கோவை ஜேப்பியார் பிலிம்ஸ் சார்பில் எஸ். ராஜேந்திரன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கால் நூற்றாண்டுக்கும் மேல் உதவியாளராக இருந்த ஜெயராமன்.. இவர்களுடன் எல். பிரித்வி ராஜ், கே.ஜெயராமன் ஆகியோர் தயாரிக்க …
மதயானைக் கூட்டம் படத்தில் நாயகனாக நடித்த கதிருடன் ரேஷ்மி ஜோடியாக நடிக்க, அனுசரண் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம் கிருமி.
படத்தின் கதை திரைக்கதையை , காக்காமுட்டை படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் மணிகண்டனும் இந்த அனுசரணும் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள்.
அனுசரண் ஆஸ்திரேலியாவில் பல குறும்படங்களை இயக்கியவர் . இசையமைப்பாளர் நடிகர் ஜி வி பிரகாஷ் மூலம் நாயகன் கதிருக்கு அறிமுகம் ஆகி, அந்த வழியில் தயாரிப்பாளர் ராஜேந்திரனை அடைந்து, இந்த கிருமி படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றவர். படத்தின் படத் தொகுப்பாளரும் இவரே.
நடிகர் சார்லி — ஒரு இடைவெளிக்குப் பிறகு வனிதா ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து இருக்கிறார்கள் . படத்தில் கானா பாலா மூன்று பாடல்கள் பாடி இருக்கிறார் .
படத்தில் ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் . இந்தப் படத்தில் நடித்த எந்த நடிகருக்கும் மேக்கப்பே போடக் கூடாது என்று கூறி, மேக்கப்பே இல்லாமல் எல்லோரையும் அழகாகப் படம் பிடித்து இருக்கிறார் .
நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வண்டிகளை லாக் செய்து போலீஸ் வண்டியில் ஏற்றி அனுப்புவதில் போலீசுக்கு உதவும் வேலைக்குப் போகும் ஓர் இளைஞன் , அப்படியே போலீஸ் இன்ஃபார்மராக மாறி, போலீஸ் செய்யும் தவறுகளுக்கும் தெரிந்தோ தெரியாமலோ துணை போய்….
அதனால் நியாயமாக நல்லவர்களின் கோபத்துக்கும் அநியாயமாக கிரிமினல்களின் கோபத்துக்கும் இடையில் பந்தாடப்பட்டு , தவறான போலீஸ் அதிகாரிகளின் இரும்புப் பிடியிலும் சிக்கிக் கொண்டு ….
படத்தின் கதை இப்படி போகும் என்பது, பாடல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட முன்னோட்டத்தில் தெரிந்தது . பாடல்களும் நன்றாக இருந்தன. கதாநாயகன் மற்றும் நண்பர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்வின் உற்சாக நிகழ்வுகளை பாடல்களில் சிறப்பாக பதிவு செய்து இருந்தார்கள் கதிருக்கும் ரேஷ்மிக்கும் இடையேயான ஒரு ‘நெருக்க’ப் பாடலும் கவனம் கவர்ந்தது.
கலைப்புலி எஸ் தாணு தலைமையில் பாடல்களை இயக்குனர் எஸ் பி முத்துராமன் வெளியிட நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார்.நக்கீரன் ஆசிரியர் கோபால் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார் . எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் , பைவ் ஸ்டார் கதிரேசன் ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ரஜினி ஜெயராமன் மற்றும் ராஜேந்திரனுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்
வரவேற்புரையாற்றிய ரஜினி ஜெயராமன் ” நான் இன்று இந்த இடத்தில் இந்த மேடையில் இப்படி ஒரு தயாரிப்பாளராக நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் சூப்ப ஸ்டார் அண்ணன் ரஜினிதான் . அவர் இல்லாமல் நான் இல்லை . அவர் இன்று இங்கே வர முடியாவிட்டாலும் மனமார வாழ்த்தி இருக்கிறார்.
அதே போல என்னை வாழ்த்த வந்திருக்கும் இளையதளபதி விஜய்யின் ரசிகர் மன்ற நண்பர்களுக்கும் நன்றி ” என்றார், தொடர் விசில் ஆரவரங்களுக்கு இடையில் .
இசையமைப்பாளர் கே விழா மேடையில் இசை இயக்கம் செய்ய, படத்தின் பாடல் ஒன்றை மேடையில் பாடிக் காட்டிய கானா பாலா தன் பேச்சில் ” நான் இதுவரை வேலை செஞ்ச படங்களிலேயே அதிக சம்பளம் வாங்கியது இந்தப் படத்துக்குதான் . திருப்தியாகக் கொடுத்தார்கள் .
அந்த அளவு மிக கண்ணியமாக தயாரிப்பாளர்கள் ராஜேந்திரனும் ரஜினி ஜெயராமனும் நடந்து கொண்டனர் ” என்று சந்தோஷமாக அறிவித்தவர் , படு உற்சாகமாக , மீண்டும் முழு பாடலையும் பாடிக் காட்டினார் .
இயக்குனர் எஸ் பி முத்துராமன் பேசும்போது “தயாரிப்பாளர் ராஜேந்திரன் மற்றும் ஜெயராமன் இருவரும் திருப்தியாக சம்பளம் கொடுத்தது பற்றி கானாபாலா கூறினார் . எனக்கு உடனே எங்கள் அய்யா ஏ வி எம் நிறுவன அதிபர் மெய்யப்பன் ஞாபகம்தான் வந்தது .
ஏ.வி.எம் மற்றும் நாகிரெட்டி,ஜெமினி எஸ்.எஸ்.வாசன், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம்உள்ளிட்ட மாபெரும் தயாரிப்பாளர்கள் எல்லாருமே சம்பள விசயத்தில் கண்ணியமாக நடந்து கொண்டதால்தான் அழியாப் புகழையும் மறையாத வெற்றிகளையும் அடைந்தனர் . இந்த கோவை ஜேப்பியார் பிலிம்ஸ் நிறுவனமும் அந்த நிறுவனங்கள் போல செழித்து வளர வாழ்த்துகிறேன் .
இயக்குனர் அனு சரண் படத்தின் படத்தொகுப்பாளராகவும் இருக்கிறார். இயக்குனரே படத் தொகுப்பாளராகவும் இருக்கும்போது திட்டமிட்டு தேவையான காட்சிகளை மட்டுமே எடுக்க முடியும் . தேவை இல்லாமல் பணம் வீணாகாது . பீம்சிங் முதற்கொண்டு நான் வரை அப்படி எடிட்டிங் தெரிந்த இயக்குனராக இருந்ததால்தான் தயாரிப்பாளர்களை காப்பாற்றும் இயக்குனராக இருந்தோம் . அந்த வரிசையில் அனுசரண் வர வேண்டும் .
ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது . நாயகன் கதிர் மத யானைக் கூட்டம் படத்திலேயே மனம் கவர்ந்தவர் . இதிலும் சிறப்பாக நடித்துள்ளது இங்கே டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும்போதே தெரிகிறது . அவருக்கும் வாழ்த்துகள் ” என்றார் .
நக்கீரன் கோபால் தன் பேச்சில் “ரஜினியின் நிழலாக வாழ்ந்த ஜெயராமன் தயாரிப்பாளர் ஆகி இருப்பது சந்தோசம் . பொதுவாக கிருமி என்றால் அது ஆபத்தை விளைவிப்பது. நோய் தருவது . இந்தக் கிருமி மிக நல்ல கிருமி . இது நல்ல விஷயத்தை சொல்கிறது. இது வெற்றி பெற வேண்டிய கிருமி
காக்கா முட்டை மணிகண்டன் பேசும்போது ” படம் மிக சிறப்பாக எடுக்கப்பட்டு இருக்கிறது. டைரக்ஷன் நன்றாக இருக்கிறது . கதிர் ஒரு நல்ல ஹீரோவாக வருவதற்கான வாய்ப்பு தெரிகிறது . இசையமைப்பாளர் கே நன்றாக இசை கொடுத்து இருக்கிறார் . கே யுடன் விரைவில் ஒரு படம் சேர்ந்து செய்வேன் ” என்றார் .
விஜய் சேதுபதி பேசும்போது ” நான் இந்தப் படத்தைப் பார்த்துட்டேன் . படம் ரொம்ப சூப்பரா இருக்கு. ‘சமூகத்தில் எவ்வளவோ கிருமிகள் இருக்கு. நாம குண ஆரோக்கியத்தோடு சரியா இல்லன்னா எந்தக் கிருமி வேண்டுமானாலும் நம்மளை தாக்கும் .அதனால கவனமா இருக்கணும் ‘ என்று சொல்லும் படம் இது .
அனுசரண் ரொம்ப அற்புதமான டைரக்ட் பண்ணி இருக்காரு . காட்சிகள் ரொம்ப கூலாக இருக்க, பின்னணி இசையில் ஒரு டென்சன் ஃபீல் கொடுத்து , இப்படி வித்தியாசமாக உருவாக்கி இருக்கிறார்கள் . ஒரு தாக்கத்தை படத்தில் பார்க்க முடியும். கதிர் நல்ல நடிச்சு இருக்கார் . படம் கண்டிப்பா வெற்றி பெறும்” என்றார் .
இப்படியாக, நிஜமாகவே ஒரு எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது இந்த சினிமா கிருமி.