உப்புக் கருவாடு @ விமர்சனம்

uppu 1

அவ்ரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிட ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் சார்பில் ராம்ஜி நரசிம்மன் தயாரிக்க, கருணாகரன் , நந்திதா,  எம் எஸ் பாஸ்கர், மயில்சாமி, சாம்ஸ், குமாரவேல், ரக்ஷிதா ஆகியோர் நடிப்பில் ராதாமோகன் இயக்கி இருக்கும் படம் உப்புக் கருவாடு.

ரசனை சாப்பாட்டுக்கு துணை இருக்குமா இந்த உப்புக் கருவாடு? பார்க்கலாம்

நான்கு நபர்கள் ஒரு அடியாள் கூட்டத்தால் அடித்து இழுத்து வரப்பட்டு கடல்புறக் குப்பத்தில் ஓர் அறையில் அடைக்கப்படுகிறார்கள் . அவர்களை அழைத்து வரச்சொன்ன,  ஐயா என்ற நபருக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள் . பின்னோக்கிப் பயணிக்கிறது திரைக்கதை. 

முதல் படம் ஃபிளாப் ஆகி இரண்டாவது படம் பாதியிலே நின்று போன நிலையில்,  மூன்றாவது வாய்ப்புக்காக அலைபவன் இயக்குனர் சந்திரன்(கருணாகரன்) , அவனது நண்பர்கள் இணை இயக்குனர் இளங்கோ (சாம்ஸ்) மற்றும் உதவி இயக்குனர் கார்த்திக் (நாராயணன்)

பாண்டியன் என்ற மேனேஜர் (மயில்சாமி) மூலம் சந்திரனுக்கு பட வாய்ப்பு ஒன்று வருகிறது. தயாரிப்பாளர் மீனவர் குப்பத்தில் வாழும் பெரியவரும் தாதாவுமான ஐயா நெய்தல் ஜெயராமன் ( எம் எஸ் பாஸ்கர்)

நாராயணன் மூலம் சந்திரனிடம் வேலைக்கு சேரும் உதவி இயக்குனர் ஸ்டீபன் (டவுட்டு செந்தில்)!. சந்திரனின் தோழி உமா (ரக்ஷிதா) ஐயாவின் ‘குடும்ப சாமியார் ஒருவர் (டாடி சரவணன் )

சந்திரன் எழுதி இருக்கும் சமுத்திரகுமாரி கதையில் வரும் நாயகி பூங்குழலி ( நந்திதா , ரக்ஷிதா). பூங்குழலி கதாபாத்திரத்துக்கு உமா நடிப்பால் உயிர் கொடுப்பாள் என்பது சந்திரனின் நம்பிக்கை .

uppu 6

ஆனால் ஐயா , தனது இரண்டாம் மனைவியின் மகளான மகாலட்சுமியை ( நந்திதா) படத்துக்கு கதாநாயகியாகப் போட வேண்டிய கட்டாயம். மறுத்தால் படம் நடக்காமல் போய்விடலாம் என்ற நிலை.

ஐயாவின் குடும்ப சாமியார், தானும்  படத்தில் நடிக்க வேண்டும் என்று ரகசியமாக  ஆசைப்படுகிறார் . முன்னால் ரவுடியும் ஐயாவின் அடியாளுமான மாஞ்சா என்கிற கர்ணன் சிறப்பான கதை விவாதத் திறமை வசனகர்த்தாவாக இருக்கிறான்.

இப்படி இருந்த நிலை மாறி , சந்திரன், இளங்கோ, பாண்டியன் , கார்த்திக் நால்வரையும் அய்யாவின் ஆட்களே அடித்து இழுத்து வந்து அடைத்து வைக்க, அவர்களை ஒரு வழி பண்ண,  ஐயாவே துப்பாக்கியோடு வருகிறார் .

அந்த அளவுக்கு என்ன நடந்தது அப்புறம் என்ன நடந்தது என்பதே உப்புக் கருவாடு .

அழகிய தீயே , மொழி, அபியும் நானும் போன்ற சிறந்த படங்களைக் கொடுத்த ராதாமோகன், பயணம், கவுரவம் போன்ற படங்களில் ஏற்பட்ட ஒரு பின்னடைவுக்குப் பிறகு,  மீண்டும் விஸ்வரூபம் எடுத்து இருக்கும் படம் இந்த உப்புக் கருவாடு.

தமிழ் சினிமாவில் சினிமாவை பின்னணியாகக் கொண்டு உருவாகும் படங்கள் சோபிப்பதில்லை என்ற செண்டிமெண்டை அடித்து உடைத்து நொறுக்கும் படமாக வந்திருக்கிறது இந்தப் படம்

திரைக்கதையும் வசனமும் (ராதாமோகன், வசனகர்த்தா பொன்.பார்த்திபன்) இந்த அளவுக்கு பின்னிப் பிணையும் ஒரு படத்தைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு .அதுவும் பெரும்பாலும் காமெடியில் அது நிகழ்வது ரொம்பவே புதுசு.

 

uppu 3

பொதுவாக திரைக்கதை அமைப்பில் ஒரு காட்சியில் இருந்து இன்னொரு காட்சி உருவாவது இயல்பு. ஆனால் ஒரு வசனத்தில் இருந்து ஒரு காட்சி உருவாவதும் அதுவே பல காட்சிகளுக்கு விதை போடுவதும் அரிதான விஷயம் . அதையும் இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது .

ஒரு காட்சியில் அந்தக் காட்சிக்கான காரணமாக கூறப்படும் ஒரு வசனம் , ஒரு வார்த்தை கூட அடுத்த பல காட்சிகளில் ஒரு கேரக்டர் போலவே கூட வருகிறது . உதாரணமாக அல்வா !

தமிழ் சினிமாவில் உரையாடல் என்பது ‘’ஹாய் ஹாய்… சாப்பிட்டியா? தூங்கிட்டியா?’’ என்பது மட்டும்தான் என்று போய்க் கொண்டிருக்கும் கேவல சூழலில்,  மிகச் சிறந்த  உரையாடல்கள் படம் எங்கும் கொட்டிக் கிடக்கின்றன

படம் பார்க்கும்போது வரும் ஒரு ஃபோனை அட்டன்ட் செய்தால் கூட ஒரு நகைச்சுவையையோ அல்லது ஒரு அர்த்தமுள்ள வசனத்தையோ இழந்து விடும் அபாயம் உண்டு . .

ஒரு படத்துக்கென்று தனித் தன்மையை உருவாக்க, கதை , பின்புலம் , கேரக்டர்கள் என்று பல விஷயங்கள் சேர்ந்து போராட வேண்டி இருக்கும் . ஆனால் சரியான உரையாடல்கள் தனியாளாய் அதை செய்து விடும் என்ற உண்மையை உணர்ந்து செயல்பட்டு இருக்கிறார்கள்.

ஒரு காட்சியில் இளங்கோ கதாபாத்திரத்தால் சொல்லப்படும் ஒரு வசனம் , பிறிதொரு இடத்தில் படத்தின் மிகப்பெரிய திருப்பத்துகே காரணம் ஆகிறது.

uppu 4

அதே நேரம் அந்த வசனத்தை கற்பனையின் கவுரவமாக மட்டும் நினைத்து பயணித்து சறுக்காமல்….

உடனடி நகைச்சுவை, சில நொடிகள் யோசிப்புக்குப் பின் சிரிக்க வைக்கும் இன்டலக்சுவல் காமெடி என்று ஒரு வசன சிலம்பாட்டமே நடத்தி இருக்கிறார்கள்.

அதற்காக வசனங்களை துணுக்குத் தோரணமாக மாற்றி விடாமல் அர்த்தமுள்ள சிந்தனைச் செறிவு மிக்க வசனங்கள் மூலமும் பாராட்ட வைக்கிறார்கள்.

அதனினும் ஒரு படிமேலே போய் வார்த்தைகள் மூலம் மட்டும் நகைச்சுவையை கொண்டு வர முயலாமல் வித்தியாசமான கதாபாத்திரங்கள், அவர்களின் வித்தியாச குணாதிசயங்கள் இவற்றின் மூலம் நகைச்சுவையைக் கொண்டு வருவதும் சிறப்பு. (உதாரணங்கள் .. சாமியாரின் நடிப்பு ஆர்வம், எந்த சத்தத்தையும் நல்ல சகுனமாக மாற்றும் பாண்டியனின் சமாளிஃபிகேஷன்கள்)

இது ஒரு பக்கம் இருக்க ஒரே ஒரு ஷாட்டுக்காக கடற்கரையில் செத்துக் கிடக்கும் காதல் ஜோடியைக் காட்டும்போது கூட,  அதில் ராதா மோகனின் டைரக்ஷன் பர்ஃபெக்ஷன் அலையடிக்கிறது .

தியேட்டரைக் குலுங்க வைக்கும் — வசனமே இல்லாத அந்த மலையாள பாடகர் காமெடிக்- காட்சிகள்,  வசனத்தை எங்கே தவிர்க்கவேண்டும் என்பது குறித்த ராதாமோகனின் டைரக்ஷன் தெளிவுக்கும் உதாரணமாக விளங்குகிறது. 

uppu 7

பாடல்களில் பெரிதாகப் பலன் கொடுக்கவில்லை . அனால்  காமெடி , சீரியஸ் காட்சிகளின் தன்மையை ஒரு படி மேலே உயர்த்த – கொஞ்சம் டிராமாட்டிக் ஆக என்றாலும் – பின்னணி இசையில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார் இசை அமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ் . சக்சஸ் !

மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு,  லொக்கேஷனை படத்தின் சூழல் உணர்வுக்கு மேட்ச் செய்வதில் சிறப்பாக பணியாற்றியுள்ளது .

திரைக்கதை சரியாக அமைந்து வசனம் ஆளுமை செய்யும் ஒரு படத்தில் படத் தொகுப்பு என்பது… குழந்தைகளுக்கான நீச்சல் குளத்தில் குற்றாலீஸ்வரன் குளிக்கிற கதைதான். டி எஸ் ஜெய்க்கும் பாராட்டுகள் .

நந்திதாவுக்கு ஒரே வேடத்தில் இரட்டை வேடம்! ‘கதாபாத்திரம்’ பூங்குழலி , நடிகை மகாலட்சுமி இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை உள்வாங்கி நடித்துள்ளார்,

சினிமாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி பிரச்னை செய்து பிழைப்பு நடத்தும் நபர்களை கண்டிக்கும் விதமாகக்  குமுறும் காட்சியில் கவனம் கவர்கிறார் கருணாகரன் .

கிரியேட்டராகவும் இருக்கும் அடியாள் கதாபாத்திரத்தை அணு அணுவாக அனுபவித்து நடித்துள்ளார் குமாரவேல். இறுதியில் அவர் சொல்லும் ‘’என்  கதை … சரி நம்ம கதை …’’ கிளாஸ் !

ரவுடித்தனம் , பெரிய மனுஷத்தனம் , கவிதை மனசு இப்படி பன்முக குணாதிசயம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார் எம் எஸ் பாஸ்கர்

நடித்துக் காட்டும் காட்சியில் ரக்ஷிதா,  ரசனா !

uppu 9

எல்லோருமே நன்றாக நடித்து இருந்தாலும் அடுத்த கட்டமாக கவர்பவர் ஸ்டீபனாக வரும் டவுட்டு செந்தில் . அவரது எக்ஸ்பிரஷன்களும் ரொம்ப புரபேஷனலாக (probational )  இருக்கின்றன (புரபஷனல் – professionalங்கறததான் அப்படி சொல்றோம் )

பிரச்னையை உருவாகும் அந்த திருப்பம் வருவதை ஆரம்பத்திலேயே ஊகித்துவிட முடிகிறது என்றாலும் அது இல்லை என்பது போல ஒரு போக்குக் காட்டி அப்புறம் அந்த இடத்துக்கு வரும் இடத்தில் திரைக்கதை மெச்சூரிட்டி ஜொலிக்கிறது .

கதைக் களம் சீரியசாக இருக்க, கதை வளர்ப்பு நகைச்சுவைக் கொண்டாட்டமாக இருப்பது பலே உத்தி .

இப்படி இந்த படத்தைப் பாராட்டவும் பார்த்து ரசிக்கவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன .

திருக்குறளைக் கிண்டலடிக்கும் நவீன பைத்தியக்காரத்தனமான காஸ்மாபாலிடன் மனநிலைக்கு இந்தப் படமும் ஆளாகி இருப்பது….

என்னதான் நகைச்சுவை என்றாலும்…சம்மந்தப்பட்ட பாத்திரம் பயன்படுத்தும் சூழல் வெறுப்பை ஏற்படுத்துவதுதான் காரணம் என்றாலும்….. கண்டிக்கப் பட வேண்டிய ஒன்று!

நகைச்சுவை மேலாதிக்கம் செய்யும் ஒரு படத்தில் ஒரு சீரியசான காட்சி வந்தால் அதை அப்படியே சீரியஸ் காட்சியாக விட்டுவிட வேண்டும் . வேண்டுமானால், ரொம்ப அவசியம் என்றால் மட்டும் காட்சி முடியும்போது மட்டும் ஒரு நகைச்சுவை ‘பஞ்ச்’ கொடுக்கலாம் .

uppu 99

இடையிடையே நகைச்சுவையை நுழைப்பது காட்சியின் வலிமையை நீத்துப் போகச் செய்யும் . தனியறையில் சந்திரன் மற்றும் நண்பர்களிடம் எம் எஸ் பாஸ்கர் பேசும் காட்சியில் சொல்லப்படும் விசயங்களின் அடர்த்தி,  சாம்ஸ் அடிக்கும் நகைச்சுவை ‘பஞ்ச்’ காரணமாக பஞ்சராகி விட்டது . தவிர்த்து இருக்கலாம்.

 என்றாலும் என்ன…  

ஒரு இயல்பான எளிய கதையை எடுத்துக் கொண்டு , தேவை இல்லாமல் எங்கும் வெளியே சுற்றாமல் , அந்தக் கதைக்குள்ளேயே இருந்து காட்சிகளை உருவாக்கி , சரியான முறையில் படமாக்கப்பட்ட காரணத்தால் சிறந்த படமாகி, குடும்பத்தோடு போய் குதூகலித்துக் கொண்டாடிவிட்டு வரலாம் என்ற உறுதியை தருகிறது , இந்தப் படம்

 உப்புக் கருவாடு … ஃபுல் கட்டு கட்ட வைக்கிறது

மகுடம் சூடும் கலைஞர்கள்

—————————————————

ராதா மோகன் , பொன் பார்த்திபன் ,நந்திதா, குமாரவேல், டவுட்டு செந்தில் , டாடி சரவணன்  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →