
தமிழில் இப்போதெல்லாம் பல வித்தியாசமான குணாதிசயத் தன்மை (ஜானர்) கொண்ட படங்கள் வர ஆரம்பித்து விட்டன .
எனினும் ரோடு மூவீஸ் அல்லது ரோடு சைடு பிலிம்ஸ் எனப்படும், வாகனப் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட படங்கள் குறைவுதான் .
இந்த நிலையில் அந்த வகைப் படம் ஒன்று இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக ஆரம்பித்து இருக்கிறது .
சிறந்த நடிகருக்கான 2015 ஆண்டிற்கான தேசிய விருதை நானு அவனுல்ல அவளு ( நான் அவன் இல்லை அவள் !) என்ற கன்னடப் படத்துக்காக வென்ற
சஞ்சாரி விஜய் கதாநாயகனாக நடிக்க ,அவருடன் கதாநாயகியாக கானவி என்பவர் நடிக்க ,
உடன் சுகுமார் , சந்திரகலா மோகன் , வில்லனாக ராணா, மற்றும் கிரிஷ் ஜத்தி, கோபால் தேஷ்பாண்டே , ஜெயகார் ஆகியோர் நடிக்க ,
கதை திரைக்கதை எழுதி priswes pictures சார்பில் தயாரித்து ஜான் ஜானி ஜனார்த்தன் என்பவர் இயக்கும் படம் பீரங்கிபுரம்.
(ரஜினி நடித்த மூன்று முகம் தமிழ்ப்படம் இந்தியில் டி. ராமராவ் என்ற தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் ஜான் ஜானி ஜனார்த்தன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது .
“பெயர்க் காரணம் அதுவா ?” என்றால் , “மத ஒற்றுமையை வலியுறுத்தும் பெயராகத்தான் வைத்தேன் ” என்கிறார் இயக்குனர் )
இந்த பீரங்கிபுரம் படம்தான் அப்படி. ரோடு மூவீஸ் அல்லது ரோடு சைடு பிலிம்ஸ் எனப்படும், வாகனப் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட படமாக உருவாகிறது .
மேற்படி சஞ்சாரி விஜய்க்கு தேசிய விருது பெற்றுத் தந்த நானு அவனுல்ல அவளு படம் பாண்டிச்சேரியைச் சேர்ந்த திருநங்கை ‘லிவிங் ஸ்மைல் வித்யா’வின்,
வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தின் அடிப்படையில் உருவானது
லிவிங் ஸ்மைல் வித்யாவின் கதாபாத்திரத்தில் நடித்துதான் சஞ்சாரி விஜய் தேசிய விருது பெற்றார் என்பது நம்ம ஊர் இயக்குனர்களும் நடிகர்களும் அறிய வேண்டிய தகவல் .
தேசிய விருது வாங்கியபோதே தமிழில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று சொன்னவராம் இவர் .
முப்பத்து மூணு வயதான இவர் இந்த பீரங்கிபுரம் படத்தில் அறுபது வயது முதியவராக படம் முழுக்க நடிக்கிர்ராராம்
படத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் மேடை நாடகப் பின்னணியில் இருந்து வந்தவர்களாம் .
படத்தின் அறிமுக விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நமீதா ஆகியோர் கலந்து கொண்டு படக் குழுவை வாழ்த்திப் பேசினார்கள்
இயக்குனர் ஜான் ஜானி ஜனார்த்தன் பேசும்போது ” நான் திருத்தணியைச் சேர்ந்தவன் . எவ்வளவோ சாதனைகள் செய்த மாபெரும் தமிழ் சினிமா இயக்குனர்களின் அடி ஒற்றித்தான் படம் இயக்க வந்துள்ளேன்.
சென்னை முதல் ராஜஸ்தான் வரை செல்லும் ஒரு பயணத்தின் மூலம் வாழ்க்கை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும்படியாக இந்தப் படம் உருவாகிறது . அக்டோபரில் ஷூட்டிங் போகிறோம் .
திறமை மிக்க நடிகர்கள் கலைஞர்கள், டெக்னீஷியன்கள் இவர்களின் துணையோடு களம் இறங்குகிறேன் முழு மனசோடு ரசிக்க ஒரு நல்ல படத்தைக் கொடுப்போம் ” என்றார் .
படத்தின் மேக்கப் மேன் உமா மகேஷ்வர் பேசும்போது ” நான் எந்த ஒரு மேக்கப் செய்தாலும் கமல் சார் தனது படங்களில்
தனது கேரக்டருக்கு எப்படி சிரத்தையோடு மேக்கப் செய்து கொள்வார் என்று எண்ணி, அப்படி ஒரு சிரத்தையோடுதான் மேக்கப் போடுவேன் .
இயக்குனர் ஜான் ஜானி ஜனார்த்தன் என்னிடம் இந்தப் படத்தின் கதையை சொல்லி மேக்கப்பின் அவசியம் பற்றி சொன்னபோது இவற்றுக்கு எல்லாம் தேவையான நிதி ஆதாரம் இருக்கிறதா என்றுதான் கேட்டேன் .
இல்லை ஆனா வாங்க பேசுவோம் என்றார் . முழு கதையையும் கேட்ட பிறகு நிரம்ப திட்டமிட்டு குறைந்த செலவில் செய்து கொடுத்துள்ளேன் ” என்றார் .
வில்லன் நடிகர் ராணா பேசும்போது ” . டாட்டூ எனப்படும்பச்சை குத்தும் பழக்கத்தை மையப்படுத்தி வரும் படம் இது .இதற்காக எனது உடல் முழுக்க பச்சை குத்திக் கொண்டு நடிக்கிறேன் .
பச்சை குத்துவது ஏதோ மேற்கத்திய நாடுகளின் பழக்கம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம் . ஆனால் அது நமது பழைய கலாச்சாரம் . அதை இந்த படம் சொல்லும் ” என்றார்
இசையமைப்பளர் ஷ்யாம் எல் ராஜ் தன் பேச்சில் ” படத்தில் ஐந்து பாடல்கள் . தவிர படத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைக்கதை இது . எனவே பின்னணி இசையும் சிறப்பாகத் தருவேன் ” என்றார்
நடிகர் சஞ்சார் விஜய் பேசுகையில் ” நான் என்னுடைய சிறுவயதிலிருந்தே கமல் மற்றும் விக்ரம் அவர்களின் நடிப்புக்கான உழைப்பைப் பார்த்து வளர்ந்தவன்.
அவர்களின் மிகப்பெரிய ரசிகனும் கூட. என்னை தேசிய விருதுக்கு தேர்ந்தெடுத்த நடுவர் குழுவில் பாரதிராஜா சாரும் இருந்தார் .
அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன் . இந்தப் படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கிறேன் நிச்சயம் அது தமிழ் மக்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். என்று கூறினார்
விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் பேசுகையில், பீரங்கிபுரம் படத்தை உருவாக்க ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் மட்டும் 1 வருடம் இவர்கள் வேலை செய்தது ஆச்சர்யமளிக்கிறது.
மேலும் சஞ்சாரி விஜய் அவர்களின் உழைப்பு என்னை கவர்ந்திருக்கிறது. இவருக்கு தேசிய விருது கிடைத்தது மட்டுமின்றி உலக அளவில் விருதுகள் வாங்க வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்
நடிகை நமிதா பேசுகையில், “பீரங்கிபுரம் படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகியிருக்கிறது, சினிமாவை பொருத்தவரை மொழி முக்கியமில்லை. இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால்
நேற்று DONT BREATH என்ற ஆங்கிலப் படம் பார்த்தேன் அது 1 மணி நேரம் 45 நிமிடமுள்ள படம் இதில் 1 மணி நேரம் 10 நிமிடம் வசனமே இல்லை என்பதுதான் ஆச்சர்யம்.
இந்தப் படமும் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் என்று நமிதா கூறினார்.
பீரங்கிபுரம் குழுவுக்கு வாழ்த்துகள் !