அமரம் @ விமர்சனம்

திவ்யஷேத்ரா பிலிம்ஸ் சார்பில் சி ஆர் ராஜன், நிர்மலா ராஜன் தயாரிக்க, ராஜன் தேஜேஸ்வர், ஐரா  அகர்வால், ஜார்ஜ் மரியான்,சாய் தீனா, நாகி நீடு,நடிப்பில் திருவருள் கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கும் படம்.

மம்முட்டி நடிப்பில் பரதன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு மலையாளத்தில் வந்த கிளாசிக் படத்தின் பெயரும் அமரம் .  படகின் முக்கியமான ஒரு பகுதி என்று அதற்குப் பொருள் . 
 
இந்த அமரம் என்பது அமரத்துவம் என்ற பொருளில் வந்திருக்கிறது,
 
தாதாக்கள், பெரிய கைகள், அரசியல்வாதிகள் கை  காட்டும் ஆட்களை காசுக்காக ஈவு இரக்கம் இன்றி  அறுத்துப் போடும் நபர் அருகன் (ராஜன் தேஜேஸ்வர்) .
 
அவனது சிறுவயதில்,  பாலியல் பலாத்காரம் மூலம் கொல்லப்பட்ட தன் அம்மாவின் உடல் பார்த்துக் கதறிய பிறகு, அவன் வாழ்க்கை போன பாதையின் விளைவு,  அவனது இப்போதைய வாழ்க்கை. 
 
ஒரு அரசியல்வாதியை அறுத்துப் போடும் வேலை அவனுக்கு வர, யோசிக்காமல் செய்கிறான்.
 
விளைவாக அமைச்சரின்  மகள் (ஐரா  அகர்வால்)  அருகனைக் கொல்ல முடிவு செய்து தனது நண்பன் மற்றும்  நண்பனின் அப்பாவும் அப்பாவின் நண்பருமான ஓர்  அரசியல்வாதி( நாகி நீடு) ஆகியோருடன், 
 
அருகன் வசிக்கும் அந்த உள்ளடங்கிய, காய்ந்த கரடுமுரடான மலைப்பகுதிக்கு  வருகிறாள். 
 
அங்கே நடக்கும் சில எதிர்பார்த்த  திருப்பங்களின்படி, அருகனே  அவளைக் காப்பாற்ற வேண்டிய சூழல் வருகிறது.அப்பாவைக் கொன்ற அருகனை விட மற்றவர்கள் மோசமானவர்கள் என்பது அவளுக்கு புரிகிறது. 
 
நிஜ எதிரிகள் அருகனையும்  அவளையும் கொல்ல  முயல, நடந்தது என்ன என்பதே அமரம். (இப்போது டைட்டிலை யோசித்தால் உங்களுக்கே முடிவு புரிந்து விடும்) 
 
அருகன் போன்றவர்களின் ஒரு  நாள்  வாழ்க்கையை சொல்லும் ,  கோயம்பேடு சந்தைக் காட்சிகள் அபாரம்.
 
அருகனுக்கும் விஜயானுக்குமான  (சாய்தீனா)  கோபமான  பாசம் கவனிக்க வைக்கிறது. 
 
படத்தின் பெரும்பகுதி நிலவும் அந்த வறண்ட மலைப்பாங்கான  லொக்கேஷன் அசத்தல்.ஒளிப்பதிவாளர் பரத்குமாருக்கும் பாராட்டுகள், 
 
சிறுவயதிலேயே நெஞ்சில் ஈரம் வெற்றி போன கொலைகாரன் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார் ராஜன் தேஜேஸ்வர்.
 
 சண்டைக்காட்சிகளில் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார். மிராக்கிள் மைக்கேலின் சண்டைக் காட்சிகள் சிறப்பு. 
 
ஐரா , ஹைய்யா இல்லாவிட்டாலும் ‘அய்யோ’ வும்  இல்லை. 
 
ஜார்ஜ் மரியனுக்கு வித்தியாசமான கேரக்டர் . ஆனால் நடிப்பில் அவருக்கு எல்லா கேரக்டரும் அவருக்கு ஒன்றுதான். தவிர அந்தக் கேரக்டரால் படத்துக்கும் பெரிதாக பலன் இல்லை . வெட்டி பில்டப்புக்குதான் உதவுகிறது. 
 
மிக்கி ஜே மேயரின் இசை,  ஸ்ரீராமரின் படத் தொகுப்பு இரண்டும் ஜஸ்ட் ஓகே. 
 
கூட இருக்கும்  துரோகிகளை விட, கூலிக்கு கொலை செய்பவன் எவ்வளவோ மேல் என்று சொல்ல வருகிறது படம்.  ஆனால் இதை, ” so what?”  என்று கடக்கும் அளவுக்கு ,மேம்போக்காகத்தான் எழுதி இருக்கிறார்கள்.
 
யாரைக் கொல்ல ஒரு பெண் வருகிறாளோ  அவளையே அவன்தான் காப்பாற்றுகிறான் என்ற திருப்பம் வரை செம.. செம. 
 
அதன் பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் திரைக்கதை அலைய, திரைக்கதை சொன்ன பாதையில் அருகனும் அந்த அமைச்சர் மகளும் அந்த வழியே அலைகிறார்கள் , படம் பார்ப்பவர்களையும் கட்டி இழுத்துக் கொண்டு.! 
 
அமரம்… அரைக்கிணறு 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *