மேக் 5 ஸ்டுடியோஸ் சார்பில் ஆனந்த் உதார்கர் , கார்த்திகேயன் இருவரும் தயாரிக்க, யுவன், ஸ்ராவியா , ரியாஸ்கான் , பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடிக்க,
விஜய் ஆர் ஆனந்த் . ஏ.ஆர் . சூரியன் இருவரும் எழுதி இயக்கி இருக்கும் படம் விளையாட்டு ஆரம்பம் . விளையாடலாமா ? பார்க்கலாம்
ஐ டி நிறுவனத்தில் பணியாற்றி ஜாலியாக இருந்த நிலையில் திடீர் என கம்பெனி மூடப் பட, வேலை இழக்கும் நண்பர்கள் யுவன், அஞ்சனா, ஷாருக்கான் மற்றும் சிலர் ( யுவன், ஸ்ராவியா, பவர் ஸ்டார் மற்றும் சிலர் )
அஞ்சனாவுக்கும் யுவனுக்கும் காதல் .
நண்பர்கள் மல்டி லெவல் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க முனைகிறார்கள் . பல போராட்டங்களுக்குப் பிறகு பணமும் வருகிறது .
அஞ்சனாவின் அண்ணன் அர்ஜுன் (ரியாஸ்கான்) அராஜகமான போலீஸ் அதிகாரி . அப்பா ஆளுங்கட்சி அரசியல்வாதி .
ஒரு வீக் என்ட் பார்ட்டியில் யுவனுக்கும் அர்ஜுனுக்கும் பகை வந்து அது தொடர்ந்து வளர்கிறது . இந்த நிலையில் யுவன் அஞ்சனாவை காதலிப்பதை அறிந்த அர்ஜுன் அந்தக் காதலை உடைக்கப் பார்க்கிறான் .
அதே நேரம் புதிதாக உருவாகும் ஒரு தப்பான எம் எல் எம் கம்பெனி யுவனை இழுக்கப் பார்க்கிறது . யுவன் மறுக்கிறான். தப்பான கம்பெனிக்கு ஆதரவாக இருக்கும் அரசியல்வாதி , யுவனை மிரட்டுகிறார் .
அப்போதும் யுவன் மறுக்க, அர்ஜுன் யுவனை கொல்ல முயல்கிறான் . அது முடியாத நிலையில் அர்ஜுனும் அரசியல்வாதியும் ஒரு பத்திரிக்கையாளரும் சேர்ந்து ,
மக்களை ஏமாற்றும் மோசமான எம் எல் எம் நடத்தும் நபர் என்ற அவப்பெயரை யுவனுக்கு ஏற்படுத்துகின்றனர் .
அதை நம்பும் பொது மக்களும் யுவனையும் அவன் கம்பெனியையும் அடித்து உடைக்கின்றனர் .
சட்டத்தின் முன் குற்றவாளியாகும் யுவன் அதில் இருந்து மீண்டானா இல்லையா? ஆம் எனில் எப்படி ? யுவனுக்கும் அர்ஜுனுக்கும் இடையேயான விளையாட்டு என்ன ஆனது என்பதே இந்தப் படம்
வேலை இழந்த ஐ டி நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி நெகிழ்வு .
வேலை இல்லாத் திண்டாட்டம் , சுய தொழில் , நம்பிக்கை , இளைஞன் , தமிழன், இந்தியன் என்று பல வார்த்தைகள் வசனங்களில் கேட்கின்றன .
யுவன் உற்சாகமாக நடிக்கிறார் . ஆனால் நன்றாக நடிப்பது என்பது வேறு . ஸ்ராவியா பழுதும் இல்லை பலமும் இல்லை .பவர் ஸ்டார் சீனிவாசன் பற்றி எல்லாம் சொல்ல ஒன்றும் இல்லை .
எம் எல் எம் என்ற களம் புதிதே தவிர கதை ஒன்றும் புதுசு இல்லை . காட்சிகளும் புதிது இல்லை
அமரன் படத்தில் இடம் பெற்ற வெத்தல போட்ட ஷோக்குல பாட்டின் மெட்டை முதல் பாடலில் பயன்படுத்தி இருப்பதைத் தவிர ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒன்றும் கவனிக்கும்படி இல்லை .
பின்னணி இசையில் இரைச்சல் அதிகம் .
எம் எல் எம் என்கிற ‘மல்டி லெவல் மார்க்கெட்டிங் கெட்ட தொழில் அல்ல; மிக நல்ல தொழில்’ என்பது படம் சொல்ல வரும் கருத்து .
அதற்கு அவர்கள் சொல்லும் ஆதாரம் ‘சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எம் எல் எம் என்பது அங்கீகரிக்கப்பட்ட தொழில் .
அதனால்தான் அந்த நாடுகளில் இருந்து யாரும் வேலை கேட்டு வெளி நாட்டுக்குப் போவதில்லை ‘ என்கிறார்கள் .
அங்கெல்லாம் எம் எல் எம் நல்ல தொழிலாக இருக்கக் காரணம் அங்கு எந்த ஏமாற்றும் செய்ய முடியாது . தவிர அங்கே தரமான பொருட்களே எம் எல் எம் மில் வருகிறது .
ஆனால் நம்ம ஊரில் அப்படியா ? இங்கே எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் . தவிர கண்டு பிடிப்பின் போது பல்லை இளித்த பல தயாரிப்புகளை,
மக்கள் தலையில் கட்டுவதுதனே நம்ம ஊரில் பெரும்பாலும் மல்டி லெவல் மார்க்கெட்டிங்கின் வேலை .
இந்த யதார்த்த முழுப் பூசணிக்காயை இந்தப் படம் எனும் சோற்றில் மறைக்க முயல்வது அடிப்படையிலேயே பலவீனம் ஆகி விடுகிறது அப்புறம் மற்ற விசயங்களை பேசி என்ன பயன்?
விளையாட்டு ஆரம்பம் …. சும்மா விளையாட்டுக்கு !






