வைக்கிங் மீடியா ஆண்ட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் ரைனா ஜோஷி தயாரிக்க, சச்சின், ஈஷா குப்தா, பிரபு , கிஷோர், தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில்,
படகோட்டி , உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய டி . பிரகாஷ் ராவின் பேரனும் டி எல் வி பிரசாத்தின் மகனுமான டி.சத்யா ,
எழுதி இயக்கும் படம் யார் இவன். எப்படி இருக்கிறான் இவன் . பார்க்கலாம் . 
சென்னை கபடி அணியின் கேப்டனான சத்யாவுக்கும் ( சச்சின்) பிரபல பணக்காரன் ராஜசேகரின் (பிரபு ) மகளுக்கும் (ஈஷா குப்தா) இடையிலான காதல் ,
கல்யாணத்தில் முடிந்து , தேன் நிலவுக்காக கோவாவுக்குப் போன அன்றே அவளை கொலை செய்ததாக கைதாகிறான் சத்யா.
ரிமாண்டில் கோவாவில் உள்ள கடுமையான சிறையில் அடைக்கப்படுகிறான் . அங்கு உள்ள ஜெயிலர் சத்யாவை கொன்று விடக் காத்திருக்கிறான் . 
காரணம் அவனது தம்பியான கோவா கபடி அணியின் கேப்டனோடு சத்யா விளையாடிய கபடி ஆட்டத்தில் தம்பி இறந்து போகிறான் .
தம்பிக்கு இருந்த ஆஸ்துமா நோய் மரணத்துக்குக் காரணம் என்றாலும் , அவன் மரணத்துக்கு சச்சினே காரணம் என்பது ஜெயிலரின் வன்மம்
வழக்கை விசாரணை செய்ய வரும் அசிஸ்டன்ட் கமிஷனரிடம் (கிஷோர்) ராஜ சேகரும் , கொலை செய்யப்பட பெண்ணின் தோழியும் (தன்யா பாலகிருஷ்ணன் ),

சத்யாதான் கொலைகாரன் என்று உறுதியாகக் கூறுகின்றனர் .
இந்த நிலையில் ஜெயிலில் தனக்குப் பிடிக்காதவர்களை கபடி ஆட வைத்து அடித்துக் கொள்ளும் பாணியில் சத்யாவை கொல்ல ஜெயிலர் முயல ,
அவனை அசிஸ்டன்ட் கமிஷனர் காப்பாற்ற , ஒரு நிலையில் அவரையே கொல்லப் பார்க்கிறான் சத்யா .
அவன் மன நிலை பாதிக்கப்பட்டவன் என்கிறார் மனோதத்துவ நிபுணர் (பிரதாப் போத்தன்) . 
இடையில் சத்யா , தன் மனைவி போன்ற உருவம் கொண்ட கேத்தரின் என்ற பெண்ணை காதலித்ததாகவும் கமிஷனருக்கு தகவல் கிடைக்கிறது .
அசிஸ்டன்ட் கமிஷனரின் தீவிர விசாரணையில் ”நான் கொலைகாரன் இல்லை . நான் ஒரு அம்புதான் . ஆனால் கொன்றவர் யார் என்று சொல்லமாட்டேன்” என்கிறான் சத்யா .
இந்நிலையில் மீண்டும் சத்யாவை கொலைக் கபடி ஆட வைக்கும் ஜெயிலர், சத்யாவுக்கு விஷ ஊசியைப் போட்டு விட , 
சத்யாவை கமிஷனர் மருத்துவமனைக்குக் கொண்டு போக , அவன் இறந்து விட்டதாக சொல்கிறார் டாக்டர் .
சத்யாவின் மனைவியைக் கொன்றது யார் ? கேத்தரின் எங்கே ? சத்யாவின் இறப்புக்குப் பின்னால் உள்ள மர்மம் என்ன என்பதே இந்த யார் இவன் ?
தொழில் நுட்ப நேர்த்தியோடு அழகியல் கலந்து படமாக்கலில் பிரம்மிக்க வைக்கிறார் இயக்குனர் டி.சத்யா . ஃபிரேமிங் , ஷாட்ஸ் எல்லாம் ஆசம் அட்டகாசம் . 
இரவு நேரக் காட்சிகளை மயக்கும் ஈர வண்ண ஓவியம் போலவும் பகல் நேரக் காட்சிகளை அவ்வளவு குளிர்ச்சியாகவும் படமாக்கி,
அசத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிநேந்திர மேனன் . குறிப்பாக வெயில் நேரக் காட்சிகளுக்கு அவர் கொண்டு வந்திருக்கும் இளநீர் வண்ண டோன் ஆகா … அபாரம் !
எஸ் எஸ் தமனின் இசையில் பாடல்கள் கேட்க இனிமை . பின்னணி இசை, காட்சிகளுக்கு பொருத்தமாக அமைந்து இருக்கிறது . 
பிரவின் புடியின் எடிட்டிங்கில் முதல் பாதிக் காட்சிகள் சும்மா இறக்கை கட்டிப் பறக்கின்றன .
கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகள் அசத்தலாக இருக்கின்றன . இப்படி தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு அருமை .
நாயகன் சச்சின் கேரக்டருக்குப் பொருத்தமாக நடித்துள்ளார் . இன்னும் லைட் கூச்சம் போகவில்லை என்பது ,
இடுங்கிய கண்களில் தெரிகிறது. முகபாவனைகளில் இன்னும் முன்னேற்றம் வேண்டும். 
ஈஷா குப்தா நவீன அழகில் ஜொலிக்கிறார். தோழியாக வரும் தன்யாவும் நன்றாக நடித்துள்ளார் .
பிரபு , கமிஷனராக நடித்துள்ள கிஷோர், ஜெயிலில் சத்யாவுக்கு ஆறுதலாக வரும் முதியவர் கதாபாத்திரத்தில் டெல்கி கணேஷ் ,
மற்றும் ஜெயிலராகவும் , கமிஷனரின் உதவியாளராக வரும் தெலுங்கு நடிகர்களும் ஒகே . சதீஷ்தான் காமெடி என்ற பெயரில் அறுத்துத் தள்ளுகிறார் . 
ஒரு நல்ல திரைக்கதையில் எதிர்பாராத காட்சிகள் திருப்பங்கள் இருக்க வேண்டும் . இருக்கிறது .
குற்றவாளி என்று திடீர் என கடைசியில் புதிதாக யாரையும் காட்டி பொங்கு அடிக்காமல் ஆரம்பத்தில் இருந்தே ரசிகனுக்கு அறிமுகமான ஒருவரை ,
குற்றவாளி என்று காட்டுவதுதான் கெத்து அப்படியே சொல்கிறார்கள் .இப்படி பல சிறப்புகள் !

ஆனால் இவ்வளவு சிரத்தை எடுத்தவர்கள் அடிப்படையான கதையிலும் சிரத்தை எடுத்திருக்க வேண்டாமா ?
காதல் ,கல்யாணம் மனைவி கொலை, கணவன் கைது , கோபக்கார ஜெயிலர் , சொத்துப் பிரச்னை என்று அரைத்த மாவையே அரைத்து இருப்பதுதான் பலவீனம் .
யார் இவன் .. தொழில் நுட்ப வல்லுனன் !
