ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் புஷ்பா புகழ் சுகுமார் தயாரிக்க,
சாய் தரம் தேஜ், சம்யுக்தா மற்றும் சுனில், பிரம்மா ஜி, ரவி கிருஷ்ணா, அஜய் நடிக்க சுகுமாரின் திரைக்கதையில் கார்த்திக் வர்மா டண்டூ என்பவர் கதை எழுதி இயக்கி தெலுங்கில் வந்த படத்தின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வந்திருக்கும் தமிழ் வடிவம்..
உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் ஊருக்கு எதிராக நரபலி கொடுக்கிறார்கள் என்று ஒரு பிராமண குடும்பத்தை ஊர் மக்கள் உயிரோடு கொளுத்துகின்றனர். அந்த வீடு கைவிடப்பட பேய்கள் உலவும் வீடாக மாறுகிறது .

நகரத்தில் வசிக்கும் அந்த ஊர் பெண்மணி ஒருவர் தமக்கு ஊரில் இருக்கும் சொத்து ஒன்றை பள்ளிக் கூடம் கட்ட தானம் அளிக்க தன் மகனோடு (. சாய் தரம் தேஜ்) ஊருக்கு வருகிறார். ஊர் முக்கியஸ்தர் மகளுக்கும் (சம்யுக்தா) அந்த இளைஞனுக்கும் காதல் .
அந்த நேரத்தில் ஊருக்குள் அடுத்தடுத்து சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாயகன் அது பற்றி விசாரிக்கையில் வெளியூர் இளைஞனைக் காதலித்த ஒரு பெண் முதலில் தற்கொலை செய்து கொள்ள , அவளைக் கடைசியாக உயிருடனோ, பிணமாக முதலிலோ பார்த்த நபர் தற்கொலை செய்து கொள்ள,
அந்த நபரைப் பார்த்தவர் அடுத்து தற்கொலை செய்து கொள்ள.. இப்படியே ஒவ்வொருவராக தற்கொலை செய்து கொள்ள, ( SMILE ஆங்கிலப்படத்தின் சமாச்சாரம்) ஏன் எதற்கு எப்படி யாரால் அப்புறம் என்ன ஆச்சு என்பதே படம்.
மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார்கள் . அருமையான இயக்கம்
தயாரிப்புத் தரம் அபாரம்
சம்யுக்தா மிக உற்சாகமாக சிறப்பாக நடித்து இருக்கிறார். சாய் தரம் தேஜ் இயல்பு
சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு நிகழ்வுகளை நம்ப வைக்கிறது . ஒலி அமைப்பு மிரட்டுகிறது
அஜனீஷ் லோகநாத்தின் பின்னணி இசை அருமை என்றால் சொல்லாமலே பாடல் தேன். அந்தப் பாடல் காட்சி ஒரு நேரடித் தமிழ்ப் படத்தைப் பார்த்த உணர்வைத் தருகிறது
அந்த கிளைமாக்ஸ் டுவிஸ்ட் அட்டகாசம் என்றாலும் அதுதான் லாஜிக்குக்கு லாடம் கட்டிவிட்டது .

பத்து நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு சமஸ்கிருதப் பெயர் சொல்லி ஒரு சடங்கு செய்கிறார்கள். அது என்ன என்பது புரியவே புரியாது . தெலுங்கு ரசிகர்கள் விஷயம் புரியாவிட்டாலும் பயப்படுபவர்களாக இருக்கும் . ஆனால் நம்ம ஊரில் வாய்ப்பில்லை
அடுத்தடுத்து இப்படி விழும் அடியால் படம் அந்நியமாகி விடுகிறது . அந்த கிளைமாக்ஸ் டுவிஸ்ட் அட்டகாசம் என்றாலும் இதுக்கு ஏன்டா இவ்வளவு சுத்துனீங்க என்று, அதுதான் லாஜிக்குக்கு லாடம் கட்டிவிட்டது .