4 இடியட்ஸ் @ விமர்சனம்

லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் ஸ்ரீவத்சன், கோகுல கிருஷ்ணன் ஆகியோர் தயாரிக்க, புகழ், கும்கி அஷ்வின், ரவி மரியா, வின்சென்ட் அசோகன், பிரக்யா நயன், திடியன், இந்திரன் நடிப்பில் டாவின்சி சரவணனோடு சேர்ந்து எழுதி,  சஜோ  சுந்தர் முருகேசன் இயக்கி இருக்கும் படம். 

தமிழ்நாட்டின் கொரோனா கால கட்டம்.
 
கடற்கரை ஓரம் தனியாக இருக்கும் ஒரு டாக்டரின் (வின்சென்ட் அசோகன்)  பங்களாவில் பெரும்பணம் இருப்பதாக  செய்தி வர, 
 
நான்கு திருடர்கள் (புகழ், கும்கி அஷ்வின்,திடியன், இந்திரன்) அதை கொள்ளையடிக்க போய்  பங்களாவின் வாட்ச் மேனிடம் ( ரவி மரியா) சிக்கிக் கொள்கிறார்கள். 
 
”  நான் சொல்லும் நாளில் என்னை  என்னை அடித்துப் போட்டுவிட்டு பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு போய் விடுங்கள்.பிரச்னை முடிந்ததும் பணத்தை எனக்கு பாதி உங்கள் நால்வருக்கும் பாதி என்று பிரித்துக் கொள்வோம் ” என்கிறான் வாட்ச் மேன் .   
 
சம்மதிக்கிறார்கள்
 
ஒரு நிலையில்,   மேற்படி  டாக்டர் ஆட்களைக் கடத்தி கொலை செய்து உடல் உறுப்புகளை அறுத்தெடுத்து  விற்பவர் என்பதும்,  வாட்ச் மேனும் அவர் திட்டத்தில் முக்கியமான ஆள் என்பதும்  அவர்களுக்குத் தெரிய வருகிறது. 
 
விஷயம் தெரியாதது போல  காட்டிக் கொண்டு அவர்கள் தப்பிக்க முயல, அவர்களுக்கு விஷயம் தெரிந்து விட்டது என்பது வாட்ச் மேனுக்கு தெரிய வர, 
 
அவர்களால் தப்பிக்க முடிந்ததா? கொரோனா காலகட்டம் என்பது அவர்களுக்கு உதவியதா ? உபத்திரவம் செய்ததா ? நடந்தது என்ன என்பதே படம். 
 
” சார்…  படத்துல மொத்தம் ஏழே கேரக்டர் சார். . முக்கால்வாசி படம் அஞ்சே கேரக்டர்கள்தான் .அதுல உங்க வீட்டுப் பிள்ளை கும்கி அஷ்வினும் ஒருத்தர்.. அப்புறம் ஒரு நாலு கேரக்டர்கள் மூணு மூணு மூணு மூணு  சீன்  வருவாங்க . மொத்த படத்துக்கும் ஒத்த லொக்கேஷன். அந்த பங்களாதான். சின்ன கல்லு பெத்த லாபம்” என்று சொல்லி தயாரிப்பாளர்களிடம் ஓகே வாங்கி இருக்க வேண்டும் , இயக்குனர் சஜோ சுந்தர். 
 
தப்பில்லை. 
 
ஆனால்  அந்தக்  கதையில் என்ன சொல்கிறோம். அதையும் எப்படி  சுவையாக சொல்கிறோம். அந்தக் கதை ட்ரெண்டிங் ஆன ஒன்றா என்பது முக்கியம் அல்லவா?
 
நன்றாகவே ஆரம்பிக்கிறது படம். 
 
யு கே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு 
 
பணம் குறித்த தகவல், படத்துக்கு பொம்பள வாசனை  வேண்டும் என்பதற்காக ஒரு கிளாமர் பாட்டு, அந்த பெண்ணையே (பிரக்யா நயன்) ஒரு கேரக்டர் ஆக்கி  வேலைக்காரி , ஊமை , அடுத்து போலீஸ், அவள் யாருடைய ஆள்  என்பது போன்ற கேள்விகல்….  பைத்தியம் பிடித்த நபரின் டுவிஸ்ட் என்று   பாராட்ட சில விஷயங்கள் இருக்கிறது. 
 
ஆனால் அவை எல்லாம் அழுத்தமான காட்சி அமைப்போ , சிறப்பாக  சொல்லும் முறையோ,  படமாக்கலோ இல்லாமல்  பாசிங் கிளவுட்ஸ் மாதிரி கடக்கின்றன..  
 
சுபாஷ் மணிரத்தினத்தின் இசை,   ஒலியாக மட்டுமே இருக்கிறது. உணர்வாக இல்லை. 
 
கொரோனா கால கட்டத்தில் நடக்கும் கதை என்பது,  இன்றைய காலகட்டத்தில்  ரசிகர்கள் கவனம் கவரும் அளவுக்கு சிறப்பான கதை சொல்லலோடு   இல்லை. 
 
சோஷியல் மீடியாவில் காமெடி என்பது யாரவது ஒரு பிரபலத்தைக் கலாய்க்கும்போது,   கலாய்க்கப்படுபவர் பிரபலமாக   இருப்பதே,   மக்கள்அந்தக் காமெடியை  ரசிக்க  போதுமானது.  அதுவும் அந்த எதிராளி பிடிக்காதவர் என்றால் கலாய்ப்பவர் என்ன சொன்னாலும் காமெடியாக தெரியும். 
 
ஆனால் சினிமாவில் காமெடி என்பது கற்பனைக் கதாபாத்திரங்களை வைத்துச் செய்யயப்படுவது. சோஷியல் மீடியாவில் செய்வது போல இங்கே சலுகை கிடைக்காது . நிஜமான காமெடி சூழல், எழுத்து அல்லது நடிப்பு இருந்தால்தான் ஒர்க் அவுட் ஆகும். 
 
சோஷியல் மீடியாவில் எல்லோரையும் கலாய்த்து ஏராளமா லைக்ஸ் வாங்கும் பரிதாபங்கள் கோபி அன்பே டயானா படத்தில் செய்த காமெடி ரொம்ப பரிதாபமாகப்  போனதற்கு காரணம் அதுதான். மா கா ப ஆனந்த் சினிமாவில்  சோபிக்காததற்கு காரணம் இதுதான். 
 
ஒரு டிவி  நிகழ்ச்சியில் ரோஜாவின் தமிழ் உச்சரிப்பை,  புகழ்  கலாய்க்கும் வீடியோ செம வைரல். ஆனால் புகழ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அப்படி ஒரு காமெடி கூட அமையவில்லை. 
 
காமெடி என்ற பெயரில்  எதையாவது பேசி வைப்போம். ”அட… பத்து கல்லு வீசினா ரெண்டு மங்கா விழாதா?”  என்ற ரீதியில்தான் இந்தப் படத்தின் காமெடிகள் இருக்கின்றன.
 
தவிர ஓவர் ஆக்டிங்கை காமெடி என்று நம்பிய அப்பாவி ஜனங்கள் எல்லாம் சட்ட மன்ற லைவ் பார்ப்பதில் பிசியாகி விட்டார்கள்.
 
உண்மையில் இந்தக் கதையை சீரியசாக சொல்லி ஆங்காங்கே காமெடிகளை சின்சியராக எழுதி ஷார்ப்பாக சொல்லி,  எடுத்திருந்தால் படம் நன்றாக வந்திருக்கும் .
 
காமெடி என்ற பெயரில் சூழலுக்கும்  கேரக்டர்களுக்கும் சம்மந்தம் இல்லாத உளறல்களை எல்லாம் பேச வைத்து இருக்கிறார்கள். ஒரு படத்தில் சந்தானம் சொல்வாரே , ”கோபப்படுற மாதிரி காமெடி பண்ணாதீங்க” என்று, அதைத்தான் இங்கும் சொல்லவேண்டி உள்ளது . 
 
அது மட்டுமின்றி படத்தின் இரண்டாம் பாகம் ரொம்பவே  சோதிக்கிறது. 
 
குறைந்த நடிகர், குறைந்த லொக்கேஷன் , குறைந்த செலவு என்பதை விட, கதை திரைக்கதை குறைவில்லாமல் இருக்கா என்பதுதான் தயாரிப்பாளர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று. 
 
4 இடியட்ஸ் .. படம் பார்ப்பவர்களையும்  இடியட்ஸ் என்று நினைக்கிறது. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *