கொடுத்தாலும் கிடைக்காத பெருமை இது ” ன்னு பூரிப்பா சொன்னாங்க .

இந்த பாராட்டுக்களை பலமா எடுத்துக்கிட்டு இன்னும் சிறப்பான படங்களை கொடுப்பேன் ” என்றார் ஜெயம்  ராஜா … இல்லை இல்லை மோகன் ராஜா .

அதே உணர்வில் நெகிழ்வில் கண் கலங்க பேசிய ஜெயம் ரவி “

Thani Oruvan Thanks Meet Event Stills (21)என்னை பாக்கற ரிப்போர்ட்டர்ஸ் எல்லாம் நடிகைகளை பத்தி , கேள்வி கேட்பாங்க . இல்லன்ன ஏதாவது காமெடியா கேட்பாங்க . நம்மகிட்டயும் உருப்படியா பேசற மாதிரி ஒரு படம் பண்ண மாட்டோமா ?ன்னு நினைப்பேன் . அந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த படம் இந்த தனி ஒருவன் .

பொதுவா சினிமாவுக்கு  விமர்சனம் வருவதை பார்க்கும்போது ‘என்ன இப்படியெல்லாம் எழுதறாங்க’ன்னு கஷ்டமா இருக்கும் . ஆனா இந்த தனி ஒருவன் படத்துக்கு ஒட்டுமொத்தமாக எல்லா மீடியாக்களும்  கொடுத்த ஆதரவை பார்த்து சிலிர்த்துப் போய்ட்டேன் .

‘நாம நல்ல படம் கொடுத்தா அவங்க நல்லபடியா எழுத தயாராத்தான் இருக்காங்க . நாம நல்ல படம் தராம அவங்க மேல வருத்தப்படுறதுல என்ன நியாயம்?’  என்னை நானே கேள்வி கேட்க வச்ச படம் தனி ஒருவன் .

என் முதல் படம் ஜெயம் . அதனால் என்னை எல்லாரும் ஜெயம் ரவின்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. ஆக,  ஜெயம் என்பது என்னோட விசிட்டிங் கார்டு. ஆனா இந்தத் ‘தனி ஒருவன்’ படம்  என் நெஞ்சுல குத்தின பச்சை . என் உயிர் உள்ள வரை உடல் உள்ளவரை இது அழியாது ” என்றார் .

கண்ணீரும் அழகாகத்தான் இருக்கிறது, கம்பீரத்தோடு வழியும்போது!

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →