ஸ்ரீ புவல் மூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் சார்பில் சுஷில் குமார் ஜெயின் மற்றும் உஷா தயாரிக்க,
அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி, ராம்ஸ், பிரதீக், ஆறு பாலா , பாவல் நவகீதன், மைம் கோபி மற்றும் பலர் நடிப்பில் ,
ஹரி உத்தரா என்பவர் இயக்கி இருக்கும் படம் தெருநாய்கள் . வசூல் வேட்டையாடுமா ? பார்க்கலாம் .
மன்னார்குடியில் ஐந்து நபர்கள் (அப்புக்குட்டி, ராம்ஸ், ஆறு பாலா , பிரதீக் ) ஒன்று சேர்ந்து , தேர்தல் முடிந்து,
வாக்கு எண்ணிக்கைக்குக் காத்திருக்கும்போது , வாக்குப் பெட்டிகளை தூக்குகின்றனர் .
சிட்டிங் எம் எல் ஏ வுக்கும் பணக்கார சேட் ஒருவருக்கும் இடையே உள்ள பகையை திட்டமிட்டு வளர்க்கின்றனர் .
அவர்களுக்குள் சண்டை பெரிதாகும்போது , எம் எல் ஏ வைக் கடத்துகின்றனர் .
சேட்டுதான் கடத்தி இருப்பான் என்று எம் எல் ஏ வுக்கு விசுவாச போலீஸ் (மைம் கோபி) நினைக்க,
இரண்டு குழுவும் அடித்துக் கொண்டு சாகட்டும் என உயர் போலீஸ் அதிகாரி நினைக்கிறார். சரி எம் எல் ஏவைக் கடத்தக் காரணம்?
மீத்தேன் திட்டம் கொண்டு வரக் காரணமான கட்சியைச் சேர்ந்தவர் அவர். பணத்துக்காக அதில் அதீத ஈடுபாடு காட்டியவர் .
விவசாயிகளின் நிலங்களைப் பறித்து எரிவாயு கேஸ் குழாய் பதிக்கக் காரணமாக இருந்தவர் . 
எம் எல் ஏவை கடத்தும் இந்த ஐந்து நபர்களுக்கும் பலகாரக் கடை ஒன்றில் வேலை கொடுத்து சொந்தத் தம்பிகள் போல பார்த்துக் கொண்ட ,
ஒரு நல்லவரின் (இமான் அண்ணாச்சி ) நிலத்தை குழாய் பதிப்புக்க எம் எல் ஏ வாங்க நினைக்க, விவசாயத்தை நேசிக்கும் அவர் கொடுக்க மறுக்க ,
அவருக்கும் அவர் அண்ணனுக்கும் சண்டை மூட்டியதோடு அவரை சேட்டு கொலை செய்யவும் காரணமாக இருந்தவர் இந்த எம் எல் ஏ .
ஐவரில் ஒருவனின் காதலும் இதில் பாதிக்கப்படுகிறது .
கடத்திய எம் எல் ஏ யை ஒரு நிலையில் எரித்துக் கொல்கிறார்கள் . அவர்களைக் கண்டு பிடிக்கும் போலீஸ் ஐவரையும் என்ன செய்தது என்பதே இந்த தெரு நாய்கள் .
மீத்தேன் வாயு எடுப்பதின் அபாயம், எரிவாயு குழாயை விவசாய நிலங்களில் பதிப்பதால் வாழ்விழந்த விவசாயிகள், குழாய் வெடித்து இறக்கும் அப்பாவிகள்,
மலடாகும் நிலம், தாய்ப்பால் உட்பட உணவு வழியே எல்லாமும் விஷமாகும் அவலம் இவற்றை சில காட்சிகளில் சொல்கிறார்கள் .
அது இந்தப் படத்தின் பாரட்டுக்குரிய அம்சம் . ஆனால் அது மட்டுமே !
அதைக் கூட திரை வழியே அழுத்தமாக பார்ப்போர் பதைத்துப் பயந்து விழிப்புணர்வு பெறும் வகையில் சொல்லவில்லை . ஜஸ்ட் வசனமாக வந்து போகிறது
மேற்சொன்ன விசயங்களில் சில கட்டுரைகள் ஏற்படுத்திய பாதிப்பைக் கூட படம் ஏற்படுத்தவில்லை .
இதைச் சொல்ல வருவதற்குள் அரசியல்வாதி, ரவுடி, போலீஸ் கட்ட பஞ்சாயத்து , கள்ளக் காதல் , ஒரு வழக்கமான நல்ல காதல் , என்று எங்கெங்கோ சுற்றுகிறது கதை .
அட்லீஸ்ட் எம் எம் ஏவைக் கொல்வதையாவது மீத்தேன் முதலிய இயற்கை வாயுக் குழாய் விபத்தில் சாவது போல,
அல்லது அதனால் விஷமான தண்ணீர் குடித்து சாவது போல காட்டி இருந்தால், அது அர்த்தமுள்ளதாக இருந்து இருக்கும் . அதுவும் செய்யவில்லை .
வெற்றிப் படமாக்குவதற்கு வெறி பிடித்தது போல உழைத்து இருக்க வேண்டும் .