போங்கு @ விமர்சனம்

bongu 2

ஆர்.டி. இன்ஃபினிடி டீல்  எண்டர்டைன்மென்ட்  சார்பாக ரகுகுமார் என்கிற திரு ,  ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர்  தயாரிக்க, 

நட்ராஜ் சுப்ரமணியன் (  நட்டி ) ருஹி சிங் ,  அதுல்  குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், ஷரத் லோகித்தஷ்வா,  ராஜன்,மனிஷா, பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோர் நடிக்க, 

 கலை இயக்குனர் சாபுசிரிலிடம் உதவியாளராக பணியாற்றிய தாஜ்  ,  கதை,  திரைக்கதை,  வசனம்  எழுதி  இயக்கியிருக்கும் படம் போங்கு . இது ரசிகனுக்கு போங்கா இல்லை சுவையான நுங்கா ? பார்ப்போம்

பிரபல கார் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில்   பணியாற்றும் நண்பர்கள் மூவர் ( நட்டி, ரூஹி , அர்ஜுன்) .

ஒரு பிரபலம் அங்கு  வந்து கார் வாங்க, அந்த காரை வீட்டில் டெலிவரி செய்து வர  மூவரும் போக, வழியில் கார் கடத்தப்படுகிறது .

bongu 3

ஆனால் அதை யாரும் நம்பத் தயாராக இல்லாத நிலையில் , மூவருமே குற்றவாளிகளாக்கப் படுகின்றனர் .

கார் திருடர்கள் என்று அறிவிக்கப்பட்டு , ஜெயிலுக்குப் போகின்றனர். அங்கே ஜெயில் பழகிய நண்பன் ஒருவன் கிடைக்கிறான் .

விடுதலை கிடைத்த பிறகும் பிளாக் லிஸ்டில் வைக்கப்பட்டதால் வேலை கிடைக்காத நிலையில் நிஜமாகவே கார் திருடர்களாகவே மாறுகின்றனர் .

பிரபல் திருட்டுக் கார் புரோக்கர் ஒருவரின் கையாட்களாக மாறி, நகைக்கடை முதலாளி ஒருவரின் காரை கொள்ளை அடிக்கின்றனர் .

அதனால் வேலை இழந்த கடை வாட்ச் மேனுக்கு (முண்டாசு பட்டி ராம்தாஸ்) அடைக்கலம் தருகின்றனர் . இவர்களின் கார் திருட்டுத் திறமையை மெச்சிய புரோக்கர்,  ஒரு சவாலான வேலை கொடுக்கிறான் .

bongu 4

கார்களின் காதலனும் மிக விலை உயர்ந்த பல கார்களை வைத்திருப்பவனும் மதுரையின் பிரபல தாதாவுமான (என்ன காம்பினேஷனோ) பாண்டியன் (சரத் லோகித்தஷ்வா ) என்பவனிடம் உள்ள ,

பத்துக் கார்களை திருடி வரும் வேலையை கொடுக்கிறான் . சவாலை ஏற்றுப் போகின்றனர் .

பாண்டியனுக்கும்  ஒரு எம்பியின் மகளுக்கும் (மனிஷா) உள்ள ஒரு பிரச்னை உட்பட, இந்த கார் திருடர்களின் வாழ்க்கையோடு பாண்டியனுக்கு உள்ள ஒரு கொடுக்கல் வாங்கலும் அங்கே தெரியவருகிறது

அப்புறம் என்ன ஆச்சு என்பதே இந்த போங்கு.

எண்பதுகளில் கே பாலாஜி தயாரிப்பில் ரஜினி உட்பட பல நடிகர்கள் நடித்த கார் திருட்டுப் படங்கள் (அவற்றுக்கும் மூலம் இந்திப் படங்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்)  ஞாபகம் இருக்கா?

அதே தொனியில் தன்மையில் படம் போகிறது . அந்தப் படங்களின் அளவுக்காவது இந்தப் படத்தை எடுத்து இருக்கலாம் .

bongu 5

இன்றைய நிலையில் கார் திருட்டு என்பது சாதாரண விஷயம் அல்ல .  குறைந்து போன குற்றம்  அது . அதையும் மீறி அதுதான் கதை என்றால், 

டெக்னாலஜியை கரைத்துக் குடித்து காட்சிகள் அமைக்க வேண்டும் . அது இல்லை என்பது ஒரு பின்னடைவே .

இன்று கல்லூரி படிக்கும் இருவர் மாறி மாறி கடிதம் எழுதி காதலை பகிர்ந்து கொள்கிறார்கள் என்று கதை சொன்னால் அடிக்க வரமாட்டீர்கள்? அது போல ஒரு உணர்வு

 வாக்கி டாக்கி மாதிரி ஒன்றை வைத்துக் கொண்டு எல்லா கண்காணிப்புக் கேமராக்களையும் முடக்குவதாகக் காட்டுவது  எல்லாம் ஓவர் .

கையில் ஒரு லேப் டாப் இருந்தால் பொம்பளையே தேவைப் படாமல் பிரின்ட் அவுட் எடுக்கிற கணக்காக புள்ளை பெத்துக்கலாம் என்ற ரீதியில் காட்சிகள் வைப்பது …

bongu 1

போதும் படைப்பாளீஸ்… முடியல . பிளீஸ்…  டெக்னாலஜி காட்டும்போது லாஜிக் பண்ணுங்க . காசு கொடுத்து படம் பாக்க வர்ற அப்பவிக்குப் புரிய வைங்க . ரொம்ப புண்ணியமாப் போகும் .

நட்டி வழக்கம் போல மலிவுப் பதிப்பு ரஜினி ஸ்டைலில் நடித்துக் கலக்குகிறார் . குறை சொல்ல ஒன்றும் இல்லை

ருஹி சிங் இளமை . வாளிப்பு ஒகே . ஆனா இடுப்பு மாதிரியே முகமும் இருக்கு . அவ்வளவு இறுக்கம் .

”என் கிட்ட சொல்லிட்டு என் வீட்டுல திருடிக் காட்டுடா” என்று பாண்டியன் சவால் விட, அதை நாயகன் ஏற்க , எப்படி எப்படி எல்லாம் காரை திருட முடியும் என்று, 

என்ஜினியரை (சாம்ஸ்)  வைத்து பாண்டியன் டிரையல் பார்க்க, அதில் எஞ்சினியர் ஜெயிக்க,

அதன் விளைவாக காரை திருடாமல் தடுக்கும் பொறுப்பை பாண்டியன் என்ஜினியரிடமே கொடுக்க, நாயகன் திருடப் போக,

bongu 6

படத்தில் அந்த பத்து நிமிஷ ஏரியா அசத்தல். காமெடியில் சாம்ஸ் கலக்கி இருக்கிறார் .

ஆனால் அதன் முடிவில் என்னமோ இன்டரஸ்டிங் ஆக, சொல்லப் போகிறார்கள் என்று பார்த்தால்  கடைசியில் அந்தக் காட்சியை புகை போட்டுப் பழுக்க வைக்கிறார்கள் .

அடிப்படையில் சின்னதாக ஒரு கதை படத்தில் இருக்கு . அதை நல்ல திரைக்கதை அமைத்து சுவாரஸ்யப்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது .

ஆனால் அது நடக்காத காரணத்தால் ,

போங்கு….. போங்கு !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *