24 AM ஸ்டுடியோ சார்பில் ஏ எம் ராஜா தயாரிக்க , சிவ கார்த்திகேயன் , நயன்தாரா, ஃபகத் ஃபாசில், பிரகாஷ் ராஜ், சினேகா நடிப்பில்,
தனி ஒருவன் புகழ் மோகன்ராஜா இயக்கி இருக்கும் படம் வேலைக்காரன் . இவன் ரசனைக்காரனா ? பார்க்கலாம் .
கூலிக்காரன் குப்பமாக இருந்து கொலைகாரன் குப்பம் என்று பெயர் மருவிய ஏரியாவை, பேருக்கு ஏற்ப,
கொலை செய்யும் அடியாட்களை உற்பத்தி செய்யும் பகுதியாக மாற்றி வைக்கிறான் தாதா காசி (பிரகாஷ் ராஜ்) .
அங்கே பிறந்து வளர்ந்த – படித்த இளைஞனாகிய அறிவு (சிவ கார்த்திகேயன்) அங்குள்ள இளைஞர்களை நல்வழிப் படுத்த எண்ணி ,
குப்பத்துக்கு மட்டும் கேட்கும் சமூக வானொலி நடத்தி விழிப்புணர்ச்சி தருகிறான். இதனால் தாதாவின் கோபத்துக்கும் ஆளாகிறான் .
அதே நேரம் , தான் குடும்பத்துக்கு எந்த வகையிலும் உதவியாக இல்லை என்பதை அம்மாவின் வருத்தம் மூலம் அறிந்து கொள்ளும் அறிவு , வேலைக்குப் போகிறான் .
பிரட் ஜாம் உள்ளிட்ட பாக்கெட் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறான்.
அங்கே மேலதிகாரி ஒருவன் ஆதி (ஃபகத் ஃபாசில், ) இவனை கவர்கிறான் . அவன் எவ்வளவு மோசமானவன் என்று தெரியாமலே அவனை நம்புகிறான் அறிவு .
பயனில்லாத பொருட்களை எப்படியாவது ஏமாற்றி நடுத்தர மக்கள் தலையில் கட்டுவதோடு உயிருக்கே ஆபத்து விளைவிக்கும்,
விஷ ரசாயனங்கள் கலந்த உணவுப் பொருட்களை தயாரித்து மக்களை கொல்லும் நவீன கார்ப்பரேட் சந்தையின் கோர முகம் அவனுக்கு அப்போது தெரியவில்லை இதற்கிடையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நல்ல கருத்துகளை சொல்லியும், பரபரப்புக்காக அந்தக் கருத்துகள் திரித்துக் காட்டப்பட்டதால் பாதிக்கப்பட்ட,
மிருனாளினி என்ற பெண்ணின் (நயன்தாரா ) நட்பு அறிவுக்கு கிடைத்து, அது காதல் ஆகிறது .
இந்த நிலையில் அறிவுவின் நண்பனான பாக்யாவை (விஜய் வசந்த்) தாதா காசி கொல்ல , அவனிடம் அறிவு கொந்தளிக்க ,
பதிலுக்கு காசி ” நானாச்சும் பணத்துக்காக கூலி வாங்கிக்கிட்டு ஒரு சில பேரைதான் தெரிஞ்சே கொல்றேன் .
ஆனா நீ அதே பணத்தை சம்பளம் என்ற பெயரில் கூலியா வாங்கிக்கிட்டு , மோசமான விஷம் கலந்த உணவுப் பொருட்களை குழநதைகள் உட்பட எல்லாருக்கும் வித்து ,
நீ கொலை செய்யறவன் கிட்டயே காசும் வாங்கற கேவலமான கொலைகாரன்” என்று சொல்ல …
அறிவுக்கு அறிவுக் கண் திறக்கிறது . அறிவு , திறமை மூளை, வஞ்சகம் , குயுக்தி ., பண படை பலம் மிக்க கார்ப்பரேட் வியாபார கொலைகார நயவஞ்சக கூட்டத்துக்கும் அறிவுக்கும் ,
அதன் பிறகு நடந்த சதிப் போரில் அப்புறம் யார் ஜெயித்தார்கள் என்பதுதான் இந்த வேலைக்காரன் .
சாதி மத இனம் நிலம் கடந்து ஏழை , பணக்காரன், படித்தவன் , படிக்காதவன் , அறிவாளி , முட்டாள் எல்லாரையும் நவீன கார்பரேட் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை என்ற,
அசுரபல தொழில் எப்படி முட்டாள்களாக , தற்கொலைகாரர்களாக மாற்றிக் கொண்டு உள்ளது என்பது , அதிர அதிரச் சொல்லி அசத்தி இருக்கிறார் இயக்குனர் மோகன்ராஜா .
தனி ஒருவன் பாணியில் அதை விடவும் கருத்தாழம் மிக்க ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார் .
குப்பத்தில் லைட் போடுவதை கிளைமாக்ஸ் வரை பயன்படுத்துவது உட்பட ,படம் சொல்லும் எல்லா விசயங்களையும் முழுமையாக விசயத்தையும் திரைக்கதையில் பயன்படுத்தியவிதம் . சிறப்பு
ஆரம்பத்தில் நல்ல அதிகாரியாக தெரியும் ஆதி (ADHI)யின் சுய ரூபம் வெளிப்படுகையில் அவன் முழுப் பெயர் அதிபன் (ADHIban)என்று சொல்வது போன்ற நுணுக்கமான ரசனைக்குரிய விஷயங்கள் படத்தில் ஏராளம் .
படமாக்கலும் வெகு சிறப்பு .
முற்றிலும் தனக்கு புதிதான பாணியில் நடித்து பாராட்டுப் பெறுகிறார் சிவ கார்த்திகேயன். ”கருத்தவன்லாம் … ” பாட்டுக்கு பக்காவாக பர்பெக்டாக ஆடி பட்டையைக் கிளப்புகிறார் . அருமை .
நயன்தாரா கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் . ஃபகத் ஃபாசில் நன்றாக நடித்துள்ளார்
பிரகாஷ் ராஜ், விஜய் வசந்த் , ரோகினி , நாசர், ரோபோ ஷங்கர், காளி வெங்கட், ரோகினி , சார்லி எல்லோருமே சிறப்பு .
ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும்பலம் .
அனிருத் இசையில் கருத்தவன்லாம் பாட்டு ஹிட் . பாடல்களும் பின்னணி இசையும் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம் .
இன உணர்வுக்கு எதிராக கார்ப்பரேட் கம்பெனிகள் இயங்குவது , பெண்ணிய சிந்தனைகள் போன்ற விசயங்களை தொடுவதொடு , ஒரு மாபெரும் பிரச்னைக்காக தீர்வை ஒரு சாதாரண கடைநிலை வேலைக்காரப் பெண்ணின் வாழ்வில் இருந்து எடுப்பதில் வெளிப்படும் வர்க்க மற்றும் சமூக ரீதியான பார்வை இவற்றின் மூலம்
விஸ்வரூபம் எடுக்கிறான் வேலைக்காரன் .
மகுடம் சூடும் கலைஞர்கள்
———————————————
மோகன் ராஜா, சிவ கார்த்திகேயன், ராம்ஜி