ஏன் என்னை ஏதோ செய்தாய்? @ விமர்சனம்

அந்தோணி அட்லியர்ஸ் நிறுவனம் சார்பில் அந்தோணி எழுதி, படத்தொகுப்பு  செய்து இயக்கி கதாநாயகனாக நடிக்க  மதுமிதா தாஸ்,ரெஜின் ரோஸ் , நவ்யா சுஜி , ஜீவா ரவி உடன் நடிப்பில் வந்திருக்கும் படம் . 

அம்மா இறந்த நிலையில் அப்பா (ஜீவா ரவி)  பெரும் குடிகாரராகி  மகனைக் கண்டுகொள்ளாமல் போக, தனித்து விடப்பட்டு படித்து ஒரு வேலைக்குப் போய்க்கொண்டிருக்கும் இளைஞனுக்கு ( அந்தோணி),  இரண்டு நண்பர்கள். ஒரு நண்பனுக்கு(ரெஜின் ரோஸ்) கல்யாணம் ஆகி விட்டது. இன்னொரு நண்பனுக்கு ஒரு காதலி ( நவ்யா சுஜி).
 
தான் விரும்பியபடி சிகரெட், மது, மற்றும் விலை மாதுக்களை வீட்டுக்கே வர வைத்து அனுபவிக்கும் பழக்கம் உள்ள அவன் ஒரு முறை மது என்ற ஒரு விலைமாதுவை (மதுமிதா தாஸ்) வர வைக்கிறான். 
 
படுக்கையில்   ‘எல்லாம்’ சரி.. ஆனால் உதட்டு முத்தம் மட்டும் முடியாது . உணர்வால் கலந்த நபருக்கு மட்டுமே அதைக் கொடுக்க முடியும் ” என்கிறாள் மது. ஏற்கிறான் அவன். 
 
அவளை அவனுக்கு பிடிக்கிறது. அடிக்கடி சந்திக்கிறார்கள். அவர்களுக்குள் ஒரு நெருக்கம் உருவாகிறது  . வங்காளப்பெண்ணான மது  , தன்னைக் காதலித்து மணந்தவன் ”பெரிய ட்ரக் அடிக்ட். மகள் பிறந்த நிலையில் அவன் விட்டு விட்டுப் போய்விட்டான். மகள் ஒருத்தி இருக்கிறாள். அவன் ஊட்டி கான்வென்ட்டில் படிக்கிறாள்” என்று சொல்கிறாள்  அந்த மகளை சந்தித்து ஒரு நட்பான தகப்பன் உணர்வை கொடுக்கிறான்.
 
மது உதட்டு முத்தம் கொடுக்கும் அளவுக்கு நெருங்குகிறாள் 
 
ஒரு நிலையில் மதுவை திருமணம் செய்து கொள்ள விரும்பி நண்பர்களிடம் சொல்ல, தங்கள் நண்பன் ஒரு விலைமாதுவை திருமணம் செய்து கொள்வதை அவர்கள் முதலில் விரும்பவில்லை. பின்னர் ஏற்கிறார்கள் 
 
நண்பர்களின் ஜோடிகளிடம் மதுவை  அறிமுகப்படுத்துகிறான். ஆனால் அவர்களுக்கு விஷயம் சொல்லப்படவில்லை. 
 
நண்பனின் காதலியை இவனுக்கு பிடிக்காது. எனவே மொழி தெரியாத மதுவிடம் கெட்ட வார்த்தை சொல்லிக் கொடுத்து அந்த நண்பனின் காதலியை அவமானப்படுத்துகிறான். 
 
நண்பன் கோபப்பட்டு, ” ஒரு விலை மாதுவை விட என் ஆளு மோசமில்லை” என்கிறான். சண்டை வருகிறது. இது தெரியாத மது , பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கச் சொல்கிறாள். இவன் மறுக்க, சண்டை வர, இவனும் மதுவை விலைமாது என்று சொல்லி விடுகிறான்.
 
மனம் உடைந்து மது  பிரிய, போராடி மீண்டும் ஒன்று சேர்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தால்,  எல்லாமும் மாறுகிறது. நடந்தது என்ன என்பதே படம்.  
 
Richard Gere,  Julia Roberts நடிப்பில் Garry Marshall இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வந்த Pretty Woman படம் பல மொழிகளில் பல முறை அடித்துத் துவைக்கப்பட்டுள்ளது . அதை தான் பங்குக்கு தானும் ஒரு முறை துவைத்து இருக்கிறார் அமெரிக்காவில் தொழில் செய்யும் அந்தோணி. 
 
மாபெரும் ஸ்டார் ஹோட்டல்களில் தங்கி எலைட் விலை மாதுக்களை அனுபவிக்கும் ஒரு பெரும்பணக்காரன், அந்த விலைமாதுகளின் போலி கவுரவ செயல்களால் சலிப்படைந்து,  ஒரு தெருவோர விலை மாதுவை புக் செய்து ஸ்டார் ஹோட்டல்களுக்கு கொண்டு வருவான். 
 
அவளது லோக்கல் நடத்தைகளால் அங்கு நடக்கும் அதிரடி சம்பவங்கள்,  அவளது நேர்மை, காமத்தில் இருந்து காதல், அதில் ஒரு பிரிவு ..அப்புறம் நடந்தது என்ன என்பதே  Pretty Woman . அதை எடுத்துக் கொண்டு முன்னும் பின்னும் இந்திய குடும்ப செண்டிமெண்ட் என்னும் ‘மானே தேனே பொன்மானே’க்களை போட்டு படத்தை எடுத்து இருக்கிறார் அந்தோணி. அந்த உதட்டு முத்த விவகாரம் அப்படியே படத்தில் இருக்கு 
 
எனினும்  அந்தோணி ,  தாந்தோணித்தனமாக இந்தப் படத்தை எடுக்கவில்லை.  படம்  எடுக்கப்பட்ட விதம் ஹை கிளாஸ். 
 
லைவ் ரெக்கார்டிங், மெதுவாகப் பேசும் குரல்கள், அளவான பின்னணி இசை,, நிறுத்தி நிதானமாய் நகரும் காட்சிகள்,  காட்சிகளை சொல்லும் விதம், எல்லாம் அருமை 
 
அடுத்து இதுதான் வரும் என்று சினிமாவில் நம்பப்ப்படும்   டெம்ப்ளேட்களை  எல்லாம் உடைத்து,  வேறு பாதையில் நகரும் காட்சிகள் அட போட வைக்கின்றன. சபாஷ். 
 
அதுவும் முதல்பாதி  அபாரம் . நண்பர்களின் கதாபாத்திரங்கள் அவர்களை எழுதி இருக்கும் விதம் மெச்சூரிட்டி.நடித்தவர்களும் அபாரம் .அதிலும் ரெஜின் ரோஸின் மனைவியாக  நடித்தவர் சேலை கட்டிய செர்ரி பழம் போல இருந்தார்.. ஆனால் அந்த இயற்கை அழகியை பாதிப் படத்திலேயே ஊருக்கு அனுப்பி வைத்ததாக சொல்லி கண்ணுக்கு காட்டாமல் விட்டது அநியாயம்.
 
                                                                                                   சேலை கட்டிய செர்ரிப் பழம் !

வங்காளப் பெண்ணாக  நடித்திருக்கும் மதுமிதா தாஸ் அதே வங்காள மொழி, ஆங்கிலம் , கொஞ்ச்ச்சம்… கொஞ்ச்ச்சம்.. தமிழ் பேசி நடித்துள்ளார்.

எழுத்து படத் தொகுப்பு இயக்கம், தயாரிப்பு பல வேலைகளை சுமக்கும் டென்சன் காரணமாக கொஞ்சம் ஓவர் ஆக்டிங் தெரிந்தாலும் அந்தோணியும் நடிப்பில் ஓகே தான்.
 
ஒலி  வடிவமைப்பு சிறப்பு . சில  காட்சிகளில் என்ன பேசுகிறார்கள் என்பது தெளிவாகப் புரியாவிட்டாலும் உணர்வாக அது புரியும்படி அமைத்து இருப்பது சிறப்பு. 
 
ஜெய்கர் ஹரிநாத், அசோக் ஸ்ரீதரன் இசையில்  பாடல் வரிகள் தெளிவாகப் புரிவதோடு, ஜாய் ரேடாவின்  பின்னணி இசையும் ஓகே . பியேட்ரோ வில்லானியின் ஒளிப்பதிவும் ரம்மியம். 
 
நாயகனாக சித்தரிக்கப்படும் நபர்களை விட ஒரு விலைமாது எவ்வளவு நல்லவளாக,  கண்ணியமானவளாக , நேர்மையாக இருக்கிறாள் என்பதை வடிவமைத்த விதம் சிறப்பு. 
 
இருவரின் பிரிவுக்கு பிறகு  அதுவரை நடக்கும் பிரச்னைகளையே வைத்து திரைக்கதையை கொண்டு போயிருந்தால் இது வேற லெவல் படமாக இருந்திருக்கும் . அதை விடுத்து எஸ்கேப்பிசமாக  எதையோ சொல்லி சொதப்பி விட்டார்கள். கதையில் இருக்கும் தைரியம் கிளைமாக்சில் இல்லை. So sad. 
 
Pretty Woman படத்தை பார்த்த கையோடு எண்பதுகளில் வந்த இரண்டாம் தரத் தமிழ்ப் படங்களையும் பார்த்திருக்கிறார் அந்தோணி. அதன் விளைவுதான் இது.
 
மொத்தத்தில் ஏன் என்னை ஏதோ செய்தாய்….. என்ன செய்ததுன்னு தெரியல…. என்ன செய்யணும்னு அதுக்கும் தெரியல…..ஆனா ஏதோ செய்யுது 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *