ஏ கே எஸ் என்டர்டைன்மென்ட் அண்ட் மீடியா சார்பில் அஷ்வனிகுமார் சகாதேவ் தயாரிக்க, அவர் மகன் ஆகாஷ் குமார் நாயகனாகவும்,
மிஸ்தி சக்ரவர்த்தி என்ற மும்பைப் பெண் நாயகியாகவும் நடிக்க, நெப்போலியன், ஜெயப்பிரதா, நாசர்,
பொன்வண்ணன் , எம் எஸ் பாஸ்கர், சாயாஜி ஷிண்டே , இவர்களுடன் பல பிரபல தெலுங்கு நடிகர்கள் உடன் நடிக்க ,
இயக்குனர் ஷங்கரிடம் அந்நியன் உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக இருந்த நரசிம்மா என்பவர் தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் இயக்கி இருக்கும் படம் யாகம்
நாயகி — இயக்குனர் — நாயகன்
படத்தின் டீசர் அல்லது டிரைலர் வெளியீட்டு விழாவில் (ஏனென்றால் முதலில் டீசர் என்று சொல்லி போட்டார்கள் .
கடைசியில் அதையே டிரைலர் என்று சொல்லிப் போட்டார்கள் . என்ன கணக்கோ தெரியல ) அதை திரையிட்டார்கள்
சிறப்பான ஒளிப்பதிவு (ரமண சல்வா ) அற்புதமான பின்னணி இசை (கோட்டி) , பிரம்மாண்டமான காட்சிகள் ,
ஈர்க்கும் கணிப்பொறி வரைகலை வேலைகள் இவற்றோடு கவரும் வகையில் இருந்தது .. அந்த டீசர் அல்லது டிரைலர் !
நரசிம்மா இயக்குனர் பாலசேகரனிடமும் பணியாற்றியவர் என்பதால் அவர் வந்து நரசிம்மாவை பாராட்டினார் .
நரசிம்மாவுடன் இயக்குனர் ஷங்கர் யூனிட்டில் பணியாற்றிய இயக்குனர் அறிவழகன், ஹோசிமின் , ஆடம்ஸ் ஆகியோரும் பாராட்டினர் .
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஹோசிமின்,
” ஏ எம் ரத்னம் சார் தயாரிப்பில் நான் தெலுங்கில் இயக்கிய ஒரு படத்துக்கு பணியாற்ற நரசிம்மா வந்தார் .
அதில் நான் எடுத்த ஒரு சைக்கிள் ரேஸ்காட்சியில் அவர் பங்களிப்பை பார்த்து வியந்து போனேன் .
ஒரு முறை ஹைதராபாத் போன ஷங்கர் சார் , அங்கிருந்து எனக்கு போன் செய்து , ‘ இங்கு இருக்கும் சிறப்பான அசிஸ்டன்ட் டைரக்டர் யாரையாவது,
உடனே என்னை வந்து பார்க்கச் சொல் ; என்றார் . நான் நரசிம்மாவை போகச் சொன்னேன் . அடுத்த நாள் எனக்கு போன் செய்த ஷங்கர் சார்
‘ ரொம்ப நல்ல ஆளைக் கொடுத்து இருக்க ” என்று பாராட்டினார் . அப்படியே ஷங்கர் சாரிடம் பணியாற்ற ஆரம்பித்த நரசிம்மா,
இப்போது இயக்கி இருக்கும் இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை ” என்றார்.
அறிவழகன் தன் பேச்சில்,
” நரசிம்மா நல்ல திறமை சாலி . பழகுவதற்கும் இனியவர் . அது அனைவரும் அறிந்த விஷயம்.
அவர் எடுக்கும் படம் கண்டிப்பாக வெற்றிப் படமாகத்தான் இருக்கும் . இப்போது நாம் பார்த்த விஷுவல் அதை உறுதி செய்கிறது ” என்றார் .
ஒலி வடிவமைப்பாளர் லக்ஷ்மி நாராயணன்,
“சினிமாவில் ஒலி வடிவமைப்பின் அவசியம் இன்னும் பலருக்கு தெரியாது . ஆனால் நரசிம்மா நேர் மாறு .
என்ன வேண்டும் என்பதை தெளிவாக சொல்லுவார் . சின்னச் சின்ன விவரணைகள் வரை சிறப்பாக விளக்குவார் . அதனால் சிறப்பாக பணியாற்ற முடிந்தது ” என்றார்
இசையமைப்பாளர் கோட்டி பேசும்போது,
” தமிழில் சரித்திரம் படைத்த சந்திரலேகா, மற்றும் மிஸ்ஸியம்மா படங்களுக்கு இசை அமைத்த,
ராஜேஸ்வரராவின் மகன் நான் . ராஜ் என்ற நண்பரோடு சேர்ந்து ராஜ்கோட்டி என்ற பெயரில் நிறைய தெலுங்குப் படங்களுக்கு இசை அமைத்தேன் .
பின்னர் தனியாக வந்தும் நிறைய படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டு இருக்கிறேன் .
தமிழ் ரசிகர்களின் இசை ரசனை அபாரமானது .
அருந்ததி படத்துக்கு நான் கொடுத்த இசைக்கு தெலுங்கு ரசிகர்களை விட தமிழ் ரசிகர்களே என்னை கொண்டாடினார்கள் .
நரசிம்மா என்னை சந்தித்தபோது ‘அருந்ததி படத்துக்கு கொடுத்தது போல இசை கொடுங்கள்’ என்றார்.
‘அருந்ததி போல படம் எடுங்கள் . நான் இசை தருகிறேன்’ என்றேன் . அவரும் எடுத்துக் கொண்டு வந்தார் . நானும் கொடுத்து இருக்கிறேன் ” என்றார் .
பொன்வண்ணன் தன் பேச்சில்,
” இந்தப் படம் நல்ல சக்திக்கும் தீயசக்திக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை, அதில் தெய்வ சக்தி ஜெயிப்பதை சொல்லும் படம் .
நான் இதில் சாமியாரா வர்றேன். அடிப்படையில் நான் ஒரு டெக்னீஷியன் . இந்தப் படத்தில் நடிக்கும்போது,
டெக்னாலஜி எந்த அளவுக்கு வளர்ந்து இருக்குன்னு எனக்கு தெரிஞ்சது . அதாவது நான் காசு வாங்கி கத்துக்கிட்டேன் .
இன்னொரு எனக்கு தெரியாத மொழியில் முதன் முதலா , பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட் மத்தியில்,
சம்ஸ்கிருத சுலோகம் எல்லாம் சொல்லி நடிச்சதன் மூலமா தெலுங்கு மொழியில் நடிக்கவும் ஆரம்பிசுட்டேன் . ” என்றார் .
நாசர் பேசும்போது,
” பொன்வண்ணன் சிறப்பாக நடித்தார் . அவருக்கு இனி தெலுங்கு சினிமா உலகின் கதவுகளும் திறக்கும் .
ஒரு பக்கம் இது நல்ல சக்தி கெட்ட சக்திக்கு இடையேயான படம் என்று சொல்லப்பட்டாலும் நான் அதை அப்படி பார்க்கல .
ஒரு அம்மா மகனுக்கு இடையேயான பாசத்தை ஆழமாக சொல்லும் படம் இது . . என்னை இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது,
பொன்வண்ணன் நடித்த கேரக்டருக்குத்தான் அழைப்பார்கள் என்று நினைத்தேன் . ஆனால் இயக்குனர் ஒரு காமெடியான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார் .
ரசிகர்கள் பார்த்து காமெடி என்று அதை உணர்ந்து ரசித்தால் நான் காமெடி நடிகனாகவும் ஆகி விடுவேன்” என்றார் .
ஜெயப்பிரதா தன் பேச்சில்,
“தமிழ்ப் படங்களில் நடிப்பது எப்போதுமே சந்தோஷமான விஷயம் . எனக்கு தமிழ்ப் படங்களில் நடிக்க ரொம்ப பிடிக்கும் .
இந்தப் படம் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டதால் நான் ஆர்வமாக நடித்தேன் ” என்றார் .
நெப்போலியன் பேசும்போது,
” இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடிக்க நான் எவ்வளவோ ஆசைப்பட்டேன் .
அவரிடம் கேட்கும்போது எல்லாம் ‘கூப்பிடறேன் .. கூப்பிடறேன்…’ என்று சிரித்தபடி சொல்லிக்கொண்டே போய் விடுவார் .
நரசிம்மா அவரது அசோசியேட் என்பதால் நடிக்க சந்தோஷாமாக ஒத்துக் கொண்டேன் .
அப்புறம் நான் ஜெயப்பிரதாவின் பெரிய ரசிகன் . ஆனால் அவரை என்னால் சக எம்பியாக பாராளுமன்றத்தில் சந்திக்கதான் முடிந்தது .
பாராளுமன்றத்தில் ஜெயப் பிரதாவும் ஹேமமாலினியும் வரும்போது எல்லோரும் வாயைப் பிளந்து கொண்டு பார்ப்பார்கள் .
இந்தப் படத்தில் அவரது ஜோடியாக நடிக்க வேண்டும் என்றதும் மறு பேச்சுப் பேசாமல் ஒத்துக் கொண்டேன் .
படத்தை மிக சிறப்பாக எடுத்தார் நரசிம்மா .
நான அமெரிக்காவில் இருந்து வந்து நடித்துக் கொடுத்ததற்காக படப்பிடிப்பின் கடைசி நாளில் எனக்கு மாலை அணிவித்து பபாராட்டியபோது நெகிழ்ந்து போனேன் ” என்றார் .
நிறைவுரை ஆற்றிய இயக்குனர் நரசிம்மா,
” எனக்கு இது முதல் படம் . எனினும் இவ்வளவு பெரிய நடிக நடிகையர்கள் எல்லாம், எனக்கு நடித்துக் கொடுத்ததும்,
ஒத்துழைப்பு கொடுத்ததும் மறக்க முடியாத ஒன்று . கேமரா மேன் ரமண சல்வா இல்லாமல் இந்தப் படத்தை யோசிக்க முடியாது . அவ்வளவு பலமாக எனக்கு இருந்தார் .
லக்ஷ்மி நாராயணனின் ஒலி வடிவமைப்பு இந்தப் படத்தின் பெரும் சிறப்புகளில் ஒன்று .
நான் இசைக்கு கோட்டி சாரிடம் போக முக்கியக் காரணம் அவரது அட்டகாசமான பின்னணி இசைக்காகத்தான் .
ஆனால் அவர் அதோடு மிக அட்டகாசமான பாடல் இசையும் கொடுத்தார் .
புதுமுகங்கள் என்றாலும் ஆகாஷ் குமார் – மிஸ்தி சக்ரவர்த்தி இருவரும் மிக சிறப்பாக நடித்தார்கள்.
படத்தில் 64 நிமிடங்களுக்கு சி ஜி வொர்க் இருக்கிறது. எல்லாமே கதையோடு ஒன்றி வருபவை .அ க்டோபர் மாதம் படம் திரைக்கு வருகிறது ” என்றார் .