யெல்லோ (YELLOW ) @ விமர்சனம்

கோவை ஃ பிலிம் ஃ பேக்டரி சார்பில் பிரசாந்த் ரங்கஸ்வாமி தயாரிக்க, பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன்,சாய் பிரசன்னா, லீலா சாம்சன்,வினோதினி வைத்தியநாதன், பிரபு  சாலமன்  நடிப்பில், ஹரிஷ்மா  சரவணனோடு  சேர்ந்து எழுதி ஹரி மகாதேவன்  இயக்கி இருக்கும் படம்.

கல்லூரிப்  படிப்பு முடித்த நிலையில் , ” மேற்படிப்பு படித்து நல்ல வேலைக்குப் போய் நல்ல வேலைக்குப் போய் நிறைய சம்பாதித்து சந்தோஷமாக வாழலாம் . அப்புறம் நீ ஆசைப்படும்படி பல ஊர்களுக்கும் போய் சுற்றி பார்ப்போம் என்று சொன்ன காதலன் …
 
காதலியின் (பூர்ணிமா ரவி)அப்பாவுக்கு (டெல்லி கணேஷ்) உடம்பு சரி இல்லாமல் போனதால் குடும்பத்தைக் காப்பாற்ற அவள் மேல் படிப்புக்கு வராமல்  வாங்கி வேலைக்குப் போனதால் கடுப்பாகிறான் .   ‘நம் காதல்,  வேலை,  லட்சியம் எல்லாம் என்னாவது’   என்று காதலியிடம்  கேட்கிறான். நீ மேல்படிப்பு படித்து வேலைக்குப் போ; நான் வாங்கி வேலைக்குப் போய் இப்போது எனது குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன். என் அப்பா சரியானதும் நாம் திருமணம் செய்து கொள்வோம் ” என்று சொன்ன பாவத்துக்காக , 
 
அவளை விட்டு வேறொருத்தியை கல்யாணம் செய்து கொண்டு போய் விடுகிறான். 
 
மிகவும் நொருங்கிப் போகும் அவள், தான் சின்ன வயதில் வாழ்ந்த மார்த்தாண்டம் என்ற ஊரில் இருக்கும் ஒரு மலையாளப்  பெண் தோழி(நமீதா கிருஷ்ணமூர்த்தி) இன்னொரு நபர், ஒரு பாட்டி ஆகியோரை  சந்திக்கப் போகிறாள் . 
 
தானும் காதலில் தோற்ற அந்தத் மலையாளப்  பெண் தோழி, அதில் இருந்து ஆறு நாட்கள் முன்பு அறிமுகமான நண்பன் ஒருவனுடன் செக்ஸ் வைத்துக் கொண்டிருப்பதை உணர்கிறாள் . “இவன் மேல எனக்கு காதல் எல்லாம் இல்ல. இது கல்யாணம் வரைக்கும் கூட போகாது . ஆனா நான் என்ஜாய் பண்றேன் ” என்கிறாள் அந்தத் தோழி . 
 
ஒரு கடிதத்தை படிக்கத் தெரியாத காரணத்தால் , தனக்குப் பிடித்த ஒருவர் தன்னைக் காதலிப்பதை அறியாமல் அவரை , தான் இழந்ததை ஒரு வருடம் கழித்து அறிந்து கொண்டு , அதையே காதல் தோல்வி என்று உணர்ந்து அடுத்து ஐம்பது வருடங்களுக்கு மேல் தனி மனுஷியாக வாழ்ந்தபடி பல இடங்களுக்குப் பயணம் செய்வதையே வாழ்வின் துய்ப்பாக வைத்திருக்கும்   ஒரு பாட்டியை (லீலா சாம்சன்) சந்திக்கிறாள்   
 
வழியில் தனது கடைசிப் பயணத்தில் இருக்கும் ஓர் இளைஞனை (வைபவ் முருகேசன்) சந்திக்கிறாள் . அவனிடம் பேசும்போது தன்னைப்  பற்றி அவனுக்கு தெரியாது என்று என்னும் சில விஷயங்கள் அவனுக்கு தெரிய , அது பற்றி விசாரிக்கிறான். 
 
அவள் பணியாற்றும் வாங்கி வேலையால் ,அதுவும் இவள் செய்த கடன் வசூலிப்பு போன் அழைப்பால் தான் அவன் தனது கடைசி பயணத்துக்கு வந்திருப்பதை அறிகிறாள்.  . 
 
அவனது அந்தக் கடைசிப் பயணம் என்ன  என்பது புரிகிறது.
 
அவனுடன்  பல இடங்களுக்கும் பயணிக்கிறாள்.. அவன் மிகவும் நம்பும் மணி என்பவரை ( பிரபு சாலமன்) சந்திக்கிறாள். 
 
அந்தப் பயணத்தில் அவர்கள் கற்றதும் உற்றதும் உணர்ந்ததும் என்ன ? அது அவர்களுக்கும் என்ன மாதிரியான பிரிவை அல்லது இணைப்பைத் தந்தது என்பதே படம். 
 
மிக இயல்பாக ஆரம்பிக்கிற படம் , வித்தியாசமான –சுருக்கமான — யோசித்துப் புரிந்து கொள்ளும் வசனங்களோடு பயணப்படுகிறது .
 
ஒரு பெண்  காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பி ரயிலில் பயணித்து வேலை செய்யும் வங்கிக்கு வந்து மேனேஜரிடம் திட்டு வாங்கி லோன் கட்டாத  வாடிக்கையாளர்களுடன் போராடி மீண்டும் வீட்டுக்கு வந்து படுத்து , உடம்பு சரி இல்லாத அப்பாவுடன் அம்மாவும் தங்கையும் இரவில் போராடுவதைப்  பார்த்து மறுநாள் காலையில் எழுந்து அவர்சமாக வேலைக்கு கிளம்பி… 
 
இந்த இரண்டு வருட  செக்குமாடு வேலையை விரைவாகக் காட்டும் வகையில் ஸ்ரீ வத்சனின் படத் தொகுப்பு சிறப்பு. 
 
அபி அத்விக்கின் ஒளிப்பதிவு மார்த்தாண்டம் , கொச்சி, வர்கலா  , மூணாறு பகுதிகளை சிறப்பாகக் காட்டுகிறது. 
 
ஆனந்த காசிநாத்தின் பின்னணி  இசை கவனிக்க வைக்கிறது 
 
வாழ்வைத் தேடி வந்த நாயகி   தோழி வீட்டில் ஹோம்  தியேட்டரில் படம் பார்க்கும்போது சிக்னல் நிறுத்தப்பட, ஸ்கிரீனில் SEARCHING  ALL  SOURCES  என்று ஸ்கிரினில் வருவது நாயகியின் மனநிலையை உணர்த்துவதாக இருக்கிறது. அதே போல கேரளா போகும் தமிழர்களிடம் மலையாளிகள் எப்படி அநாகரீகமாக கேவலமாக நடந்து கொள்வார்கள்.  பெண்களிடம் எப்படி வம்பிழுப்பார்கள் என்பதை அவர் காட்சிப்படுத்தி இருப்பதும் சிறப்பு. 
 
உணர்ந்து நிறுத்தி நிதானமாக எல்லா காட்சிகளிலும் அழகாக  வெளிப்படும் முகபாவனைகளோடு நடித்திருக்கிறார் பூர்ணிமா ரவி,
 
வைபவ் முருகேசனும் நன்றாக நடித்து இருக்கிறார் . 
 
இவ்வளவு சிறப்புகள் இருந்து படத்தை எப்படி நகர்த்திக் கொண்டு போவது  என்பதில் நேர்த்தியில்லை. ஆமை வேகம் என்பார்களே .. அந்த ஆமை மேல் இன்னொரு ஆமை செரிக்க கொண்டால் கீழே உள்ள ஆமை எப்படி இன்னும் மெதுவாக நகரும்? அப்படி நகர்கிறது படம். 
 
முக்கியக் கதாபாத்திரங்கள் ஏதோ ஒன்றை பார்த்து அதிர்சசியாகவோ உற்சாகமாகவோ மாறுவதைக் கட்டினால் , அது என்ன உற்சாகம் அல்லது அதிர்ச்சி என்பதை ரசிகர்களுக்கு  எவ்வளவு சீக்கிரத்தில் காட்டுவது என்பதில் ஒரு  அளவு இருக்கவேண்டும் . அதற்கு மேல்  தாமதிக்கிறார்கள். சரி அப்படி என்ன அவர்கள் பார்த்தார்கள் என்று காட்டும்போது , “இதுக்குத்தானா இவ்வளவு டைம் எடுத்துக்கிட்டீங்க?” என்றா  சலிப்பே மிஞ்சுகிறது. 
 
அதே போல படம் பார்க்கும்போது வெகுஜன  ரசிகன் அடுத்து ஒன்று நடக்கும் என்று எண்ணும் போது  அது இல்லாமல் வேறொன்று படத்தில் நடக்கும் படி எழுதுவது சிறந்த விசயம்தான் . ஆனால் அப்படி வருவது  ரசிகன் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்க வேண்டும் . ஆனால்  இதில் அப்படி வரும் திருப்பங்கள் ஆடியன்ஸ் எளிதாக யூகிப்பதை விட சாதாரணமாக இருக்கிறது  அது இன்னும் கொடுமை . 
 
எழுத்தில் நன்றாக இருக்கும் காட்சிகள் கூட எடுத்த விதத்தில் சோபிக்கவில்லை.  நெஞ்சில் அம்பாகத் தைக்க வேண்டிய காட்சிகள் கூட உடல் நலம் இல்லாத வயசான கொசு கடிக்காத தெரியாமல் கடிப்பது போல பலவீனமாகக் கடக்கிறது . 
 
வானவில் காட்சி வந்த உடனேயே இந்தப் படம் முடிந்து விடுகிறது . 
 
ஆனால் அதோடு விடாமல் அவர்கள் எழுதி முடித்து கடைசி வாக்கியத்தில் முற்றுப்புள்ளி வைத்து  நோட்டை  மூடி கொட்டாவி விட்டு பாத் ரூம் போய் விட்டு வந்து படுத்துத்  தூங்க ஆரம்பிக்கும் ஆரம்பிக்கும் வரை நாம பாத்தே ஆகணும் என்று அடம் பிடிக்கிறார்கள் .
 
ஒரு படத்தை எங்கே ஆரம்பிக்கிறோம் என்பதை விட எங்கே இடைவேளை  விடுகிறோம் என்பது முக்கியம். 
 
எங்கே இடைவேளை விடுகிறோம் என்பதை விட எங்கே படத்தை முடிக்கிறோம் என்பது ரொம்பவே முக்கியம் .  
 
அது இல்லாத காரணத்தால் தியேட்டரிக்கல் வெற்றிக்கான வாய்ப்பை இந்தப் படம் இழக்கிறது . 
 
YELLOW .. .. HOLLOW ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *