வா வாத்தியார் @ விமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க, கார்த்தி, சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி , ராஜ்கிரண், ஆனந்தராஜ், ஜி. எம் . சுந்தர், கருணாகரன், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் நலன் குமாரசாமி எழுதி இயக்கி இருக்கும் படம் . 

24- 12- 1987 .
 
முதல்வர் எம் ஜி ஆர் உடல்நிலை கவலைக்கிடமான நேரம். அவரை நேரில் போய் பார்க்க முடியாத சூழலில் எம் ஜி ஆர் ரசிகரான பூமிப் பிச்சை( ராஜ்கிரன்) மற்றும் நண்பர்கள், குடியிருந்த கோவில் படத்தின் பிரிண்ட் எடுத்து ஒரு தியேட்டரில் போட்டு பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
 
அதே நேரம் அவரது மருமகள் சுசிலா (வித்யா) பிரசவத்துக்காக மருத்துவமனையில் இருக்கிறார். 
 
பூமிப்  பிச்சை படம் பார்த்துக் கொண்டு இருந்தபோது, படம் பாதியில் நிறுத்தப்படுகிறது . காரணம் எம் ஜி ஆர் மறைந்த செய்தி. 
 
கண்ணீரோடு தியேட்டர் வாசலில் எம் ஜி ஆர் புகைப்படத்தை வைத்து பூமிப்  பிச்சையும் மற்றவர்களும்  அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். 
 
அந்த நேரம் பேரன் பிறக்க, மருத்துவமனைக்கு போகிறார் பூமிப்  பிச்சை. எம் ஜி ஆர் இறந்த அதே நேரத்தில் பேரன் பிறந்திருக்க, அவனது பாதத்தில் எம் ஜி ஆர் பாதத்தில் இருந்தது போலவே மச்சம் ஒன்று இருக்க, 
 
எம் ஜி ஆரே  பிறந்து விட்டதாக எண்ணி, பேரனுக்கு சிலம்பம், வாள் சண்டை,மல்யுத்தம் கற்றுக் கொடுத்து நேர்மை நீதி நியாயம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார் . 
 
பேரன் வாங்கிய ஒரு லாட்டரி சீட்டுக்கு ஐம்பதாயிரம் பரிசு விழா, “உழைக்காத காசு வேண்டாம். தலைவர் அதை விரும்ப மாட்டார் என்று , லாட்டரி சீட்டை கிழித்து விடுகிறார்  தாத்தா பூமிப் பிச்சை. 
 
கோபம் கொண்ட பேரன் , நம்பியார் ரசிகனாகி,கெட்டவனாக வளர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகி, எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்கிறான் (கார்த்தி).  அவனது அப்பா (தேனப்பன்) உள்ளிட்ட அனைவருக்கும் இது தெரியும். தாத்தா பூமிப்  பிச்சைக்கு மட்டும் பல வருடமாக தெரியவே இல்லையாம். 
 
மக்களின் ஆரோக்கியத்துக்கு ஊறு  விளைவிக்கும் பேக்டரி ஒன்றை மூடச் சொல்லி சமூக சேவை இயக்கங்கள் போராட, அதை ஒடுக்க கலவரத்தை ஏற்படுத்தி சுட்டுக் கொல்லும் வேலையை,  முதல்வருக்காக (நிழல்கள் ரவி) செய்கிறார் இண்டர்நெஷனல் பவர் புரோக்கர் ஒருவர் (சத்யராஜ்). 
 
கலவர திட்டத்தை சமூக அக்கறைக் குழு ஒன்று மஞ்சள் முகம் என்ற இணையதளம் மூலம் வெளிப்படுத்துகிறது. அவர்களை கண்டு பிடித்து அழிக்கும் வேலையை அயோக்கிய இன்ஸ்பெக்டரிடம்  கொடுக்கிறார் பவர் புரோக்கர். 
 
அவனும் களம் இறங்க, அப்போதுதான் தாத்தா பூமிப் பிச்சைக்கு , தன் பேரன் அயோக்கியத்தனம் செய்வது தெரிகிறது. மனம் உடைந்த அவர் , தன் பேரனை நல்வழிப்படுத்தி  திருத்தும் வேலையை எம் ஜி ஆரிடம் கொடுத்து விட்டு செத்து விடுகிறார். 
 
