செவன்த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் சக்திவேல் தயாரிக்க , அஜய் , கோபிகா, யோகிபாபு, உமாஸ்ரீ , அழகு , சேரன்ராஜ் நடிப்பில்,
ஹரி கிருஷ்ணா என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் ஆறாம் வேற்றுமை . படம் ரசனை ஒற்றுமை தருமா ? பார்க்கலாம் .
மலைக்கிராமமான கோட்டைக்காடு பழங்குடி மக்கள் வாழும் ஊர். அதற்கும் உயரத்தில் உள்ள கூனிக்காடு ,
தங்களுக்கு என்று எந்த மொழியும் இல்லாத ஆதிவாசிகள் வாழும் ஊர் . கோட்டைக்காடு வணத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூனிக்காடு இல்லை .
இந்த நிலையில் கொட்டைக்காட்டைச் சேர்ந்த இரண்டு நபர்கள் , பேயா , மிருகமா, மிருகப் பேயா , பேய் மிருகமா என்று சொல்ல முடியாத ,
பெண் உடை அணிந்த ஒரு உருவத்தால் கொடூரமான அடித்துக் கொல்லப் படுகின்றனர் .
அதற்குக் காரணம் பூரணி என்ற பெண்ணுக்கு (கோபிகா) நாம் செய்த துரோகம்தான் என்று விசனப்படுகிறது ஊர் .
கொல்லப்பட்ட இருவரில் வேலன் (சூரியகாந்த்) என்பவனின் அக்கா மகள் வள்ளியும் (உமாஸ்ரீ) பூரணியும் நெருங்கிய தோழிகள் .
வள்ளி சித்தப் பிரம்மை பிடித்த நிலையில் இருக்கிறாள் .
அந்த சரகத்தின் பாரஸ்ட் ரேஞ்சர் (சேரன் ராஜ்) கோட்டைக்காடு வந்தால் எல்லா வசதிகளும்,
செய்து கொடுக்கும் வழக்கம் உள்ளவர்கள்தான் கொலை செய்யப்பட்ட இருவரும் .
எனவே அவர்களின் கொலை பற்றி விசாரிக்க கோட்டைக்காடு வரும் ரேஞ்சரும் சக ஆபீசரும் கூட கொடூரமாக கொல்லப் படுகிறார்கள் .
வழக்கை விசாரிக்க அடுத்து வரும் காவல்துறை உயர் அதிகாரி, பூரணிக்கும் பகலில் உறங்கி இரவில் வேட்டையாடும் பழக்கம் உள்ள,
அந்த ஆதிவாசி கிராமமான கூனிக்காட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கும் (அஜய்) காதல் இருந்ததைக் கண்டு பிடிக்கிறார் .
அந்த காதலை சக ஆதிவாசிகள் விரும்பவில்லை .
இன்னொரு பக்கம் பூரணியை “தனக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டால் , ஊர் மக்கள் தாங்கள் வாங்கிய கடனுக்காக,
அடகு வைத்த நிலப் பத்திரங்களை வட்டி கேட்காமல் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் ” என்கிறார் ஊர்த்தலைவர்
எனவே ஊரே சேர்ந்து வயதான ஊர்த் தலைவரை திருமணம் செய்து கொள்ளும்படி பூரணியை மிரட்டுகிறது .
இந்த நிலையில் பூரணிக்கு என்ன ஆச்சு ? கொலைகள் செய்வது யார் அல்லது எது ? என்பதே இந்தப் படம் .
அடர்ந்த காட்டில் படப்பிடிப்பு நடந்தி இருப்பதோடு அதை விட அடர்ந்த காடுகள், விதம் விதமான பிராணிகளின்,
குளோசப் காட்சிகள் எல்லாம் திரட்டி எடுத்துப் போட்டு மிரட்டுகிறார்கள் . கொலைகள் நடக்கும் காட்சிகளில் ஒலிப் பயன்பாடு சிறப்பு .
ஆதிவாசிக் காதலன் தனது பழங்குடி இனக் காதலியை சந்திக்க புதைகுழியைக் கடந்து போக வேண்டும் என்பதற்காக அவன் நண்பர்கள் புதைகுழியில் குதித்து,
மூழ்கிக் கொண்டிருக்க , அவர்களின் தலையில் கால் வைத்து காதலன் புதைகுழியைக் கடக்க, அவர்கள் மூழ்கி இறக்க அவன் கதறும் காட்சி நெகிழ்வு . பாராட்டுக்கள். 
ஆதிவாசி தொடர்பான காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகளை கடுமையாக உழைத்து உருவாக்கி உள்ளனர் . அந்த உழைப்பு போற்றுதலுக்குரியது .
அழகு, சேரன் ராஜ், கோபிகா, உமாஸ்ரீ , அஜய் மற்றும் ஆதிவாசிகளாக நடித்து இருப்போரின் நடிப்பு பரவாயில்லை .
மற்ற கதாபாத்திரங்களுக்கு இயல்பான தோற்றம் என்ற பெயரில் நடிப்புப் பரிச்சயம் இல்லாதவர்களை போட்டு இருப்பதால் அவர்கள் நடிப்பு செயற்கையாக உள்ளது . 
என்னதான் ஆதிவாசி என்றாலும் எப்போதும் எல்லோரும் எல்லாவற்றுக்கும் ஒருவரை ஒருவர் “அ. ஹ. அ. ஹ. ஹ. அ.ஹ. அ ” என்று கத்திக் கொண்டே இருந்தால்,
எப்படி ரசிகனுக்கு அவர்கள் சொல்வது புரியும் ? சைகை மொழிகளை பயன்படுத்தி சில விசயங்களை விளக்கி இருக்கலாம்
பழங்குடிப் பெண் — ஆதிவாசி காதல் என்பது வித்தியாசமான அற்புதமான களம் . ஆனால் அதை இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் .
யோகிபாபுவை வீணடித்து இருக்கிறார்கள் . காமெடி , சீரியஸ் என்று எதற்கும் அவர் பயன்படுத்தப்படவில்லை .
குற்றவாளிகளை எல்லாம் கொண்டு விட்டு அப்புறம் அவர்கள் செய்த குற்றத்தை சொல்வதால் ரசிகனுக்கு என்ன உணர்வெழுச்சி கிடைக்கும் ?
திரைக்கதையில் இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம்.