சிகரம் சினிமாஸ் சார்பில் பக்ருதீன் ஷேக் தாவூது, சைல்ட் புரடக்ஷன் சார்பில் இயக்குனர் தாமிரா ஆகியோர் தயாரிக்க,
சமுத்திரக் கனி, ரம்யா பாண்டியன், குழந்தைகள் கவின் மற்றும் மோனிகா, ராதா ரவி, இளவரசு, சுஜா வாருணி , நடிப்பில் தாமிரா எழுதி இயக்கி இருக்கும் படம் ஆண் தேவதை .
படம் ஆண்மையுடனோ இல்லை தேவதைத் தன்மையுடனோ இருக்கிறதா ? பேசலாம் .
தென் தமிழ் நாட்டில் இருந்து சென்னை வந்து மனைவி ஜெஸ்ஸிகா ( ரம்யா பாண்டியன்) , மகன் அகர முதல்வன்(கவின்), மகள் ஆதிரா (மோனிகா)
-ஆகியோருடன் வாழும் நாயகன் (சமுத்திரக் கனி). கணவன் மனைவி இருவருக்கும் வாழ்தல் என்பது என்ன என்பதில் மாற்றுக் கருத்துகள்!
வருமானம் குறைவாகவே இருந்தாலும் அன்பு பாசம் இவற்றோடு பிள்ளைகளுக்கு நல்லது சொல்லிக் கொடுத்து நல்ல மனநிலையைக் கொடுத்து வாழ்வதே வாழ்வு என்பது நாயகன் எண்ணம் .
கார் பங்களா ஆடம்பரம் , நிறைய பணம் அதற்காக வேலையில் பதவி உயர்வுகள் அதற்காக ஓய்வொழிச்சல் இல்லாத வேலை ,
அதனால் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை என்பது ஜெஸ்ஸிகாவின் கருத்து .
இருவரும் வேலைக்கு போனால் குழந்தைகள் பாதிக்கப்படும் நிலையில் யாரவது ஒருவர் வேலையை விட வேண்டிய நிலை.
ஜெஸ்ஸிகா மறுக்கிறாள் . நாயகன் வேலையை விட்டு விட்டு குழந்தைகளை பார்த்துக் கொள்கிறான்.
ஜெஸ்ஸிகாவின் பணத்தாசை அறிந்த அலுவலக சக நபர் ஒருவன் ( ஹரீஷ்) அவளை வீழ்த்த முயல்கிறான். . அதை ரசிக்கிறாள் இன்னொரு சக அலுவலர் (சுஜா வாருணி )
வருமானம் உயர உயர தவணை முறையில் வீடு கார் வசதிகள் என்று மேலும் சிக்கலை ஏற்படுத்திக் கொள்கிறாள் ஜெஸ்ஸிகா .
கணவன் கண்டிக்க , ‘ வீட்ல உட்காந்து ஓசி சோறு திங்கும் உனக்கு என் மனநிலை புரியாது . இருக்க முடிஞ்சா இரு . இல்லன்னா போ ” என்கிறாள் ஜெஸ்ஸிகா .
மகன் தூங்கிக் கொண்டு இருக்க, மகள் அப்பாவுடன் வந்து விடுவதாக அடம் பிடிக்க, மகளோடு வெளியேறும் நாயகன்,
சென்னை முழுக்க அலைந்து ஒர் இஸ்லாமிய பெரியவர் ( ராதாரவி ) வீட்டில் வாடகைக்கு எடுத்து , உணவகத்தில் சிப்பந்தியாகி மகளோடு எளிய மகிழ்வான வாழ்க்கை வாழ்கிறான் .
ஜெஸ்ஸிகாவுக்கு கெடுதல் செய்ய நினைத்த சக பெண் அலுவலர் நிறைய கடன் வாங்கி , கிரடிட் கார்டு வசூலிக்க வரும் நபர்களின்,
கொடுமையான அவமானப் படுத்தும் நடவடிக்கையில் சிக்கி தற்கொலை செய்து கொள்கிறாள் .
அதே கடன் வசூலிப்பவர்களிடம் ஜெஸ்ஸிகாவும் மகனும் சிக்க, அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த ஆண் தேவதை .
பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினெஸ்’ படத்தின் பாதிப்பில் தாமிரா உருவாக்கி இருக்கும் படம் இது
சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுவது அதிகரிக்கும் அநியாயமான சமூகச் சூழலில், படத்தின் துவக்கத்தில்,
குழந்தைகளுக்கு நல்ல தொடுகை தவறான தொடுகை பற்றி விளக்கும் அந்த முதல் காட்சியே படத்தின் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது .
எளிமையும் நடிப்புமாய் சமுத்திரக் கனி கவர , அவரோடு போட்டி போட்டு மனசில் இடம் பிடிக்கிறாள் குழந்தை மோனிகா.
குழந்தையை வைத்துக் கொண்டு சமுத்திரக் கனி அலையும் காட்சிகள் எல்லாம் நெகிழ்வுக் கவிதை .
அந்த பலான லாட்ஜ் சம்மந்தப்பட்ட காட்சியும் அங்கே வலிந்து எடுத்துக் கொள்ளும் உதவியை அனுமதிப்பதன் மூலம் முளைக்கும் மனிதத்தால் நாயகனுக்கு கிடைக்கும் உதவியும் சிறப்பு .
பாலியல் வாடிக்கையாளர்கள் நிறைந்த விடுதியின் அறையின் சுவரில் இருக்கும் பொட்டை மகள் எடுத்தி தன் நெற்றியில் வைக்கப் போக,
அதை பதறி தந்தை தடுக்கும் காட்சி அவலச் சுவை இலக்கியம்.
பொதுவாக முஸ்லீங்களுக்கு வீடு கிடைப்பதில் இருக்கும் சிக்கலுக்கு நன்னயமாக இஸ்லாமியப் பெரியவரை,
கருணை மிக்க வீட்டு உரிமையாளராக காட்டி இருக்கிறார் இயக்குனர் தாமிரா .
கடன் வாங்கி வீடு கார் வாங்கிய யாரும் நிம்மதியா இருந்ததில்லை என்ற ரீதியில் சமுத்திரக் கனி சொல்லும் கருத்து ,
நடுத்தர வெகுஜன மக்களின் வாழ்வியலில் அர்த்தமுள்ளது .
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஒரு வார்த்தை முன்ன பின்னதான் இருக்கும் அதுக்காக பொண்டாட்டிய விட்டு பிரிஞ்சு வர்றதா ?”
– என்ற வசனம் , கருத்தியல் , கதைத் திருப்பம், பரந்து பட்ட பார்வை, மண்சார் மொழி என்று எல்லாவகையிலும் ஜொலிக்கிறது . அருமை
இயல்பாக ஈர்க்கும் வகையில் நடித்துள்ளார் சமுத்திரக் கனி. கொஞ்சம் அசந்தாலும் அதீத வெறுப்புக்கு ஆளாக வாய்ப்புள்ள கதாபாத்திரத்தை கவனமான நடிப்பால் சுமந்து ஜெயிக்கிறார் ரம்யா பாண்டியன் . கவின் , மோனிகா இருவரும் உள்ளம் கொள்ளை கொள்கிறார்கள் .
அன்பான இஸ்லாமிய பெரியவராக மனம் கவர்கிறார் ராதாரவி.
அறந்தாங்கி நிஷாவை இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம் . அதில் நகைச்சுவையும் இருந்திருந்தால் படத்தின் இலகுத் தன்மைக்கு உதவி இருக்கும்
ஜிப்ரனின் இசை நெகிழ்வான உணர்வுகள் கிடைக்க உதவுகிறது . விஜய் மில்டனின் ஒளிப்பதிவு சிறப்பு .
ஓரிரு சூழல் மற்றும் இடங்களுக்குள் மட்டும நிகழும் படத்தை சுவாரஸ்யமாக தருவதில் காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு வெல்கிறது
பெரும்பாலும் இரண்டாம் பாதியில் எல்லாமே முன் கூட்டியே யூகிக்கக் கூடிய காட்சிகள் ! எனினும அந்த காட்சிகள் நிகழும் போது பாதிப்பை ஏற்படுத்தத் தவறவில்லை .
ஜெஸ்ஸிகா அடைவேன் என்று சொல்லும் சக அலுவலக நண்பனை ஊக்குவிக்கும் அளவுக்கு கேவல சிந்தனை கொண்ட அந்த பெண் கதாபாத்திரம் ,
கடன் வசூலிக்க வந்தவன் நிர்வாணம் காட்டியதால் , மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள் என்பது போங்கு. அவ்ளோ நல்லவளா அவ?
நல்லவ எனில் இன்னொருவன் மனைவியை அடைவேன் என்று சொல்லும் அந்த சக அலுவலக நண்பனை அப்போதே கண்டிக்க வேண்டியதுதானே ?
அதே போல திடீர் என ஜெஸ்ஸிகா கணவனிடம் ”இருக்க முடியாதுனா எங்கயாவது போ” என்பது வலிந்து திணிக்கப்பட்ட காட்சி மற்றும் கதாபாத்திரச் சீர்குலைவு .
ஜெஸ்ஸிகா அப்படிப்பட்ட பெண்ணாக இருப்பதற்கான முகாந்திரம் அவளது கதாபாத்திர வார்ப்பில் இல்லை .
அதை விடக் கொடுமை மிகச் சிறந்த திறமைசாலியான ஜெஸ்ஸிகா, பெண் என்ற ஒரே காரணத்துக்காக கடைசியில்,
முழுக்க முழுக்க வீட்டில் அடையும் பெண்ணாக மாற்றப் படுவது சரியா ஞாயமாரே?
அவள் வீட்டில் இருந்தபடியே ஒரு வேலை அல்லது தொழில் செய்கிறாள் என்றாவது சொல்லி இருக்கலாம் .
“ஹவுஸ் ஹஸ்பண்ட்”என்று அழைக்கப் படுவதை அவமானமாகக் கருதும் இந்த ஆண் தேவதை ,
மாதம் எண்பதாயிரம் சம்பாதிக்கும் திறமையும் ஆற்றலும் உழைப்பும் உள்ள மனைவியை மட்டும் ‘ ஹவுஸ் ஒய்ஃப்’ ஆக மாற்றுவது என்ன தேவதைத்தனம் ?
இப்படி ஓரிரு குறைகள் இருந்தாலும் பிள்ளைகளுக்கு பணத்தையும் வசதியையும்விட அன்பையும்,
பாசத்தையும் நேரத்தையும் கொடுத்து வளர்ப்பதே பெற்றோரின் வேலை என்று சொல்லும் வகையில் மரியாதை பெறுகிறது படம் .
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462