வாய்மை @ விமர்சனம்

vaaimai-2

ஓப்பன்  தியேட்டர் சார்பில் எஸ் தமிழினி மற்றும் எஸ்  மணிகண்டன் தயாரிக்க, 

சாந்தனு பாக்யராஜ் , கே.பாக்யராஜ், தியாகராஜன் , கவுண்டமணி, ராம்கி, பானு, பூர்ணிமா பாக்கியராஜ் , ஊர்வசி, , மனோஜ் பாரதிராஜா, பிரித்வி ராஜ்  , நமோ நாராயணன், வெங்கட் என்று பெரிய  நடிகர் பட்டாளமே நடிக்க , 
கதை திரைக்கதை வசனம் எழுதி ஏ. செந்தில் குமார்  இயக்கி இருக்கும் படம்  வாய்மை . 
இந்த  வாய்மை புரை தீர்க்கும் பொய்மையா ? இல்லைன் புரையோடிய உண்மையா ? பார்க்கலாம் 
அரசியல் தலைவர்  ஒருவரை சென்னையில்  பொதுக்கூட்ட மேடையில் சுட்டுக் கொல்கிறது பல நாடுகளின் சதி அடங்கிய சர்வதேச பயங்கரவாதம் . 
ஆனால் அந்த கொலை சதியில் சம்மந்தமே இல்லாத ஓர்  அப்பாவி இளைஞன் வேலன் சிக்கிக் கொள்கிறான்.. அவனை  தூக்கில் போட்டு விடுகிறார்கள்.
அதன் பின்னர் அவனது  தாயையும் (பூர்ணிமா  பாக்யராஜ்), அரசியல் தலைவரின் கொலைக்கு உடந்தை என்று கைது செய்து தூக்குத் தண்டனை அறிவிக்கிறார்கள். 
இந்தியா சுதந்திரம் அடைத்த பிறகு இதுவரை எந்தப் பெண்ணும் தூக்கில் போடப் படாத நிலையில் மேல்முறையீட்டில் தயங்கும் நீதிபதி (ஒளிப்பதிவாளர் கண்ணன் ) ஒரு முடிவுக்கு வருகிறார் . 
vaaimai-99
இந்தியா சுதந்திரம் வாங்கிய  பிறகும் சில ஆண்டுகள் வழக்கில் இருந்த முறைப்படி (என்று படத்தில் சொல்கிறார்கள்) , 
 பல்துறை பிரபலங்கள் அடங்கிய பனிரெண்டு பேர் அடங்கிய குழுவை  நியமித்து இரண்டு மணிநேரத்தில் அந்த பனிரெண்டு பேரும்  ஒரே கருத்தாக வேலனின் தாய்  நிரபராதி என்று தீர்ப்பு சொன்னால் , 
அந்தத் தாயை விடுவிக்கிறேன் என்று அறிவிக்கிறார் நீதிபதி  
ராணுவ மேஜர் , ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றிய இருதய அறுவை சிகிச்சை நிபுணர், எழுத்தாளர்,  ஐ ஏ எஸ் ஆன ஒரு  திருநங்கை  தொழில் அதிபர் ,விமான பைலட் ,
கோவில் அறங்காவலர் , பகலிலேயே சரக்கடிக்கும் ஐ  டி துறை இளம்பெண் என்று பல்துறை பிரமுகர்கள் உட்கார்ந்து பேசிய குழு என்ன முடிவு  எடுத்தது ?
அப்பாவி மகன் தூக்குக் கயிற்றுக்கு  பலியான நிலையில் அந்த அப்பாவித் தாயாவது காப்பற்றப்பட்டரா என்பதே இந்தப் படம் . 
சுட்டுக் கொல்லப்படுவது  கதர் சட்டை போட்ட குல்லா வைத்த (காங்கிரஸ் ) தலைவர் என்று சொல்வதன் மூலம் அந்த கேரக்டர் ராஜீவ் காந்தியை குறிக்கிறது . 
vaaimai-6
அவரது மரணத்துக்குப் பின்னால் உள்ள சதியை சந்தனு பாக்கியராஜின் உருவகக் கதாபாத்திரம் சன்னமாக  எடுத்துச் சொல்வதன் மூலம் ,
ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பின்னால் இருப்பது சர்வதேச கூலிப்படையில் கரமே அன்றி எந்த ஒரு இயக்கமும் அல்ல என்பது விளக்கப் படுகிறது . 
தலைவரின் கொலையில் அப்பாவி வேலன் தூக்கில் போடப் படுவதாக காட்டிய வகையில்
ராஜீவ் மரண விசாரணை என்ற பெயரில் தண்டிக்கப்பட்டர்வர்கள்  நிஜமாகவே  குற்றவாளிகள் அல்ல என்ற உண்மையை  படம் பேசுகிறது
அதற்கு பிறகும்  வேலனின் தாய்க்கும் தூக்குத் தண்டனை தருவதாக  காட்டுவதன் மூலம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் போன்றோர்
எப்படி அநியாயமாக சிக்க வைக்கப் பட்டுள்ளனர் என்பதையும் உணர்த்துகிறது . 
வேலனின் தாய் கதாபாத்திரத்துக்கு விடுதலை கிடைக்குமா கிடைக்காதா என்ற கேள்வியின் மூலம் பேரறிவாளன் விடுதலை ஆவாரா என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்துகிறது . 
அதே நேரம் இன்னொரு வகையில் வேலன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் பிரித்விக்கு பேரறிவாளன் போன்ற தோற்றம் கொடுத்து இருப்பதன் மூலம்
vaaimai-9
பேரறிவாளனின் இளமைக்கும் வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் தூக்குத் தண்டனை அளிக்கப் பட்ட கொடுமையும் , 
படத்தில் வேலனின்  தாயைத்  தூக்கில் போட சட்டம் முயல்வதாக காட்டுவதன் மூலம் அற்புதம் அம்மாளின் முதுமைக்கால நிம்மதியான வாழ்வை தூக்கில் போட சட்டம் முயல்வதையும் சொல்கிறது .
சபாஷ் இயக்குனரே !
இப்படி ஒரு அட்டகாசமான கருவை எடுத்துக் கொண்டதற்காக உங்களுக்கு நெகிழ்வான நன்றிகள் . 
தூக்கு மேடையில் கடைசி ஆசை  என்ன என்று கேட்கப் படும்போது ”என் அம்மாவின் புடவையால் தூக்கில் இடப்படவேண்டும் ” என்று  வேலன் சொல்லும் இடம் நெகிழ்வின் உச்சம் . 
கொல்லப்பட்டது அரசியல் தலைவர் என்பதால் வந்த அரசியல் அழுத்தம் காரணமாக அப்பாவிகளை எல்லாம் குற்றவாளியாக்கி விட்டோம் ” என்று முன்னாள் போலீஸ் அதிகாரி (கே. பாக்யராஜ் ) கதறும் காட்சியின் மூலம்  , 
ராஜீவ் கொலையில் வழக்கை முடிக்க அப்பாவிகளை எல்லாம் குற்றவாளியாக்கினோம் என்று ஒரு அதிகாரி வருந்தி வாக்குமூலம் கொடுத்த சம்பவத்தை  நினைவு படுத்தும் லாவகமும் அபாரம செந்தில் குமார் 
vaaimai-88
படத்தின் அடுத்த பலம் வசனங்கள் .  “அடுத்தவங்களுக்காக பேசறவங்க அவமானப் படவும் தயாரா இருக்கணும் ” என்ற வசனம்,  
ஈழத் தமிழர்களுக்காகப் பேசுபவர்களை இறையாண்மையின் பெயரால் கிண்டல் செய்யும் சில  குறையாண்மைகளை குறுக்கில் மிதிக்கிறது . 
 
இலங்கையில் தமிழ் இனமே அழிக்கபட்டப்போதும் வேடிக்கை பார்த்தது முதல்…. பொது  நன்மைக்கு எதிரான செயல்பாடுகளைத் தடுக்க உதவாமல் சிரித்துக் கிடக்கும்
பொது ஜனத்தின் ஆட்டு மந்தை  மனப்பான்மையை கண்டிக்கும் சாட்டையடி வசனங்கள் ….
“ஜெயில்ல இருக்கும் பெரும்பாலான மக்கள் ஏழைகள்தான் . காரணம் அவங்ககிட்ட காசு இல்லாததால நீதியை விலை கொடுத்து வாங்கவும் முடியல .
அநியாயமா சிக்கிக் கொள்ளும்போது தப்பிக்கக் காசு கொடுக்கவும் முடியல ” என்ற  அர்த்தமுள்ள சிந்தனைகள்…
உட்பட பல வசனங்கள் சிந்திக்க வைக்கும் ரத்தினங்கள் .அசத்தல் செந்தில் குமார் !
Actor Namo Narayan in Vaaimai Tamil Movie Stills
இன்னொரு பக்கம் இந்தியாவில் அநியாயமாக கொல்லப்பட்ட காந்திகளின் வரிசையில் மகாத்மா காந்தி , இந்திரா காந்தி, இவர்களோடு ராஜிவ்காந்தி படத்தையும் காட்டி பேலன்ஸ் செய்கிறார் 
(வேறு வழி ?  திரிஷா அல்லது நயன்தாரா  போன்ற  படங்களை  எல்லாம் கொஞ்சம் கூட கூச்சம் இன்றி அனுமதித்த ‘டேவிட் பிள்ளைகள் ‘ இன  உணர்வோடு எதுவும் சொன்னால் மட்டும் விட மாட்டார்களே !)
நடித்து இருப்போரில் சாந்தனு , தியாகராஜன், பிரித்வி, ஊர்வசி ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள் . கவுண்டமணி என்ற  யானைக்கு படத்தில் சோளப் பொறிதான் … 
(விவாதம் செய்யும் பனிரெண்டு பேரில் ஒரு குறிப்பிட்ட கேரக்டரை ஏற்று நடித்து இருப்பவர் ரொம்பப் படுத்தி எடுக்கிறார் .)
வெள்ளையனிடம் இந்தியா அடிமைப்பட்ட கதையை கிராஃபிக்ஸ் வடிவில் காட்டி வரும் பாடல் அருமை . 
இப்படி கருத்து ரீதியாக பாராட்ட பல விஷயங்கள் இருந்தாலும் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வலு கம்மி . 
வட்ட மேசையில் பனிரெண்டு பேரும் சும்மா  உட்கார்ந்து இருப்பதையே  ட்ராலி போட்டு காட்டி ‘பில்ட் அப்’ என்கிறார் இயக்குனர் .
அந்த நேரத்தில் அவர்கள்  பேசிக் கொண்டு  இருப்பது  போலவோ  இயங்குவது போலவோ காட்டினல்தனே லைவ் ஆக இருக்கும் . 
vaaimai-7
போட்ட ஷாட்களையே திரும்பத் திரும்ப போட்டு கடுப்படிக்கிறார்கள். 
படத்துக்கு பின்னணி இசை போட்டவரின் கையை ஆறு  மாதத்துக்கு எருமைச் சங்கிலியால் கட்டிப் போடலாம் , அப்படி ஒரு  குழந்தைத்தனமான  மற்றும் படு இரைச்சலான  அதனால் எரிச்சலான பின்னணி இசை .
கடைசி மழைக் காட்சியை ஒரு கவிதை போல  சொல்லி இருக்க வேண்டாமா ?
இதெல்லாம் கூட பரவாயில்லை . படத்தின் பெரிய பலவீனம் திரைக்கதைதான்  . 
தீர்ப்பை முடிவு செய்ய உட்காரும் பனிரெண்டு பேரில் தொழில்  அதிபர், கோவில் அறங்காவலர் , ஐ டி துறை இளம்பெண் எனப்தெல்லாம் பக்கா குழந்தைத்தனம் . அல்லது அவர்களை நியாயப் படுத்தும் காட்சிகள் இல்லை. 
அவர்களில் பலரின் குணாதிசயங்களை பார்க்கும்போது  ஒரு  முக்கிய தீர்ப்பை இப்படிப்பட்ட மக்கட்டைகளிடமா  ஒரு நீதிபதி  கொடுப்பார் என்ற கேள்வி,  கதையின் அடிப்படை தீவிரத்தையே கேள்விக்குறியாக்குகிறது . 
தீர்ப்பு சொல்ல உட்காரும் பனிரெண்டு பேர் குழுவில்  பதினோரு பேர் வேலனின் அம்மா  குற்றவாளி  என்கிறார்கள் . ஒருவர் மட்டும் குற்றவாளி இல்லை என்கிறார் .
vaaimai-4
போகப் போக குற்றவாளி  இல்லை என்போரின் எண்ணிக்கை உயர்கிறது . இதில்  என்ன  சுவாரஸ்யம் இருக்க முடியும்? 
மாறாக என்ன செய்து இருக்க வேண்டும்?
வேலனும் அவன் அம்மாவும் நிஜத்தில் குற்றவாளிகள் இல்லை என்பதை இன்னும் நெகிழ்வாக கனமான ரசிகனை உருக வைக்கும்படி ஆரம்பத்தில் சொல்லிவிட்டு 
பன்னிருவர் குழுவில்  இறந்து போன தலைவரின் மனைவி , மகள் , மகன், ராணுவ மேஜர் , என் கவுண்டர் போலீஸ்  அதிகாரிகள், சாட்சியங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு சொல்லும் பழக்கம் உள்ள ஒரு நீதிபதி , 
வேலன் அநியாயமாக கைது செய்யப்படுவதற்கு துணை போன அதிகாரி , தலைவர் கொலைக்கு காரணமாக இருந்த சதியின்   சொல்படி நடக்கும் ஒரு  பிரமுகர் , 
.இப்படி சிலரையும் உட்கார வைத்து .குற்றவாளி இல்லை என்பவர்களையும் உட்கார வைத்து …
ஆரம்பத்தில் குற்றவாளி இல்லை என்று சொல்வோர் அதிகமாகவும் குற்றவாளி என்று சொல்வோர் கம்மியாகவும் இருப்பதாக சொல்லி , 
vaaimaai-3
ஒரு நிலையில் போலி  தேசிய வாதம் , இறையாண்மை பற்றிய  தவறான புரிதல் , தேச பாதுகாப்பு , தீவிரவாதம் போன்றவை பற்றிய தப்பான கற்பிதங்களை  நியாயம் என்பது போல சிலர் பேச , 
அதனால் நேரம் செல்ல செல்ல வேலனின் அம்மா குற்றவாளியே என்று சொல்வோர் எண்ணிக்கை அதிகம் ஆவது போல காட்டி பதைபதைப்பை ஏற்படுத்தி , …
கடைசியாக ஒருவர் மட்டும்  வேலனின் அம்மாவையும் தூக்கில் போட  வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் .
அவர் யார் என்றால் தலைவர் இறந்த போது கூடவே இறந்தவரின்  குடும்ப உறுப்பினர்  என்று சொல்லி ஷாக் கொடுத்து.. 
கடைசியில் என்ன  ஆனது என்று சொல்லி இருந்தால்…
இந்தப் படம் இந்தியாவின் இருபத்தி சொச்சம் மொழிகளிலும் பட்டையைக் கிளப்பும் படமாக வந்து இருக்கும் . 
எனினும் பேரறிவாளன் தண்டனைக்கு குரல் கொடுத்த வகையில்  வாய்மை ஆதரிக்கப்பட வேண்டிய படம் . செந்தில்குமார் பாரட்டப் படவேண்டிய படைப்பாளி . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *