டீம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் அமீர் தயாரிக்க,
அவரது உதவியாளரான முத்து கோபால் கதாநாயகனாக நடித்து எழுதி இயக்கும் படம் அச்சமில்லை அச்சமில்லை .
இன்னொரு நாயகனாக ஹரீஸ் ஜலே என்பவர் நடிக்க , நாயகிகளாக சாந்தினி தமிழரசன் , துளசி ஆகியோர் நடிக்க, ஜெயப் பிரகாஷ், அருள்தாஸ் , முனீஸ் ராஜா ஆகியோரும் நடிக்கிறார்கள் .
இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
ஒளிப்பதிவு அருண் குமார் . இசை விவுரி குமார், பாடல்கள் சினேகன், படத் தொகுப்பு அத்தியப்பன் சிவா .
படம் பற்றிப் பேசும் இயக்குனர் முத்து கோபால் “திருப்பூர் , கோவை பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் சீர்கேடு, நன்னீர் விஷம் ஆவது,
நதிகளின் அழிவு, உடல் நலச் சீர்கேடு, விவசாயத்தின் வீழ்ச்சி … இது பற்றிப் பேசும் படம் இது .
பாதிப்புகளை மட்டும் சொல்லாமல் சாயப் பட்டறைகள் எப்படி எல்லாம் செயல்படுகின்றன , சாயக் கழிவை நீர் நிலைகளில் கலக்கின்றன என்பதை எல்லாம் அந்தப் பகுதிகளிலேயே போய் படமாக்கினோம் .
இதனால் பல மிரட்டல்களுக்கும் ஆபத்துகளுக்கும் ஆளானோம் . படக் குழுவில் இருந்த எல்லோருமே ஆபத்துகளுக்கு ஆளானோம் .
அதை எல்லாம் மீறி இந்தப் படத்தை எடுத்துள்ளோம் ” என்றார் .
விரிவாகப் பேசிய அமீர் , ” முத்து கோபால் என்னிடம் வேலை செய்யும்போது அதிகம் திட்டு வாங்கிய உதவி இயக்குனர்களில் ஒருவர்
திடீரென்று ஒரு நாள் வந்து ‘நான் ஒரு படம் எடுத்து இருக்கேன் . முக்கால் வாசி முடிச்சுட்டேன் படத்தை முடிக்க பணம் பத்தல’ என்றார் .
சரி எவ்வளவு காசு கடன் வேண்டும் .அஞ்சு லட்சமா ? பத்து லட்சமா ? என்றேன். ‘‘இல்ல நீங்க படத்தை எடுத்து முடிச்சுத் தரணும் ” என்றார் .
‘ ஏம்ப்பா… நீ என்ன எடுத்து இருக்கன்னு தெரியல . நான் எப்படி பணம் போட்டு முடிக்கிறதுன்னு கேட்டேன் .”முதல்ல படத்தைப் பாருங்க ” என்றார்
படம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது . சரி பண்ணுவோம்னு முடிவு பண்ணேன் . அப்போதான் படத்துல ஒரு விவசாயி கேரக்டர் இருக்கு . கெஸ்ட் ரோல் அதை நீங்கதான் பண்ணனும்னு சொன்னார் . நடிச்சு முடிச்சேன் .
முத்து கோபால் படத்துல வக்கீலா வர்றார் .
படம் முடிஞ்சது . . முத்து கோபால் இந்தப் படத்துக்கு வேற ஒரு பேர் வச்சு இருந்தார் . ஆனா ஒரு முக்கியப் பிரச்னையா அச்ச்சமில்லாம சொல்லி ,
அச்சமில்லாம சம்பந்தப்பட்ட இடத்துலேயே பல மிரட்டல்களுக்கு மத்தியில் படம் பிடிச்ச இந்தப் படத்துக்கு அச்சமில்லை அச்சமில்லைன்னு பேர் முடிவு பண்ணினேன் .
அந்தப் பெயரில் மறைந்த கே. பாலச்சந்தர் சார் முன்பே ஒரு படம் எடுத்து இருக்கறதால அவர் மகள் புஷ்பா கந்தசாமியை பார்த்து அனுமதி கேட்டேன். அது அப்பாவுக்கு ரொம்ப புடிச்ச படமாச்சே சார்னு சொன்னார் .
நான் படத்தோட கதையை சொன்னேன் . அப்பா இருந்திருந்தாலும் சந்தோஷமா அனுமதி கொடுத்து இருப்பார்னு சொல்லி அனுமதி கொடுத்தாங்க
இந்தப் படம் பெரிய தொழில் நுட்ப விருந்தா இருக்குமான்னு கேட்டா… இருக்காது . எழுபது சதவீதம் எடுத்து முடிச்ச அப்புறம்தான் என் கைக்கு வந்தது என்பதால
என்னால அதுக்கு மேல தொழில் நுட்ப ரீதியா பெருசா மேம்படுத்த முடியல . ஆனால் இந்தப் படம் சொல்லும் விஷயம் எல்லாரையும் கவரும் . நல்ல படங்கள் ஓடணும் .
காதல் படம் வெற்றிக்குப் பிறகு பாலாஜி சக்திவேல் எடுத்த கல்லூரி படம் ஓடல . எனக்கு அது ரொம்ப கஷ்டமா இருந்தது .
ஏன்னா இப்ப நாட்டில் அரசியலில் இளைஞர்கள் மத்தியில் நடக்கும் விஷயம் எல்லாம் அப்பவே அந்தப் படத்தில் வந்துருக்கும் .
அந்த படம் ஓடாத போது நான் பாலாஜி சக்திவேல் கிட்ட . இந்த படம் தோத்துப் போகல . மக்கள்தான் தோத்துப் போய்ட்டாங்கன்னு சொன்னேன்
இந்தப் படம் எனக்கு பத்து லட்ச ரூபாய் லாபம் தந்தா … அல்லது பத்து லட்ச ரூபாய்க்கு மேல நஷ்டம் தராம இருந்தா கூட போதும் .
இது மாதிரி படங்கள் தொடர்ந்து தயாரிப்பேன். இப்பவே என் அசிஸ்டன்ட் ரெண்டு பேர் அடுத்த கதையோட ரெடியா இருக்காங்க ” என்றார்
பத்து லட்ச ரூபாயாவது லாபம் வர வாழ்த்துகள் !




