OPRP புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரிக்க , ரங்கராஜ் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்க, ஸ்ருதி நாராயணன் , நான்சி, டெல்லி கணேஷ், சாய் தீனா, அறந்தாங்கி நிஷா, ஸ்ரீலேகா ராஜேந்திரன், பிர்லா போஸ் நடிப்பில் வந்திருக்கும் படம் .
கிராமம் ஒன்றில் விவசாய நிலங்களை அழிக்கும் திட்டத்துக்கு ஒரு வடக்கத்தி முதலாளி திட்டமிட , அதை எதிர்க்கும் ஊர் நபரை ( ரங்கராஜ்) அந்த முதலாளி அநியாயமாக கொலை செய்கிறான் .
கர்ப்பமாக இருக்கும் அவன் மனைவியும் (ஸ்ருதி நாராயணன்) குழந்தை பெற்றுக் கொடுத்து விட்டு செத்துப் போகிறார். தாய்மாமனால் வளர்க்கப்படும் அந்தக் குழந்தை படித்து சென்னையில் போலீசாகி , அடிக்கடி போகும் அனாதை இல்லத்துப் பெண்ணை (நான்சி) திருமணம் செய்து கொண்டு அங்கு இருந்தே ஓர் அனாதைக் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க , மனைவி கர்ப்பமாகவும் ஆகும் சூழலில் ,
ஒரு திருநங்கை தாசில்தாரை சிலர் கொலை செய்ய, விசாரணைக்கு indha இன்ஸ்பெக்டர் போக, அதன் பின்னால் பெரிய கைகள் இருக்க, இன்ஸ்பெக்டர் குடும்பத்தையே தீர்த்துக் கட்ட அந்தப் பெரிய கை முயல, , அந்தப் பெரிய கைக்கும் இன்ஸ்பெக்டரின் அப்பாவைக் கொன்ற வடக்கத்தி முதலாளிக்கும் ஒரு இணைப்பு இருக்க , அப்புறம் நடந்தது என்ன என்பதே படம் .
ஆரம்பத்தில் கர்ப்பிணி மனைவியை ஆட்டோவில் கொண்டு போகும் கணவன் , அவனை மறித்துக் கொல்ல முயலும் சிலர் , அதன் விளைவுகள் என்று .. அந்த எளிமையும் தனிமையான பின்புலமும் கவனிக்கும் படி சிறப்பாகவே இருந்தன. .அடுத்து வந்த காவல் நிலையக் காட்சிகள் , விசாரணை எல்லாம் கூட மிக இயல்பாக – பாராட்டும்படியான படமாக்கலில்தான் இருந்தன. அனாதை இல்லம் குடும்பம் என்று வந்த பிறகும் கூட கணவன் மனைவி மகள் என்று சில காட்சிகள் நன்று .
ஆனால் இடைவேளைக்கு கொஞ்சம் முன்பு தொங்க ஆரம்பிக்கும் படம் போகப் போக அறுந்து கீழே விழுந்தே விட்டது .
உடை அணிந்து கேமரா முன் நிற்கும் போது தான் உண்மையிலேயே அழகாக இருக்கிறார் ஸ்ருதி நாராயணன். தனக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டரை பெரிதாகக் குறைகள் இல்லாமல் – மிக முக்கியமாக சிரத்தையோடு – நடித்து இருக்கிறார் .
உயரம், தனித்தன்மை வாய்ந்த குரல், பதற்றம் காரணமாக சட் சட்டென்று அரைகுறையாக மாறாமல் நிதானமாக பரவும் முக பாவனைகள் என்று… பாராட்டும்படி நடித்து இருக்கிறார் .
சின்ன வயசுதான் . இன்னும் கொஞ்ச காலம் பொறுமையாக, கண்ணியமான ஆடிஷன்கள் மூலமே வாய்ப்புத் தேடி இருக்கலாம் . சரி போகட்டும் . நடந்ததை மாற்ற முடியாது . கடந்து போகட்டும் . இனி அவருக்கு நல்லதே நடக்கட்டும் .
மலையாள மனைவியாக வரும் நான்சியும் ‘ஐ ஸீ..” என்று சொல்லிப் பாராட்டும் அளவுக்கு இயல்பாக நடித்துள்ளார் .
முக்கியமான குணச்சித்திர வேடத்தில் டெல்லி கணேஷ் குறை சொல்ல முடியாத நடிப்பு
ஓரிரு இடங்களில் ஓவர் லேப் வசனத்தில் சற்றே புன்னகைக்க வைக்கிறார் அறந்தாங்கி நிஷா .
நிறுத்தி நிதானமாக சில ஷாட்கள் வைத்த விதத்தில் கவர்கிறார் இயக்குனர் ரங்கராஜ் .
ஜோஸ் பிராங்க்ளின் பின்னனி இசை பழுதில்லை. பலனும் இல்லை.
பலமுறை பார்த்த கதை , திகட்ட திகட்ட பார்த்த திரைக்கதை இவைதான் படத்துக்கு பெரும் பலவீனங்கள் .
மொத்தத்தில் GUTS… படத்தின் உடம்பு முழுக்க் ஏகப்பட்ட CUTS