அந்நியன் போல ஸ்பிலிட் பர்சனாலிட்டியாக அயோக்கிய போலீஸ் ஹீரோ மேல் இறங்குகிறார் எம் ஜி ஆர் . அடுத்து என்ன நடந்தது என்பதே வா வாத்தியார். 
 
என்ன ஓர் அட்டகாசமான கதை . இதை விட ஒரு  கமர்ஷியல் வெற்றிக்கான கதை கிடைக்குமா? எம் ஜி ஆரை சரியாக உள்  வாங்கிய ஒருவர் இந்தப் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதி இருந்தால் இந்தப் படம் சும்மா அடித்து தூள் கிளப்பும். 
 
ஒரு சாதாரண எம் ஜி ஆர் ரசிகனிடம் கொடுத்து இந்தக் கதைக்கு சீன்  சொல்லச்  சொன்னால் கூட சூப்பர் சூப்பர் சீனாகச்  சொல்லி இருப்பானே. 
 
நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப் புழுதியில் எறிந்தால் கூடப் பரவாயில்லை. அடித்து உடைத்து விறகாக்கி இருக்கிறார்கள். 
 
முதலில் கொஞ்சம் நல்ல விஷயங்களை சொல்லி விடுவோம் . 
 
படத்தின் ஆரம்பிக்க காட்சிகளாக எம் ஜி ஆர் மரணம், குடியிருந்த கோவில் படம் திரையீடு, படம் பாதியில் நிறுத்தப்படும் இடம் என்ற அந்த ஆரம்பிக்க காட்சிகள்  மெய் சிலிர்க்க வைக்கிறது. நமக்கே தெரியாமல் கண்களில் கண்ணீர் .
 
படத்தில் எம் ஜி ஆர் தோன்றும்  முதல் ஷாட், அதே போல படம் நிறுத்தப்படும்போது எம் ஜி ஆர் திரும்பி அப்படியே   ஃ பிரீஸ் ஆகி நிற்பது ..இந்த இடங்களில் மனம் கவர்கிறார் இயக்குனர் நலன் குமாரசாமி. படகோட்டி படப்பாடல் அந்த இடத்துக்கு அப்படி செட் ஆகிறது . 
 
தமிழ் சினிமா வசனங்களில்- எம் ஜி ஆர் பேசிய வசனங்களில்- மிகச்  சிறந்த ஒரு வசனமான — ஆயிரத்தில் ஒருவன் படத்தில்  ஆர் கே சண்முகம் எழுதி   இடம் பெற்ற- “உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா,  என்றும் நிலைத்திருக்க?” என்ற வசனத்தை பயன்படுத்தியதும் சிறப்பு. 
 
கார்த்திக்கும் எம் ஜி ஆர் இறங்குவது போன்ற உணர்வுக்கு,  பீரோ கண்ணாடியில் எம் ஜி ஆர் உருவம், அவரது கண்ணுக்குள் கார்த்தி உருவம் அந்த கார்த்தி உருவத்தின் கண்ணுக்குள் எம் ஜி ஆர் உருவம் என்று நலன்  குமாரசாமி படமாக்கி இருக்கும் விதம் அருமை. பாடல்களுக்கான பின்புலங்கள், செட், வண்ண ஆளுமை இவையும் சிறப்பு. 
 
காப்பாத்துங்க என்று யார் சொன்னாலும் அவருக்குள் எம் ஜி ஆர் வந்து காப்பாற்றி விடுவார் என்ற ஐடியா அருமை, ஆனால் அதை காட்சிப் படுத்தியதில் சுவாரஸ்யம் இல்லை. கடைசியில் அப்படி காப்பாற்றப் போனதற்காகவே எம் ஜி ஆர் கேரக்டர் முடிவுக்கு வருகிறது ஈன்ற விஷயம் கூட சிறப்புதான் . ஆனால் அதை நெகிழும் வகையில் நிறுவ முயலாமல் ஜஸ்ட் லைக் தட் பாஸ் பண்ணி விட்டுப் போகிறார்கள். இப்படி நாமாக உள்ளே இறங்கி பார்த்தால் ரசிக்க சில விசயங்கள் உண்டு. 
 
ஆனால் படக்குழு , அவர்களாக எதையும் சிறப்பாக படைத்தளிக்க மாட்டார்கள் . 
 
அரசியல் எம் ஜி ஆர், சினிமா எம் ஜி ஆர், ஹியூமன் சைக்காலஜிஸ்ட் எம் ஜி ஆர், அவரது  மாஸ், அவ்வப்போது ஜொலிக்கும் அவரது   கிளாஸ்….  என்று இதைப் பற்றியும்  சரியாக உணராமல் ஒரு ஸ்கிரிப்ட் எழுதி இருக்கிறார்கள். ஏ ஐ இடம் சொன்னால் கூட இதை விட நல்ல திரைக்கதை கொடுத்திருக்கும் . 
 
எம் ஜி ஆரின் சண்டையில் வன்முறை இருக்காது. வீரம் இருக்கும் . சும்மா ஒவ்வொருவராக வர வைத்து அடிக்க மாட்டார். ஓடி, போக்கு காட்டி,  தள்ளி விட்டு, மேலே பாய்ந்து ,  எஸ்கேப்பிசம்  டெக்னிக்கை எல்லாம் பயன்படுத்தி சண்டை போடுவார்,  சண்டையே கலைத்துவமாக இருக்கும். அதை எல்லாம் ஸ்டாண்ட் இயக்குனருக்கு யாருமே சொல்லலை போல . 
 
சண்டையில் எம் ஜி ஆரின் காமெடி சண்டைகளுக்கான சூழலே இலகுவாக இருக்கும். பாதிக்கப்பட்டு உயிராபத்தில் இருபவர்களுக்கான சண்டைக் காட்சிகளில் அவர் காமெடி எல்லாம் செய்ய மாட்டார் . இது யாருக்கும் புரியவில்லையா?
 
கதாநாயகி (கீர்த்தி ஷெட்டி ) ஆவியுடன் பேசுபவர் என்கிறார்கள். எம் ஜி ஆவியுடன் பேசுவது போல ஒரு காட்சி யோசிக்க வேண்டும் என்று கூட யாருக்கும் தோன்றவில்லை. கொடுமை .கதாநாயகி  ஆவியுடன் பேசுவதால் படத்துக்கு ஆதரவாக,  ஒரு இட்லி வெந்த ஆவி கூட வரவில்லை. 
 
அன்பே வா படத்தில் இடம்பெற்ற ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை இந்தப் படத்திலும் ரீமிக்ஸ் செய்து இருக்கிறார்கள்(உலக அளவிலும் எந்த மொழியிலும் எ ந்தப் பாடலும் இந்தப் பாடல் போல அதிகப் படங்களில் பயன்படுத்த பட்டிருக்க வாய்ப்பே இல்லை) 
 
ஒரு காட்சியில் கார்த்தியை  டெஸ்ட் செய்ய,  கார்த்தி மார்பில் சாய்கிறார் ஆவியுடன் பேசும் நாயகி. அப்படியே கட் பண்ணி ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாட்டுக்கு போயிருந்தால் பிரம்மதமாக இருந்திருக்கும் . ஏனெனில் அன்பே வா படத்திலேயே அந்தப் பாடல் அப்படித்தான் துவங்கி சும்மா மிதக்கும். 
 
ஆனால் அந்த இடத்தை அம்போ என்று விட்டு விட்டு, வேறு எங்கோ ஒரு இடத்தில் வம்படியாக திணிக்கிறார்கள் . அந்த பாடலின் இனிமைக்கு முக்கிய காரணமாக இருந்த விஷயங்களை எல்லாம் கர்ம சிரத்தையாக தூக்கி விட்டு ரீமிக்ஸ்  செய்து .. இல்லை  இல்லை..  KILL செய்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். 
 
ரீமிக்ஸ் செய்யப்பட விதம் வேறு  என்னவோ யாரோ குய்யோ முறையோ என்று கத்துவது போலவும் ஒப்பாரி கேட்பது போலவும்  இருக்கிறது.   
 
இது மட்டுமா? எந்த இடத்தில் பின்னணி இசையில் எம் ஜி ஆர் படைத்து இசையை பயன்படுத்த வேண்டும்? எந்த இடத்தில் நவீன பின்னணி இசை எ கொடுக்க  வேண்டும் என்பதில் சந்தோஷ் நாராயணனுக்கு பெரும் குழப்பம்.!
 
எம் ஜி ஆர் பற்றிய படத்தில் ஒளிப்பதிவு படத்தொகுப்பு எல்லாம் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. இதெல்லாம் எம் ஜி ஆருக்குத் தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?
 
தவிர, அந்நியன்  படப்  பாணியில் கார்த்திக்குள்  எம் ஜி ஆர் நுழைவது ஈர்ப்பாக இல்லை. 
 
கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் அவரால் போதுமான நியாயம் செய்ய முடியவில்லை. அவரை விட சில காட்சிகளில் மட்டுமே வரும் ஆனந்தராஜ் எம் ஜி ஆர் போல சிறப்பாக நடிக்கிறார்.  
 
சத்யராஜ்  இளமையாக தோன்றுகிறார் . ராஜ்கிரண்… செட்டியார்தான்  முறுக்கு. ஆனால் சரக்கு முறுக்காக இல்லை. 
 
ஏகப்பட்ட சின்னச் சின்ன கேரக்டர்கள் அர்த்தமில்லாமல் வந்து விட்டு ஏதோ பேசி விட்டுப் போகின்றன. 
 
படத்தில் எம் ஜி ஆரின் பொம்மை இருக்கிறது . கார்த்தி வடிவிலும் . 
 
ஆனால் அந்த ஆயிரத்தில் ஒருவனின் பர்சனாலிட்டியில் ஆயிரத்தில் ஒரு  பங்கு கூட ‘வா வாத்தியார் ‘ படத்தில்  இல்லை. 
 
” ஏன்டா அயோக்கியப்  பசங்களா..  அத்தனை வருடம் நடிச்சு அவ்வளவு பணம் சம்பாதிச்சு அத்தனை  வருஷம் முதலமைச்சராக இருந்தும் என் சொத்து மொத்தமே நூறு கோடி தான்டா. இன்னிக்கு ஒரு கவுன்சிலர் ஒரே கையெழுத்துல நூறு கோடி சம்பாதிக்கிற அளவுக்கு ஊழல் பண்றீங்களே டா?’
 
இன்னிக்கு எம் ஜி ஆர்  வந்தா இதைத்தானே சார்  பேசணும்?
 
கண் பார்வை மாற்றுத்திறனாளிகள் யானையைப் பார்த்த கதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் . கால்களை மட்டும் தொட்டுப்  பார்த்தவர் யானை தூண் மாதிரி இருக்கிறது என்றாராம்.. காதுகளை மட்டும் பிடித்துப் பார்த்தவர் யானை   முறம் போல இருக்கிறது என்றாராம் . துதிக்கையை பிடித்துப் பார்த்தவர் யானை நீளமாக இருக்கிறது என்றாராம் . தந்தத்தை மட்டும் தொட்டுப் பார்த்தவர் யானை கூராக இருக்கிறது என்றாராம் .
 
கதையில் லாஜிக் இல்லை என்றாலும் ஒவ்வொருவரும் யானையின் ஒவ்வொரு பகுதியை மட்டுமே தொட்டுப் பார்த்து அதை மட்டுமே யானை என்று எண்ணிக் கொண்டார்கள் என்பதுதான் கதையின் உட்பொருள். 
 
ஆனால் ஒருவர்  சின்ன எலி பிடிக்கும் பொறியைக் கொண்டு வந்து” இதில் யானையைப் பிடிக்கலாம்” என்று சொன்னால், அவருடைய ‘பார்வை’யை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அதுதான் இந்தப் படம்.
 
வா வாத்தியார் … மக்கு 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *