சிவம் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் சார்பில் விஷால் மற்றும் ஆதீஸ்வர் ஆகியோரோடு சேர்ந்து தயாரித்து , இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் நாயகனாக நடிக்க, அவரோடு சேர்ந்து எழுதி விக்னேஷ் நடராஜன் இயக்க , zee 5 தளத்தில் காணக் கிடைக்கும் புதிய வலைதளத் தொடர் வாரண்ட்.
எம் எஸ் சி படித்து விட்டு பிரைவேட் கம்பெனியில் வேலைக்கு சேர ஆசைப்பட்ட கோட்டைக் கருப்பசாமியை( பிரசாந்த் பாண்டிராஜ்), எப்படியாவது கவர்மெண்ட் வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று விரும்பும் அவரது அப்பா( பாலாஜி சக்திவேல்), அதற்காக எல்லா போட்டித் தேர்வுகளையும் எழுத வைக்க, எதிலும் தேராத கோட்டை கருப்பு, போலீஸ் கமிஷனரிடம் டிரைவராக உள்ள மாமா (காலி வெங்கட்)சிபாரிசில் போலீஸ் வேலையில் சேர்கிறார்
எந்த வேலையையும் கற்றுக் கொடுத்து வழிகாட்டாமல் நேரடியாக இறக்கி விட்டு , கோட்டைக் கருப்பு தடுமாறி அசிங்கப்பட்டு அலைக்கழிக்கப்படுவதை பார்த்து ரசிக்கிறது டிபார்ட்மென்ட். கிண்டல், கேலி, எரிச்சல், கோபம் , ஆத்திரம் எல்லாம் காட்டி எல்லாவகையிலும் கருப்புவை சக போலீஸ்காரர்கள் நொந்து போக வைக்கிறார்கள்.
ஒரு முறை, கைதி ஒருவன் தப்பிப்பதற்காக கருப்புவின் உயிர்நிலையை நசுக்கி விட, கோட்டை என்ற பெயரை எல்லோரும் கொட்டை என்றே அழைக்கிறார்கள். மேலும் அவமானம் , சித்திரவதை வேறு .
வாரண்ட் கைதிகளை டீல் செய்யும் விதத்தில் சக போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைப்படி கோட்டை தவறாக செயல்பட பிரச்னை கோர்ட்டில் பெரிதாகி, எஸ் பி வரை எல்லோரையும் கேள்வி கேட்கிறார் நீதிபதி .
எல்லோரும் கோட்டையை துவம்சம் செய்ய, போலீஸ் வேலைக்கே முழுக்கு போட கோட்டை முடிவு செய்யும் சமயம் நடக்கும் ஒரு சம்பவம் , போலீஸ் வேலையின் கம்பீரத்தை அவருக்கு உணர்த்துகிறது.
சகமாற்று சீனியர் அதிகாரிகளின் புறக்கணிப்பு, கிண்டல் கேலி, அவர்கள் போடும் தடை இவற்றை மீறி நல்ல போலீஸ்காரராக உயர, அவர் எடுக்கும் தீவிர முயற்சிகள், அதனால் ஏற்படும் பணி அழுத்தம் காரணமாக அவரது குடும்பம் மற்றும் காதல் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகள்…. எல்லாம் சேர்ந்து ஒரு நிலையில்,மாபெரும் சிக்கலில் அவரைக் கொண்டு போய் விட, நடந்தது என்ன என்பதே வாரண்ட்.
எத்தனையோ போலீஸ் கதைகள் பார்த்திருக்கிறோம். எத்தனையோ வெப் சீரிஸ் பார்த்திருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட துறை பற்றிய பிரம்மிக்க வைக்கும் டீடைலிங் உடன், இப்படி ஒரு சீரிஸ் இதுவரை தமிழில் வந்தது இல்லை.
போலீஸ் துறை, நீதிமன்றங்களோடு அதன் போராட்டம் என்று அப்படி ஒரு டீட்டெய்லிங் கொடுத்து வாய் பிளக்க வைக்கும்படி எழுதி இருக்கிறார்கள் விக்னேஷ் நடராஜனும் பிரசாந்த் பாண்டிராஜும் . பாராட்டுகள் வாழ்த்துகள்.
எட்டு எபிசோடுகள் சுமார் ஆறு மணி நேரம். பெரிதாக போரடிக்காமல் , களைப்பே இல்லாமல் பார்க்க முடிகிற அளவுக்கு விறுவிறுப்பு. அசத்தல்.
குற்றவாளிகளிடமே போலீஸ் கெஞ்ச வேண்டிய சூழல்கள் போன்ற இதுவரை அதிகம் திரையில் அறியப்படாத பக்கங்களை எல்லாம் உடைத்துப் பேசுகிறது வாரண்ட்.
ஓர் இளம் போலீஸ்காரனின் விசாரணை குறித்த சிரமங்கள் அலைச்சல்கள், சந்தர்ப்பம் பார்த்து செயல்படவேண்டிய விதம் என்று நுண்ணிய விஷயங்கள் அதிகம் இருப்பது சிறப்பு.
உரையாடல் பிரமாதம்! உதாரணம்… ” வேலை செய்யற போலீஸ்காரனுக்கு வேலை கொடு. வேலை செய்யாத போலீஸ்கரனுக்கு சம்பளத்தைக் கொடு ”
மிக இயல்பாக அறிமுகம் ஆகி மெல்ல மெல்ல மொத்த கதையையும் காட்சிகளையும் ஆக்கிரமித்து நாயகனாக மிக சிறப்பாக நடித்திருக்கிறார் பிரசாந்த் பாண்டிராஜ்.
ஆரம்பகட்ட தயக்கம் பயம் ,குழப்பம் சலிப்பு , விரக்தி, வெளிப்படுத்த முடியாத கோபம், உடைந்து உருகி ஓடி பிறகு தானாக இறுகி எழுவது, குணத்திலும் செயலிலும் போலீஸ்தனம் ஏறும் மாற்றம் என்று… குறையில்லாத பங்களிப்பு. மிக இயல்பாக காமெடியும் அவருக்கு வெற்றிகரமாக வருகிறது. அருமை . அவருக்குள் ஒரு பாக்கியராஜ் இருக்கிறார் . இனி அவருக்கு ஏறுமுகம்தான்.
இயக்குனரின் வித்தியாசமான அர்த்தமுள்ள ஷாட்களுக்கு பெரும்பலமாக இருக்கும் அஷோக்குமாரின் ஒளிப்பதிவு நம்மையும் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கதைக்களங்களில் ஓர் ஆளாக உலவ வைக்கிறது. சபாஷ் அசோக்.
சாம் சி எஸ் சின் பரபரப்பு கூட்டும் பாடல் மற்றும் பின்னணி இசை ராமரின் கட்டிங் நேர்த்தி என்று டெக்னிக்கல் டீம் மிக சிறப்பு.
போலீசுக்கு உதவும் விலைமாது கேரக்டரில் நேசிக்கும்படி நடித்திருக்கிறார் சாயா தேவி. நீந்தும் கண்கள் கொண்ட அந்த முகம் நுண்ணிய உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துகிறது.
அருள்தாஸ் உள்ளிட்ட மற்ற போலீஸ்காரர்கள், பெண் நீதிபதி என்று எல்லோரும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர் .
கடைசியில் வழக்கமான பாணியில் முடிக்காமல் சமுதாய அக்கறையோடு வேறொரு கோணத்தில்பொட்டில் அடிக்கிற மாதிரி முடித்த விதம் சிறப்பு. ஆனால் அதுதான் முடிவு என்றால் அதற்கு இப்படி திரைக்கதை ஆரம்பிக்கும் விதம் பொருத்தமானதாக இல்லை
பெண் பார்க்கும் காட்சியில் இயக்குனர் வைத்திருக்கும் சில ஷாட்கள் காட்சியின் முடிவை முன்பே யூகிக்கும் வண்ணம் இருக்கின்றன..
கடைசிக் காட்சிகளில் எடிட்டிங் ஆர்டரில் செய்யப்பட மாற்றங்களால் காஸ்டியூம் கண்டினியூட்டி , ஆக்ஷன் கண்டினியூட்டி போன்றவை மிஸ் ஆகின்றன
யதார்த்தம்தான் என்றாலும் கெட்ட வார்த்தைகளை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். அதுவும் ஒரு காட்சியில் மழை போல பெய்வது ஓவர்.
இப்படி ஒரு சில போதாமைகள் இருந்தாலும் ஒரு முரட்டு வெப் சீரிஸில் குறைகள் ரொம்ப கம்மி என்பதே பெரிய வெற்றி. அத்தி பூத்தது போல ஓர் அபூர்வ வெப் சீரிஸ் இது.
மொத்தத்தில் வாரண்ட் .. தவறாமல் எல்லோரும் பிடிவாரண்ட் போட்டு பார்க்கலாம்.
