தலைவர் தம்பி தலைமையில் @ விமர்சனம்

கே ஆர் குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்க, ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜென்சன் திவாகர், ஜெய்வந்த் நடிப்பில் சஞ்ஜோ ஜோசப், அனுராஜுடன் இணைந்து எழுதி நிதிஷ் சஹதேவ்  இயக்கி இருக்கும் படம். 

உள்ளாட்சித் தேர்தலில் ஒரு கட்சியின் சார்பாக இயங்கும் நபர் ஜீவா என்கிற ஜீவரத்தினம் (ஜீவா). அவருக்கு எதிர்க்கட்சி அரசியல்வாதி தவுடு (ஜென்சன் திவாகர்) .
 
தொடர்ந்து மக்களின் ஓட்டுகளை வாங்க,  ஊரில் யார் வீட்டில் என்ன விஷேஷம் என்றாலும் கையில் எடுத்து சிறப்பாக செய்து கொடுப்பது  ஜீவாவின் வேலை.
 
 “எங்க வீட்ல நாலு ஓட்டு இருக்கு. நல்லபடியா முடிச்சுக்க கொடுக்கலன்னா அவ்வ்ளவுதான்..” என்று மிரட்டியே மக்கள் ஜீவாவிடம்  வேலை வாங்குவது உண்டு. அந்த உழைப்பின் மீது தவுடுக்கு பொறாமை.
 
பக்கத்து பக்கத்து வீட்டில் பகையோடு வாழும் நபர்கள் இளவரசு – மணி (இளவரசு- தம்பி ராமையா). தன மகள் பற்றி இளவரசு தவறாகப் பேசிய விஷயம்,  ஊர் முழுக்கப் பரவி அவள் தற்கொலை செய்து கொண்டதற்கு,  இளவரசு தான் காரணம் என்பது மணியின் கோபம். ஆனால் இருவரின் மற்ற குடும்ப உறுப்பினர்களும் நட்பாகத்தான் இருக்கின்றனர். எனினும் குடும்பத் தலைவன் என்ற முறையில் மணி மாற்று இளவரசுவின் பகை குடும்பங்களின் நட்பையும் பாதிக்கிறது. 
 
மணியின் வயதான அப்பா சாகப் பிழைக்கக் கிடக்கிறார்.  மணிக்கு அப்பா மேல் பாசம் எல்லாம் இல்லை. 
 
இந்த நிலையில் இளவரசுவின் மகள் சவுமியாவுக்கு ( பிரார்த்தனா நாதன்) கல்யாணம் . மாப்பிள்ளை  வீட்டார் வந்து ஹோட்டலில் ரூம் போட்டுத் தங்கி இருக்கின்றனர்.  90 கிட்ஸ் மாப்பிள்ளை , சவுமியா போன்ற அழகான பெண்  தன்னை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டதில்  பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறான்.
 
வீட்டில் உள்ள நாலு ஓட்டுக்காகவும் அதையும் மீறிய நல்ல மனதாலும் அந்தக் கல்யாணத்தை எடுத்து நடத்தும் பொறுப்பை  தலைவர் தம்பியான ஜீவா தன் பொறுப்பில் ஏற்றுக் கொள்கிறான். 
 
மறுநாள் காலை பத்தரை மணிக்கு முகூர்த்தம் என்ற நிலையில் முதல் நாள் இரவு  மணியின் வயதான அப்பா செத்துப் போகிறார்.
 
இளவரசு மீது உள்ள கோபத்தில் , அந்த கல்யாண  முகூர்த்த நேரத்தில்தான்  வீட்டு முன் தப்படித்து பிணத்தை எடுப்பேன் என்கிறார் மணி. 
 
”காலகாலமாக எங்கள் வீட்டுத் திருமணம் எல்லாம் வீட்டில்தான் நடக்கும் என்பதால் நானும் தாலி கட்டும் இடத்தை மாற்ற மாட்டேன் என்கிறார் இளவரசு. 
 
மணி மறுக்கிறார். என் வீட்டு ஓட்டுகள் உனக்கு வேண்டாமா என்றார் ஜீவாவிடம் கேட்கிறார் . 
 
ஓட்டுகளுக்கும் அப்பாற்பட்டு , பிரச்னையை சுமூகமாக முடிக்க , ஜீவா முயல, எதிர் அரசியல் செய்யும் தவுடு உள்ளே நுழைந்து மணியைத் தூண்டி  விட, 
 
பிரச்னையை சுமூகமாக முடிக்கபி போராடும்  ஜீவாவின் எண்ணம் நிறைவேறியதா? பிரச்னை எந்த அளவுக்கு சீரியசாகப் போனது என்பதே தலைவர் தம்பி தலைமையில் படம். 
 
அருகருகே கல்யாண வீடு மற்றும் இழவு வீடு இருவருக்கும் பகை ஈகோ வன்மம் என்ற அந்த ஒன் லைன் அட்டகாசம். வித்தியாசமான,  நுணுக்கமான,  ஏற்றுக் கொள்ள முடிகிற  கதை. 
 
மிக இயல்பாக எளிமையாக கேஷுவலாக ஆனால் சிரத்தையாக நேர்த்தியாக அதை காட்சிகளாக்கி இருக்கிறார் இயக்குனர். எந்த இடத்திலும் ஒரு பதட்டம் இல்லை. சபாஷ் நிதிஷ் சஹதேவ். 
 
ஒரு படத்துக்கு ஆரம்பம்,  இடைவேளை,  ஆன்ட்டி கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் நன்றாக இருந்தால் அந்தப் படம் மினிமம் கேரண்டி படமாக மாறும் என்பார்கள். உண்மைதான். 
 
ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் முதல் பாதியில் கதையின் அஸ்திவாரத்தை  போரடிக்காமல் சரியாக நிறுவி விட்டு , இரண்டாம் பகுதியில் வெயிட் ஏற்றினால் கூட அந்தப் படம் ஹிட் ஆகும்.  வருஷம் பதினாறு அதற்கு சிறந்த உதாரணம் . அந்த வகையில்  வந்திருக்கும் படம் இது . சபாஷ் . 
 
ஹீரோ – ஹீரோயின் இருவரும் காதலன் காதலியோ கணவன் மனைவியோ இல்லை என்பதை நாம் பாசமலர் காலத்திலேயே சாதித்து விட்டோம் என்றாலும் ஒரு பெரும் இடைவேளைக்குப் பிறகு இந்தப் படத்திலும் அதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. 
 
மற்ற பல கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் நடித்து படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறார் ஜீவா பாராட்டுகள்.
 
பிரார்த்தனா நாதன் கேரக்டருக்கு பொருத்தமாக அழகாக சின்னப்பெண் குணாதிசயத்துடன் இருக்கிறார்; நடிக்கிறார். அவர் நடிப்பில் வெளிப்படும் ஒரு சின்ன இன்னசன்ஸ் அவர் நடிப்புக்கு சென்ஸ் சேர்க்கிறது . 
 
படத்தின் முதல் பாதியை தனி ஆளாக தூக்கி நிறுத்துகிறார் தம்பி ராமையா 
 
தனக்கே உரிய பாணியில் சிறப்பாக நடித்துள்ளார் இளவரசு . ஜென்சன் திவாகர் உள்ளிட்டோரும் சிறப்பு. 
 
விஷ்ணு விஜய்யின்  இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. பப்லு அஜு வின் ஒளிப்பதிவு  சிறப்பாக வெளிப்படுகிறது.
 
அந்த ஒருதலைக் காதலன் கேரக்டர் ரகளை. ஆனால் கல்யாணப் பெண் அந்த சூழலில் இரவில் அவனைத் துரத்திக் கொண்டு அவ்வளவு தூரம் ஓடுகிறாள் என்பது ஏற்புடையதாக இல்லை. 
 
இந்த பொங்கலுக்கான படம் என்றால் இதுதான் . 
 
ஆனால் இன்னும் சில விஷயங்களை செய்து இருந்தால் இந்தப் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் 
 
வித்தியாசமான கதை என்றாலும் கல்யாண வீடு பக்கத்தில் சாவு வீடு என்பது  பார்வையாளர்களுக்கே கொஞ்சம் தர்ம சங்கடமான கதைச் சூழல்தான் . அதை முழுக்க முழுக்க காமெடியை சேர்த்துக் கொண்டே வந்து சொல்லி இருக்க வேண்டும். ஆனால் ஆங்காங்கே மட்டும்  காமெடி வர, பல இடங்களில் படம் ரொம்ப சீரியஸ் ஆகிறது. 
 
பொதுவாக இதுபோன்ற சூழல்களில்  மரண  வீட்டார்தான் விட்டுக் கொடுக்க வேண்டும். கொடுப்பார்கள். 
 
ஆனால் பகை அதிகம் இருக்கும்போது கல்யாண வீட்டார்…  மகள் மேல் பாசம் உள்ள தகப்பன்..  இப்படி வீம்பாக இருக்க மாட்டார்கள். 
 
மகளின் நன்மை முக்கியம் என்பதால் அவர்கள் இடத்தை மாற்றி விட்டுப் போய் விடுவார்கள். இதில் வீம்பு பிடிக்க இளவரசு சொல்லும் காரணங்கள் அவ்வளவு நியாயமாக இல்லை.  
 
ஒரு கல்யாண விஷயத்தில் கிராமத்தில் இரு குடும்பத்துப்  பெண்களும் பிள்ளைகளும் ஒன்று சேர்ந்து கணவனை சமாளிக்க முடியவில்லை என்பது இந்தக் கதைக்கு பொருத்தமாக இல்லை. 
 
படத்தின் கிளைமாக்ஸ் வித்தியாசமானதுதான் என்றாலும் அது பாதிக்கப்படும் கேரக்டர்களின் செயலாக இல்லாமல் வேறு ஒன்றாக வந்து நிற்கிறது.   வேறு விதமாக படம் இன்னும் சிறப்பாக முடியும் என்ற உணர்வைக் கொடுத்து விட்டு, அப்புறம் கலவர சூழல் திரைக்கதையில் திணிக்கப்படுகிறது. 
 
இதை விட நல்ல கிளைமாக்ஸ் இந்தக் கதைக்குள்ளேயே இருக்கிறது. செத்துப் போன பெரியவர்; கல்யாணப் பெண் என்று யோசித்து அந்த அட்டகாசமான கிளைமாக்ஸை  எழுதி இருக்கலாம். 
 
இப்படி சில குறைகள் இருந்தாலும்,
 
 தலைவர் தம்பி தலைமையில் … ஜாம் ஜாம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *