
ஆதி லக்ஷ்மி பிலிம்ஸ் சார்பில் செல்வம் , ராஜா ஆகியோர் தயாரிக்க, சதீஷ் ராவன், டெல்னா டேவிஸ், ரஞ்சித், பவர் ஸ்டார் சீனிவாசன் நடிப்பில் வேலுதாஸ் ஞான சம்மந்தம் எழுதி இயக்கி இருக்கும் படம் .
ஒரு கேவலமான கீழ்த்தரமான பொறுக்கித்தனமான , எச்சைத் தனமான , மன சாட்சி இல்லாத பணத்துக்காக எதையும் செய்கிற கேவலமான ஜந்துவை (சதீஸ் ராவன்),
ஒரு முட்டாள்தனமான , லூசு புடிச்ச, அரை வேக்காடான மக்கட்டை இளம்பெண் (டெல்னா டேவிஸ்) விரும்புகிறாள் .
அவன் இவளை ஒரு நாள் விருந்தாக்க முயல, இவளோ கஷ்டப்பட்டு சீட்டுப் போட்டு எல்லாம் அவனுக்கு காசு கொடுக்கிறாள். அவன் அதை ஒரு நாள் குடி செலவுக்கு பயன்படுத்துகிறான் .
ஒரு நாள் அவனது காமப் பசிக்கு இரையாகும் அவள் கர்ப்பம் ஆகிறாள். கல்யாணத்துக்கு இவள் நாள் கேட்க, கருக்கலைப்புக்கு அவன் பணம் தருகிறான் .
அப்போதுதான் தன் தோழியும் அவனால் கருக்கலைப்பு செய்யப்பட்டவள் என்பது அவளுக்குப் புரிகிறது .
பல்வேறு கடத்தல் நபர்களுடன் சேர்ந்து அவன் வசதியானவனாக , இவள் பிள்ளை பெற்று சுய உழைப்பில் வளர்க்கிறாள் .
அவனையும் அவன் நண்பர்களையும் கொல்ல ஒரு சிறுவன் முயல்கிறான் . தொழில் எதிரிகள் பெருகி அவனுக்கு பல திசையிலும் கொலை முயற்சிகள் வர,
அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்தப் படம்.
வட சென்னை என்றாலே ரவுடிகள் உலகம்தான் என்ற அநியாய பிரம்மையை ஏற்படுத்தும் இன்னொரு படம் .
ஹீரோவின் இருப்பிடம் லொக்கேஷன் அருமை .
பவர் ஸ்டார் சீனிவாசன் சிறையில் பாடும் சிறை வாழ்க்கை பாடல் மிக சிறப்பாக இருக்கிறது .
வெகு நீளமான போர் அடிக்கும் காட்சிகள், தறி கெட்டு அலையும் திரைக்கதை என்று முதல் பாதியில் ரொம்பவே சோதிக்கும் படம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் கோபம் குறைக்கிறது .
எல்லா கதாபாத்திரங்களும் காட்சிகளும் எரிச்சல் ஊட்டுகின்றன . ரஞ்சித் மற்றும் ஊனமுற்ற நண்பனுக்கு இடையேயான துளி நட்பு ,
பண விசயத்தில் நாயகியின் தன் மானம் என்று எங்கோ சில காட்சிகள் மட்டுமே கவனிக்க வைக்கின்றன .
சின்ன வயதில் அவனை படிக்கவிடாமல் அவன் அம்மா கெடுத்ததுதான் அவன் கெட்டவன் ஆனதற்கு காரணம் என்று கடைசியில் ஒரு நொண்டி சமாதானம் .
படிக்கலன்னா… ? கொலை செய்யலாம். பெண்களை ஏமாற்றலாம் . கொள்ளை அடிக்கலாம் . அப்படித்தானே ? அப்போ படிச்சவன் யாரும் இதை எல்லாம் செய்யலையா ?
படிக்காத மேதைகளைக் கொண்ட மண் அல்லவா இது ?
தேக்கம் !