பிச்சைக்காரன் , சைத்தான் படங்களுக்குப் பிறகு விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க, விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷனுடன் லைக்கா புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க,
மியா ஜார்ஜ், தியாகராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க,
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த முதல் படமான நான் மற்றும் அமர காவியம் ஆகிய படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கி இருக்கும் படம் எமன்.
வரும் 24 ஆம் தேதி படம் வெளிவரவிருக்கும் நிலையில் பத்திரிக்கையளர்களை சந்தித்தனர் விஜய் ஆண்டனி , மியா ஜார்ஜ், தியாகராஜன் மற்றும் ஜீவா சங்கர் ஆகியோர்
நிகழ்வில் பேசிய நடிகர் தியாகராஜன்
” இந்தப் படம் நல்ல கதை திரைக்கதையில் அமைந்து இருக்கிறது . நூறு படங்களுக்கு வசனம் எழுதியுள்ளவர் போல,
இயக்குனர் ஜீவா சங்கர் வசனம் எழுதி இருக்கிறார் . சிறப்பாக படத்தை உருவாக்கியுள்ளார் .
படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் திறமையையும் உழைப்பையும் பார்த்து வியந்தேன் . ஒவ்வொரு நிமிடமும் படத்தை எப்படி மேம்படுத்தலாம் என்றே சிந்தித்து தீவிரமாக உழைத்தார்
விஜய் ஆண்டனிக்கு ஒரு ராசி உண்டு . பிச்சைக்காரன் படத்தில் ரூபாய் நோட்டு ஒழிப்பு பற்றி அவர் வைத்த வசனம் அப்புறம் உண்மையானது .
அது போல சென்ற வருடம் கதை எழுதப்பட்ட இந்தப் படம் இப்போது உள்ள அரசியல் சூழலுக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கிறது ” என்றார் .
” என்னை இந்தப் படத்துக்கு இயக்குனர் ஜீவா சங்கர் கேட்ட உடனேயே ஒத்துக் கொண்டேன் . அப்புறம்தான் கதையே கேட்டேன் .
காரணம் முன்பே அவரது அமர காவியம் படத்தில் நான் ஹீரோவாக நடித்த காரணத்தால் அவர் திறமை எனக்கு தெரிந்த ஒன்றுதான் . கதையை போனிலேயே சொன்னார் .
சொல்ல சொல்ல ஒரு பேப்பரை எடுத்து நான் எழுதிக் கொண்டே வந்தேன் . ஒரு பேப்பர் , இரண்டு பேப்பர் , மூன்று ,நாலு என வளர்ந்து மொத்தம் பதினெட்டு பேப்பரில் எழுதினேன் .
அதை இன்னும் வைத்து இருக்கிறேன் . இதை சொல்லக் காரணம் கதையில் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பதை புரிய வைக்கத்தான் .
விஜய் ஆண்டனி சாருடன் நடித்தது சந்தோஷமான விஷயம் . படம் நன்றாக வந்துள்ளது ” என்றார் .
இயக்குனர் ஜீவா சங்கர் தனது பேச்சில்
” இந்தப் படத்தை நான் எழுதும் போது அரசியல் சூழல் இப்படி ஆகும் என்று எனக்கு மட்டுமல்ல யாருக்குமே தெரியாது .
நான் இதை முழுக்க முழுக்க கற்பனையாகவே எழுதினேன் . ஆனால் இப்போது உள்ள அரசியல் சூழலில் இது முழுக்க முழுக்க பொருந்திப் போகிறது .
ஆனால் இப்போது நான் ஒரு சிறுவசனத்தைக் கூட இன்றைய நிலைக்குப் பொருத்தமாக மாற்றவில்லை . அதே நேரம் இது அரசியல் சூழலில் அமைந்த கதையே தவிர எந்த அரசியல்வாதியையும் குறிப்பிடும் படம் அல்ல .
ஒரு மாற்றத்துக்காக வில்லன் வேடத்தை பெண்ணாக காட்டலாம் என்று நினைத்தேன் . பின்னர் அது கூட எந்த தனிப்பட்ட அரசியல்வாதியையும் குறிப்பதாக போய் விடக் கூடாது என்பதால் ஆணாக மாற்றி விட்டேன்
அந்த கேரக்டருக்கு யாரை போடலாம் என்று யோசித்த போது எனக்கு மனதில் நம்ம தியாகராஜன் சாரும் மலையாள நடிகர் சீனிவாசனும்தான் வந்தார்கள் .
தியாகராஜனை சந்தித்து பேசிய பிறகு அவரை தவிர வேறு யாரையும் யோசிக்கவில்லை .
ஒரு மனிதன், தான் வாழ்நாளில் செய்யும் குற்றங்களுக்கான தண்டனையை இந்ப்த பிறவியிலேயே அனுபவிக்க வேண்டும் என்பதே இந்த படம் சொல்ல வரும் கருத்து .
இதை அரசியலின் பின்புலத்தில் சொல்லி இருக்கிறோம் ” என்றார் .
விஜய் ஆண்டனி பேசும்போது
” ஜீவா சங்கர் கல்லூரியில் எனக்கு ஒரு வருடம் ஜுனியர் . அப்போது எங்களுக்கு தெரியாது நான் ஹீரோவாகவும் அவர் இயக்குனராகவும் ஆவோம் என்று .
எனது முதல் படத்தின் இயக்குனர் அவர்தான் .
அந்த நான் படத்தின் படப்பிடிப்பின் போதே , இந்தப் படத்தின் கதையை ஒரு கருவாக நான் கேட்டேன் . அடுத்து அமர காவியம் படத்தின் கதையை கேட்ட போது,
அதில் ஹீரோ கேரக்டரை ஒரு நடுத்தர வயது மனிதனாக இருப்பது போல மாற்றினால் நானே நடிக்கத் தயாராக இருந்தேன் . ஆனால் மாற்றிப் பார்த்த போது அது சரிவரவில்லை .
அடுத்து எமன் படத்தின் கதையை டெவலப் செய்து சொன்னார் . லைக்கா புரடகச்ஹான்ஸ் இணைந்தது படத்தை எடுக்க ஆரம்பித்தோம் .
இது எந்த அரசியல்வாதியையும் தாக்கும் படம் அல்ல . யாரையும் ஆதரிக்கும் படமும் அல்ல . அரசியல் சூழல் சிலரின் வாழ்வில் ஏற்படுத்தும் நிகழ்வுகளே இந்தப் படம் .
இந்தப் படத்தில் வரும் அரசியல்வாதிகள் கதாபாத்திரம் யாரையும் இன்ஸ்பிரேஷனாக வைத்து எழுதப் படவும் இல்லை . நான் நடிக்கும்போதும் எந்த அரசியல்வாதியையும இன்ஸ்பிரேஷனாக வைத்து நடிக்கவில்லை .
இது மக்களின் படம் . மக்களுக்கு பிடித்த படம் ” என்றார்