”தமிழிலிருந்துதான் கன்னடம் தோன்றியது”- ‘திருக்குறள் ‘ பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன்

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது  திருக்குறளை வைத்து  ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை  A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
 
இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணா பாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி,  இசையமைத்துள்ளார்.
 
கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடை வடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர். செம்பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான  தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது.   ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
 
இம்மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 
 
விழாவில் இயக்குநர் ஞானராஜசேகரன் பேசியபோது, “திருக்குறள் நம்முடைய தமிழ் சமூகத்தின் பெருமை என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் திருக்குறள் அடிப்படையாக வைத்து ஒரு படம் எடுப்பது  என்பது ஒரு மிகப்பெரிய சவால். 2 அடி குறளை வைத்து அதை படமாக ஒரு  உலகத்தை உருவாக்குவது அதை விஷுவலைசேஷன் செய்வது மிகப்பெரிய சவால். அதை இயக்குநர் பாலகிருஷ்ணன் செய்துள்ளார். அதறக்காகவே  அவருக்கு நான் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.  
 
இன்று இருக்கிற தமிழ் சினிமாவின் சூழல் உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும். சினிமான்றதே கதை சொல்லல் தான், ஆனால் நாம் கதை சொல்லல மறந்துட்டோம், நாம்  என்ன நினைக்கிறோம்னா ஒரு டெக்னிசியன் டெக்னிக்கலா அசத்திட்டா போதும் கதை அவசியமே கிடையாதுனு கோடி கோடியா செலவு பண்ணி அந்த செலவு பண்ண கோடி வசூலா வரணும்ன்றதுதான் லட்சியமா வைத்துக்கொண்டு இருக்கிறோம்.  இப்படியான சூழலில் அர்த்தமுள்ள படைப்பை எடுப்பது மிகப்பெரிய சவால்.  
 
டூரிஸ்ட்ஃபேமிலி மாதிரி படங்கள் எல்லாம் ஏன் மக்களை கவருது, மக்கள் அவர்களுக்கு அதுதான் தேவை.  தோசை, இட்லி மாதிரி சாப்பிடும் இந்த ஆட்களுக்கு  ஒரு கவர்ச்சியான பர்கர விளம்பரம் பண்ணி வித்துகிட்டு இருக்கோம். சினிமா  ஒரு குதிரை பந்தை மாதிரி ஓடிட்டு இருக்கு. இங்க வித்தியாசமான படங்களுக்கு எப்பவும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. மலையாளத்தில் தான் நல்ல படம் வருவதாக சொல்கிறார்கள், ஆனா கேரளாவில் இருபது வருடத்துக்கு மேல் ஆட்சிப் பணியில் இருந்திருக்கிறேன்  . மலையாளத்தை விட தமிழ் ரசிகர்கள் தான் வித்தியாசமான படத்தை அங்கீகரிக்கிறார்கள். .
 
இங்க எல்லா ஊர்லயுமே நல்ல ரசிகர்கள் இருக்காங்க. ஆனா அவங்கல்லாம் ஒன்னா சேர்ந்து இப்ப தியேட்டருக்கு வருவதற்குள் படம் போயிடும். சினிமாவில் அப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருக்கு. இது மாதிரி பிரச்சனைகளுக்கு நடுவில் என்னை மாதிரி சினிமால  ஒரு குரூப் இருக்கிறார்கள்  அதுல மிஸ்டர் பாலகிருஷ்ணன் ஒருத்தர்ன்றதுல ரொம்ப பெருமையா இருக்கிறது. இப்படிப்பட்ட இப்படிப்பட்ட ஆட்கள் ரொம்ப பேர் வரணும். ரொம்ப ரொம்ப நுட்பமா பல விஷயங்களை ரசிக்கிற ஒரு சமூகம் நம்ம சமூகம் . இந்த சமூகத்தில் நிச்சயமா இது மாதிரி படங்களுக்கு ஒரு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எல்லோரும் வரவேற்பு அளிக்கணும்னு வேண்டிக்கொண்டு என்னுடைய சிறிய உரையை நிறைவு செய்கிறேன்”  என்றார்.
 
இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசியபோது, ” இயக்குநர்  பாலகிருஷ்ணனைப் பார்த்தால் உளவுத்துறை அதிகாரி போல் தான் இருப்பார்.  ரஷ்ய உளவுத்துறையா?  ராவா ? அல்லது மொசார்ட்டா ?  அப்படின்னு அவரிடம் கேட்டுக்கிட்டே இருப்பேன்,  ஏன்னா அவரைப்  பார்த்தால் ஒரு இயக்குநருக்கான எந்த அடையாளமும் இருக்காது.  மிகச்சிறந்த ஒரு பண்பாளருக்கான அடையாளம் இதுவாகத்தான் இருக்கும்.  நிறை குடம் எப்போதும் தளும்பாது. 
 
இந்த படத்தினுடைய கேமராமேன் பற்றி சொல்லி ஆக வேண்டும். ஒளிப்பதிவாளர் எட்வின் பிரமாதமான வேலை செய்துள்ளார்.
இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து  பெண்களுக்கும்  என்னுடைய மனமார்ந்த நன்றியும் வணக்கமும். ஜாக்கெட் இல்லாம நடிக்கிறது இன்றைய நிலையில் சாத்தியமில்ல, கிழவிகள் கூட நடிக்க வரவில்லை, ஆனால் இந்த படத்தில் அத்தனை பேரும் அந்த கேரக்டர உணர்ந்து, அந்த கேரக்டருக்கு நம்ம இப்படி இருக்கணும்னு நினைத்து, ஜாக்கெட் இல்லாமல் நடித்துள்ளார்கள். உங்களுக்கெல்லாம் இந்த தமிழ் சினிமா ரொம்ப கடமைப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தின் தான் இசை தனிச்சிறப்பு கொண்டது, இளையராஜா பற்றி புதிதாக சொல்லத் தேவையில்லை.  இசைஞானி மட்டும் தான் பெரிய படங்களுக்கும், சின்ன படங்களுக்கும் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர். அதுக்காகவே அவர கையெடுத்து கும்பிடலாம். தமிழ் சினிமா 30 வருஷம் அவராலேயே வாழ்ந்தது. அவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இந்தப் படத்தில் நானும் ஒரு சின்ன ரோல் செய்திருப்பது பெருமையாக உள்ளது. நக்கீரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். கொட்டாச்சி மிகச்சிறந்த ஒரு கலைஞன். அவருக்கு வாழ்த்துக்கள். 
 
இப்படத்தில் திருவள்ளுவரா கலைச்சோழன் நடித்துள்ளார். மிக அருமையா நடித்துள்ளார். இந்த மாதிரி படங்களுக்கு உதவி பண்றது தான் அறம். வையத்துல் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். அந்த வாழ்வாங்குன்றது என்ன தெரியுமா? நீங்க அறம் உள்ளவர்களுக்கு,  சிறந்ததற்கு உதவி செய்யறதுதான். அப்படி செஞ்சு வாழ்ந்துட்டீங்கன்னா நீங்க கடவுள்ட்ட போய் கடவுள் மாதிரி வாழலாம் “என்றார். 
 
தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் திரு வி. சேகர் பேசியபோது, ” திருவள்ளுவர் பற்றி நாந்தான் படம் எடுத்துருக்க வேண்டும்,  திருவள்ளுவர் கலைக்கூடம்னு வச்சிருக்கறவன் நான்தான்,  அந்த வாய்ப்பை சகோதரர் பாலகிருஷ்ணன் செய்திருக்கிறார்  அவருக்கு ரொம்ப நன்றி.  
 
 நான் படம் செய்துகொண்டிருந்த போது,  கலைஞர் அவர்கள் வந்து குறளோவியத்தை படமாக நீதான் எடுக்கணும்னு சொல்லி என்னை கூப்பிட்டுச் சொன்னார். ‘ நான்தான் திருவள்ளுவரை விடாம சொல்லிட்டு இருக்கிறேன் அதுக்கு அடுத்து பாலசந்தர் சொல்லிட்டு இருக்கார். அப்புறம் நீ, அதனால நீதான்  எடுக்கணும்’ என்று சொன்னார். அந்த காலகட்டத்தில் நான்  சினிமாவில் ரொம்ப பீக்குல் இருந்தேன். அதாவது பூஜை போட்டாவே, கோடி கோடியா வித்துடும். அப்போது இந்தப் படம் செய்தால் இடைவேளை விழுந்துவிடும் என்பதால்  கலைஞரிடம், ‘மற்ற படங்கள் முடித்த பிறகு செய்கிறேன்’ எனச் சொன்னேன் ஆனால் அது நடக்கவில்லை. 
 
இப்போது திருக்குறள் படமாக வந்திருப்பது மகிழ்ச்சி. நான் 19 வயசுல இருந்து திருவள்ளுவர் படத்தை வீட்டில் வைத்துள்ளேன்.  என் தயாரிப்பு நிறுவனத்திற்கு, திருவள்ளுவர் பெயர் வைத்ததால் நான் கலைப் படமாகத்தான் எடுப்பேன் என விநியோகஸ்தர்கள் படம் வாங்க மறுத்தார்கள். படம் ஓடாவிட்டால் திருவள்ளுவரை பழிப்பார்கள் என எல்லோரும் சொன்னார்கள். நம்மால் திருவள்ளுவர் பேர் கெடக்கூடாது என விழுந்து விழுந்து படம் எடுத்தேன். படம் வந்து ஹிட்டான பிறகு, திருவள்ளுவர் பேர் உடனே வெற்றிகரமான பெயராக மாறிவிட்டது. எனக்கு ரசிகர் மன்றங்கள் உருவான போது,  அத்தனையும்  திருவள்ளுவர் நற்பணி மன்றமா மாத்துனேன். 
 
உலகத்துல இருக்கக்கூடிய  குவாலிஃபிகேஷன்களிலேயே  ஃபேமிலி மேன் என்ற ஒரு குவாலிஃபிகேஷன்தான் உலகத்திலேயே உயர்ந்தது. குடும்பம் தான் முக்கியம்ன்னு  சொன்ன திருவள்ளுவர் எனக்கு ரொம்ப பிடித்துப் போனார். இயக்குநர் பாலகிருஷ்ணன் காமராஜர் படம் எடுக்கிறார் அடுத்து,  திருவள்ளுவர் படம் எடுக்கிறார். ஏதாவது ஹீரோ வைத்து எடுத்தால் பணம் கிடைக்கும்,  திருவள்ளுவர் படம் எடுத்தால் எதுவும் கிடைக்காது. 
 
இன்றைக்கு கிறிஸ்துவ நாட்டுல போய்,  ஒரு முஸ்லிம்கிட்ட  குர்ஆன் நூலை கொடுங்க,  வாங்க மாட்டாங்க,  ஐயா நாங்க கிறிஸ்டியன்ஸ் ஒரு பைபிள் கொடுங்க வாங்கிக்கிறோம்,  குர்ஆனை வேற யாராவது முஸ்லிம்ஸ் கிட்ட கொடுங்கன்னுவாங்க,  ஒரு முஸ்லிம் கிட்ட போயி பைபிளை கையில கொடுங்க,  இதை வாங்கிக்கங்கன்னா ஐயா நாங்க கிறிஸ்டின்ஸ், நாங்க வந்து குர்ஆன்ல படிக்கிறது இல்லை,  பைபிள் கிறிஸ்டியன்ஸ் கிட்ட கொடுன்னுவாங்க, ஒரு இந்துகிட்ட போய் கொடுத்தா, நாங்க எதையுமே தொட மாட்டேன்னுவாங்க,  அவங்க ஆனா மூணு பேரையும் கூப்பிட்டு,  ஒரே ஒரு நூலை கொடுத்தீங்கன்னா மூணு பேரு வாங்குவான் அதுதான் திருக்குறள்.  இந்த படம் வெற்றி படமாக அமையணும். தயாரிப்பாளர் போட்ட காசு திரும்பி வரணும். இந்த டீம் வந்து அற்புதமான டீம். அனைவருக்கும் நல்ல பேர் கிடைக்கனும். “என்றார் 
 
 இயக்குனர் A.J பாலகிருஷ்ணன் பேசியபோது, ”  குரோசோவா சொல்லுவார் ஒரு மோசமான திரைக்கதையை கொண்டு போயிட்டு நல்ல படத்தை எடுக்க முடியாதுன்னு .  இந்தப் படத்தின்  திரைக்கதையை செம்பூர் ஜெயராஜ் தான் எழுதினார் அவர் தான்  காமராஜ் படத்திற்கும் எழுதினார்.  அவர் ஒரு திராவிட இயக்க போராளி. இந்த படம் உருவான கதையை ரொம்ப சுருக்கமா சொல்லி விடுகிறேன். 
திருக்குறளை படமாக  பண்ணுங்கன்னு ஒருத்தர் வேண்டுகோள் வைததார்.  எப்படி 1330 குறளை படமாக எடுக்க முடியும்னு யோசித்த போது எங்களுக்கு  முன்னுதாரணமா இருந்து கலைஞருடைய குறளோவியம்  எதை ஓவியமா பண்ண முடியுமோ?  அவர் அதை புத்தகமா போட்டுட்டார். அதிலிருந்து நாங்க எதையெல்லாம் காட்சிப்படுத்த முடியுமோ?  அந்த குறள்கள் எல்லாம் எடுத்துக்கிட்டோம். இந்த படத்துக்கான பணம் அது அதன் போக்குல வந்தது. இதுல எந்த சிரமமுமே எனக்கு இல்லை.
 
 வாழ்க்கையில பல விஷயங்கள் அதன் போக்குல தான் அதுவாக  நிகழும். படம் செட் போட்டோம் அந்த நாள் முழுக்க மழை, செட் முழுக்க மழை, இடும்பைக்கு இடும்பை குறள் தான் ஞாபகம் வந்தது.  அதைத்தாண்டி படம் முடித்தோம்.  அப்புறம் இளையராஜா சார் கிட்ட போனோம். படத்தை பார்த்து  அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அற்புதமான இசையை தந்தார். இந்த படம் உருவாக ரெண்டு பேர்   முக்கியமான காரணம்,  விஐபி  விஸ்வநாதன் ஐயா வந்து ரொம்ப சிக்கனமான மனிதர் அவர் இதுக்கு உதவி செய்தார். மதுரை டி. பிபி ராஜேந்திரன் உதவி செய்தார். இருவருக்கும் நன்றிகள். தனலட்சுமி வாசுகியா நடித்துள்ள பெண்,  அவருக்கு  முதல் படம்,  அவங்க வாழ்க்கையில முன்னுக்கு வரணும்.  இந்த துறையில ஜொலிக்கணும்.  கலைச்சோழன் நான் பேச வேண்டியதை பேசி விட்டார்:  நன்றாக நடித்துள்ளார். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன் பேசியபோது, ” எனக்கு முன்னர் பேசிய அனைவரும் திருக்குறளை பற்றியும்,  திருவள்ளுவரை பற்றியும் மிக ஆழமாக நுட்பமாக பல்வேறு கருத்துக்களை நம் முன்னால் எடுத்து வைத்திருக்கிறார்கள். இயக்குநர் அவர்கள் ஏற்கனவே இரண்டு படங்களை தயாரித்து, இயக்கி வெளியிட்டிருக்கிறார். ஒரு படத்தின் பெயர் காமராஜ், இன்னொரு படத்தின் பெயர்  வெல்கம் பேக் காந்தி, என்று இரண்டு மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரித்த பெருமைக்குரியவர். 
 
இந்த திரைப்படத்திற்கு ஒரு மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து பெயர் சூட்டி இருக்கிறார். காமராஜ், காந்தி என்று பெயர் வைத்தவர், இந்த திரைப்படத்திற்கு திருவள்ளுவர் என்று பெயர் வைத்திருக்கலாம். ஏன் அப்படி வைக்கவில்லை என்று நான் யோசித்துப் பார்த்தேன். இதற்கு திருக்குறள் என்று அவர் பெயர் சூட்டி இருக்கிறார். கருத்தியலுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். என்கிற பார்வை அவரிடத்தில் மேலோங்கி இருப்பதாக நான் பார்க்கிறேன். திருவள்ளுவரை விடவும் அவர் முன்வைத்த வாழ்வியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  எனவே, திருக்குறள் என்றே இதற்கு பெயர் வைப்போம் என அவர் முடிவெடுத்திருக்கலாம் என்று நான் நம்புகிறேன். இந்த பார்வை பாராட்டுதலுக்குரியது.  இந்த சிந்தனை போற்றுதலுக்குரியது.  
 
தனி நபரை முன்னிறுத்துவதை விட, அவர் சொன்ன கருத்தியலை, முன்னிறுத்த வேண்டும், உயர்த்தி பிடிக்க வேண்டும், வெகு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும், என்கிற பார்வை முக்கியம்.  நம் சமகாலத்தில் வாழ்ந்து,  மக்களுக்கு தொண்டாற்றி பெரும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமைகள்,  பெருந்தலைவர் காமராஜர் மகாத்மா காந்தியடிகள். ஆகவே அவர்களை முன்னிறுத்துவது, இன்றைக்கும் தேவையானதாக இருக்கிறது. 
 
ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியவர், வாழ்ந்தவர் திருவள்ளுவர். இதிலே என்ன ஒரு உண்மை, நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை என்றால்? திருவள்ளுவர் என்கிற பெயர் திருக்குறளை எழுதியவர் என்பதற்கு ஆதாரம் இல்லை, அவர்தான் எழுதினார் என்பதற்கு ஆதாரம் இல்லை, அந்த நூலை எழுதியவர் பெயர் இதுதான் என்பதற்கு ஆதாரம் இல்லை, அவருடைய பிறப்பு அவருடைய வாழ்க்கை பற்றி, நாம் கேள்விப்படுகிற அனைத்தும் அவ்வப்போது அறிஞர் பெருமக்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை தவிர காமராஜரை போல உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வரலாறு இல்லை காந்தியடிகளைப் போல இந்த தேதியில் பிறந்தார், இந்த தேதியில் வாழ்ந்தார் மறைந்தார், என்று சொல்லுகிற உறுதிப்படுத்தப்பட்ட தரவுகள் எதுவும் இல்லை.  இப்போது நம்முடைய ஆட்கள் திருவள்ளுவர் எந்த சாதியாய் இருக்கக்கூடும், எந்த மதமாய் இருக்கக்கூடும், என்றெல்லாம் ஆராய்ச்சி செய்கிறார்கள். 
 
திருவள்ளுவர் மதச்சார்பின்மை கோட்பாட்டில் உறுதியாக இருந்தார் என்பதை இயக்குனர் சேகர் அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தார். அதுதான் முன்னிறுத்தப்பட வேண்டிய செய்தி. அதுதான் கருத்தியல் ஆகவேதான் இயக்குனர் A. j.பாலகிருஷ்ணன் அவர்கள் திருவள்ளுவர் யார் என்பதை விட,  திருக்குறள் என்ன என்பதுதான் மிகவும் முதன்மையானது, அது என்ன சொல்லுகிறது அதுதான் நமக்கு மக்களுக்கு போய்ச் சேர வேண்டிய செய்தி, ஆகவேதான் திருவள்ளுவர் என்று இந்த திரைப்படத்திற்கு  பெயர் சூட்டாமல், ஒரு கதாநாயகனை ஆராதிக்காமல், அந்த நூல் சொல்லுகிற வாழ்வியலை, கருத்தியலை, கோட்பாட்டை, பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற, மிக உயர்ந்த பார்வையோடு இதனை அவர் அணுகி இருக்கிறார் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.
 
 1812 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக இது அச்சுக்கு  வந்தது என்ற தரவுகள் நமக்கு கிடைக்கின்றன. அப்படி என்றால் ஒரு 200 ஆண்டுகளுக்கு முன்னர்,  அதற்கு முன்பு வரையில் இது அச்சுக்கு வரவில்லை. ஓலைகளில் இருந்தது, ஓலைகளில் இருந்த திருக்குறளை, அன்றைய சென்னை மாகாணத்தின் அதிகாரியாக இருந்த  பிரான்சிஸ் வைட் எல்லிஸ் வசம்  கொண்டு போய் கொடுத்தவர் அயோத்திதாசப் பண்டிதருடைய தாத்தா கந்தப்பன் என்பவர் அவர்தான் தன் வீட்டில் பரனில் இருந்த ஓலைச்சுவடிகளை கொண்டு போய் எல்லிஸ் துரையிடம் கொடுத்து அவர் அதை படித்து அதை அச்சுக்கு கொண்டு வந்தார்,  என்று வரலாற்று தரவுகள் நமக்கு கூறுகின்றன. 
 
இன்றைக்கு கமல்ஹாசன் அவர்கள் பேசிய ஒரு பேச்சுக்கு பெரிய எதிர்ப்பு. கர்நாடகாவிலே அவருடைய திரைப்படத்தையே திரையரங்குகளில் ஓட்ட விட மாட்டோம் என்றெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தமிழிலிருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் 1812ல் எல்லிஸ் அவர்களும் 1852ல் ஹென்றி  என்பவரும்,  அவர்கள் எல்லாம் பிரிட்டிஷ் குடிமக்கள் ஆங்கிலேயர்கள் அவர்கள் தமிழை கற்று, தமிழை ஆய்ந்து, தமிழ் அறிஞர்களோடு உரையாடி அவர்கள் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளை எல்லாம் ஒப்பீடு செய்து அதன் அடிப்படையில் அவர்கள் முன்வைத்த கருத்து இந்த மொழிகளுக்கெல்லாம் மூல மொழி தமிழ் என்ற கருத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.. எல்லிஸ் அவர்கள் வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்தவரான   ஹென்றி  என்பவரும்,  அவருக்கு பிறகுதான் எல்லிஸுக்கு பிறகு 40 ஆண்டுகளுக்கு பிறகு 1856லே கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்  எழுதுகிறார்
 
 இந்த மொழிகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்கிற செய்தியை தாண்டி இந்தியாவில் பேசப்படக்கூடிய பல்வேறு மொழிகளில் மிகவும் தொன்மை வாய்ந்தது சிறப்புக்குரியது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள்தான் என்கிற செய்தியையும் சொல்லுகிறார்கள்.  அப்போது  பாலிமொழி,  சமஸ்கிருதம் எல்லாம் இருந்தது, இன்றைக்கு பாலி மொழியை பேச யாருமில்லை பௌத்தம் புத்தரே பேசிய மொழி பாலிமொழி என்று அறியப்படுகிறது.  இப்போது இப்போதைக்கு அது பேச்சு வழக்கிலே இல்லை சமஸ்கிருதம் சான்ஸ்கிரிட் இன்றைக்கு பேச்சு வழக்கிலே இல்லை.  அந்த சமகாலத்தில் தோன்றிய  அல்லது அதற்கு முன்பு தோன்றிய வரலாற்று தரவுகளை கொண்ட தமிழ் மொழி இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கிறது.  
 
உலகம் தழுவிய அளவில் வலிமை பெற்றிருக்கிறது. புதுமையை உள்வாங்கி இருக்கிறது தமிழ் மொழிக்குள்ள சிறப்பு தொன்மையும் புதுமையும் இணைந்த ஆளுமை மிக்க ஒரு மொழி பல மொழிகள் தோன்றி வளர்ந்து முதுமை அடைந்து மறைந்து போய்விட்டன, தமிழ் நிலைத்துள்ளது. இன்றைக்கு கணினி மொழி வந்துவிட்டது. அது புதுமை. கணினிக்கு ஏற்ப தமிழ் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கான செறிவை பெற்றிருப்பதால் செம்மை அடைந்திருப்பதால் அது செம்மொழி. 
 
தமிழர்களின் மாண்பை பறைசாற்றுகிற எத்தனை படைப்புகள் இருந்தாலும் அந்த 18 கீழ்க்கணக்கு
நூல்களிலே,  திருக்குறள் மட்டும்தான் உலகளாவிய நூற்றுக்கணக்கான மொழிகளில், மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பெற்ற பெருமைக்குரிய  நூல், திருக்குறள்.  
 
அண்ணன் வி சேகர் அவர்கள் சொன்னதை போல இது ஒரு மதம் சார்ந்த நூலாக இருந்திருந்தால், அந்த மதத்திற்குரியவர்கள் மட்டும்தான் போற்றி இருப்பார்கள், போற்றிக் கொண்டிருப்பார்கள், பைபிள் கிறிஸ்தவர்களுக்குரியது, அதனால் ஆனால் உலகத்தில் எந்தெந்த மொழியை பேசுகிறவர்களும் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் அந்த மொழியிலே பைபிளை மொழியாக்கம் செய்கிறார்கள். குர்ஆன் இஸ்லாமியர்களுக்குரியது, இஸ்லாமியர்கள் உலகம் தழுவிய அளவில் வாழ்கிறார்கள், அவர்கள் என்னென்ன மொழிகளை தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்களோ, அந்த மொழிகளில் குர்ஆனை மொழியாக்கம் செய்து கொள்கிறார்கள்  அனைத்து பிறமொழிகளிலும் மொழியாக்கம் செய்ய வேண்டிய தேவை வருகிறது. 
 
 ஆனால் அப்படி எந்த மதத்தையும் சாராமல், ஆனால் எல்லா மொழிகளை சார்ந்தவர்களும், ஒரு மொழியை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள், ஒரு நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் என்றால் அந்த பெருமைக்குரிய நூல் திருக்குறள் மட்டும்தான். இது மனித குலத்துக்கே பொதுவான நூல் உலக பொதுமறை அப்படித்தான் திருக்குறளை நாம் முன்னிறுத்த வேண்டியது இருக்கிறது. இதை உயர்த்தி பிடிக்க வேண்டிய ஒரு பார்வை நமக்கு வேண்டும். அந்த பார்வை நம்முடைய இயக்குனர் ஏஜே பாலகிருஷ்ணன் அவர்களுக்கு இருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. அதனால்தான் இந்த திரைப்படத்திற்கு திருக்குறள் என்று அவர் பெயரிட்டிருக்கிறார். தலைப்பிட்டுருக்கிறார். “என்றார். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *