வித் லவ் @ விமர்சனம்

ZION  FILMS மற்றும் MRP ENTERTAINMENT  சார்பில்  சவுந்தர்யா ரஜினிகாந்த், பஸிலியான் நசரேத் , மகேஷ்ராஜ் பஸிலியான்  தயாரிக்க, அபிஷன் ஜீவிந்த் , அனஸ்வரா ராஜன், காவ்யா அனில்,  சரவணன்,  தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார், நடிப்பில் மதன் என்ற அறிமுக இயக்குனர் எழுதி இயக்கி இருக்கும் படம். 

அம்மா இறந்து விட்ட நிலையில் அப்பாவிடம் ( தேனி முருகன்)  கோவித்துக் கொண்டு இருக்கும் இளைஞனுக்கு (  அபிஷன் ஜீவிந்த்),   காலாகாலத்தில் கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுகிறார் அக்கா (ஆர் ஜே ஆனந்தி) 
 
மேட்ரிமோனி (?) மூலம் ஒரு பெண்ணை பிடித்து,  அவளைச்  சந்திக்க தம்பியை அனுப்பி வைக்கிறார் அக்கா. அங்கே வரும் இளம்பெண் (அனஸ்வரா ராஜன்) இவனது பள்ளித் தோழி என்பது கொஞ்ச நேரத்தில் இருவருக்கும் ஞாபகம் வருகிறது. 
 
பள்ளியில் அவனுக்கு ஒரு பெண்ணோடு (காவ்யா அனில்) காதல் .  அவளுக்கும் இன்னொரு பையனோடு (சச்சின் நாச்சியப்பன்)  காதல். 
 
தங்கள் பழைய காதலைப் பற்றி இருவரும் பேச, ஒரு நிலையில் அவனது காதலியையும் அவளது காதலனையும் சந்திக்கலாம் என்று ஐடியா கொடுக்கிறாள் அவள். 
 
திருச்சியில் படித்த பள்ளிக்குப் போய் தகவல் திரட்டுகிறார்கள்.  தொடர்பில் உள்ள நண்பர்கள் மூலமும் முயல்கிறார்கள். 
 
அவன் காதலி இப்போது எப்படி எங்கே என்ன நிலையில் இருக்கிறாள்?.அவள் காதலன் இப்போது எங்கே எப்படி எந்த நிலையில் இருக்கிறான்?. பார்க்க முடிந்ததா இல்லையா? யாருக்கு திருமணம் ஆனது? யாருக்கு ஆகவில்லை? ஏன்? ஏன்? அந்த விஷயங்கள் இவர்களது நிகழ் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்கள்  தாக்கங்கள் என்ன? விளைவு என்ன? முடிவு என்ன? சுகமா? சோகமா? சுமையா? சிறகா? என்பதே வித் லவ். 
 
ஜஸ்ட் லைக் தட் ஆரம்பிக்கிறது  படம்,. அக்கா சொன்ன பெண்ணைப் பார்க்கப் போகும் இடத்தில் ஆரம்பத்தில் வரும்  டுவிஸ்ட் சுவாரசியம். அதன் வழியே கதை போகப் போகும் பாதையை இயக்குனர் கோடிட்டுக் காட்டுவது அழகு. 
 
சில இடங்களில் வசன கிம்மிக்ஸ் அட போட வைத்தது. அப்புறம் கட்டையை போட ஆரம்பித்தார்கள். 
 
அவரவரின் பள்ளிக் காதல் இரண்டு பேர்  மனதிலும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.   ஒருவரின் காதல் நிகழ்வு மற்றும் பிரிவில்  இன்னொருவரின் பங்கும் இருக்கிறது. பள்ளிக்காதல் பிளாஷ்பேக் காட்சிகளில்  இருவரும் சேர்ந்து வரும் காட்சிகள் நிறைய உண்டு. ஒருவர் காதலை ஒருவர் பாதித்த  கதையும் இருக்கு .
 
அப்படி இருக்க, சந்தித்த உடன் உங்களை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு என்று அவளும் அப்படியா ஞாபகம் இல்லையே  என்று அவனும் சொல்லும் இடத்தில் லாஜிக் லகலக 
 
கல்யாணத்துக்குப் பார்க்க வந்த பெண்ணிடம் ஒருவன் தன் பழைய காதலை சொல்வது என்பதில் ஒரு  தனிப்பட்ட குணாதிசயத்  தன்மையோடு  இருக்க வேண்டும். ஆனால் யாரோ ஒரு சக பயணியிடம் சொல்வது போல அவன் சொல்வது பொருத்தம் இல்லை. 
 
இடை வேளை சமயத்தில் கூட எதற்கு இந்த  வேண்டாத வேலை என்றே தோன்றியது . 
 
ஆனால் இரண்டாவது பாதியில் வட்டியும் முதலுமாக படத்தை கட்டித் தூக்கி இருக்கிறார்கள் இயக்குனர் உள்ளிட்ட தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவரும். 
 
ஆசிரியர் (சரவணன்) சம்மந்தப்பட்ட காட்சிகளில்  ஒரு வகையில்  FILLERதான்   என்றாலும் சொன்ன விதம் அருமை .
 
பெண்ணின் தனித்தன்மையை  பெண்ணுரிமை உணர்வை இயல்பாக மேட்டிமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் மதன் அர்த்தமுள்ள எழுத்து .
 
காமெடியும் நாலுக்கு ரெண்டு தேறுகிறது. முதல் பாதியில் நாயகனின் காதலியாக  வந்து போன  கேரக்டர்,  இரண்டாம் பகுதியில் எடுக்கும் விஸ்வரூபம் அபாரமானது. உள்ளம் கேட்குமே படத்தில் கேரக்டர் லைலா கேரக்டர் வருமே. அப்படி ஒரு உயரம் இந்தப் படத்திலும் . பிரமாதம். 
 
அந்தக் காதலி வந்து போன பிறகு ஓர் உண்மைக் காதலனுக்கு ஏற்படும் உணர்வை அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் மதன் . அவருக்கு கிராஃப்ட் தெரிகிறது . வாழ்த்துகள் தம்பி.
 
அதே போல பெண்ணின் தனித்தன்மையை  பெண்ணுரிமை உணர்வை இயல்பாக மேட்டிமையாக சொல்லி இருக்கிறார்  மதன் அர்த்தமுள்ள எழுத்து .
 
கிட்டத்தட்ட யூகிக்க முடிகிற கிளைமாக்ஸ் என்றாலும் அதை எழுதி இருக்கும் விதம் அபாரம் . 
 
தெரிந்த விஷயமே வந்தாலும் அது மனசுக்குப் பிடிக்கிற மாதிரி இருப்பதுதான் நல்ல ஃ பிலிம் மேக்கிங்..  விளையாட்டு என்றால் கண்ணாமூச்சி மட்டும்தானா?
 
கமர்ஷியலாகவும் படம் சிறப்பாக முடிகிறது . 
 
அனஸ்வரா ராஜன் நடிப்பில் அசத்தியிருக்கிறார்,   சின்னச் சின்ன,  ஆழமான முகபாவனைகள்…..  உணர்வு மாற்றங்களை நிதானமாக முகத்தில் பிரதிபலிக்கும் விதம்.. யாவும்  அருமை. ( அடுத்த படத்திலாவது தமிழ் பேசவும் பிளீஜ்) 
 
கேமரா வழியே பார்க்கும்போது தேவதை போல இருக்கிறார் காவ்யா அனில். அந்த உடல் மொழிகள் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நடிப்பும் அருமை. 
 
ஹீரோவாக பாஸ் ஆகிறார் அபிஷன்  ஜீவிந்த் . காதலியைப் பார்த்து விட்டு வந்த பிறகு கனம் கூட்டும் இடத்தில் நடிப்பும் அருமை. 
 
சரவணன் குறைவான காட்சிகள் என்றாலும் இயல்பான பங்களிப்பு. 
 
தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர் .
 
வெல்கம் ஆர் ஜே ஆனந்தி.  மிமிக்ரி பண்ற கேரக்டர் கிடைத்தால் விடாதீங்க. ( பிக்பாசில் சூப்பராக பண்ணீங்க)
 
ஷ்ரேயஸ் கிருஷ்ணாவுக்கு  அனஸ்வரா ராஜன் மேல் ஏதோ கோபம். மற்றபடி    சிறப்பான ஒளிப்பதிவு. 
 
சான் ரோல்டன் இந்தப் படத்தில்  பின்னணி இசையில் முன்னணியில் இருக்கிறார் 
 
சுரேஷ்குமாரின் படத்தொகுப்பு இரண்டாம் பாதிக்கு பெரும்பலம். 
 
படத்தின் முதல் பாதியில் மட்டும் கவனம் செலுத்தி இருந்தால் இந்தப் படம் இப்போது ஓடப்  போவதை விட இன்னும் இரண்டு  மடங்கு நன்றாக ஓடி  இருக்கும் .  
 
இந்த கிளைமாக்ஸை அப்படியே உல்டாவாக முடித்து இருந்தால் இது இன்னும் பெரிய படம்  
 
கதைத் தேர்வில் அசத்துகிறார்கள் பசிலியான்கள்  . (கொஞ்சம் ஸ்கிரிப்டிலும் கவனம் செலுத்தவும்.)
 
சபாஷ் சவுந்தர்யா ரஜினிகாந்த். நல்ல படத்தை என்ஜினாக இருந்து இழுத்து இருக்கிறீர்கள்.  (குப்பையில் கிடந்த 45 பவுன் நகையை நேர்மையாக திருப்பிக் கொடுத்த அந்த துப்புரவுத் தொழிலாளி அக்காவுக்கு தங்கச்  செயின் பரிசளித்து வாழ்த்திய தங்கமகனுக்கு வணக்கம்) 
 
வித் லவ் .. வித் டிக்கட் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *