வைரமுத்து பாட்டிருந்தும், வருத்தப்படும் கோடைமழை பிரியங்கா

kodai 1

கஷ்டப்பட்டு வேலை செய்த படத்துக்கு உரிய  களம் கிடைக்கவில்லை என்றால் வருத்தமாகத்தான் இருக்கும் . அந்த வருத்ததில் இப்போது இருக்கிறார்கள் கோடைமழை கதாநாயகி பிரியங்காவும் இயக்குனர் கதிரவனும் .

கோடைமழை?

யாழ் தமிழ்த்திரை என்ற எழில் மிக்க பெயர் கொண்ட தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.சுரேஷ்குமார் – டி. அலெக்சாண்டர் இருவரும் தயாரிக்க, 

புதுமுகம் கண்ணன் மற்றும் பிரியங்கா , இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் நடிப்பில், பிரபு தேவாவிடம் பணியாற்றிய கதிரவன் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி வெளிவந்த படம் கோடை மழை .

வருத்தம் என்னவென்று பார்ப்பதற்கு முன்பு,  படத்தின் சிறப்பு என்னவென்று பார்த்து விடுவோம் 

kodai 4

திருநெல்வேலி சங்கரன்கோவில் பகுதி மக்களின் வாழ்வியல் அடிப்படையில் மண்சார்ந்த பதிவாக படத்தை சிறப்பாக உருவாக்கி இருந்தார் இயக்குனர் கதிரவன் .

வைரமுத்துவின் பாடல் வரிகள் படத்துக்கு சிறப்புச்  சேர்த்தன . 

வைர முத்துவின் பாடல் வரிகளில் நடித்தது பற்றி கூறும் பிரியங்கா “முன்பே கங்காரு படத்தில் அவரது பாடல் வரிகளுக்கு நடித்த பெருமை எனக்கு உண்டு .

ஆனால் இதில் கதாநாயகி சம்மந்தப்பட்ட எல்லாப் பாடல்களுமே எனக்கே அமைந்தன .  குறிப்பாக நெல்லைச் சீமையில பாடல் எடுக்கப்பட்ட விதம் அபாரமானது .

பாடல் எனக்கு தெரியாது . இசை தெரியாது. டைரக்டர் என்னிடம் ‘நில்லு….நட.. ஓடு .. இப்படி  பாரு …மேலே பாரு .. சிரி…. என்று மட்டும் சொல்வார் . ‘ஏன்  எதற்கு/’ என்று கேட்பேன் .

kodai 7‘கடைசியில்  பார் தெரியும்’ என்பார் . எனக்கு கொஞ்சம் கஷ்டமாகக் கூட இருந்தது . ‘என்னடா இது.. எதற்கு இதையெல்லாம் செய்யணும்னு கூட சொல்ல மாட்டேங்கறாரே’என்று . 

ஆனால் அப்படி நான் நடித்த காட்சிகளை எல்லாம் நெல்லைச் சீமையில பாட்டில் பார்த்தபோது கிடைத்த பிரம்மிப்பு ..! ஓ இதற்குத்தானா இது ? இந்த சிரிப்பு இந்த வரிக்கா? ‘ என்று வியந்து போனேன் .

டைரக்ஷன் என்றால் என்ன ? டைரக்டரின் சக்தி என்ன என்பதை புரிந்து கொண்டேன். அதுவும் வைரமுத்து சாரின் பாடல் வரிகள், அதோட தரமே தனி ” என்கிறார் .

பிரியங்கா நடித்த முதல் கிராமியப்படம் இது . அந்த அனுபவம் அவருக்கு எப்படி இருந்ததாம் ?

“நமக்கு தெரியாமல் உலகில் எவ்வளவு சிறப்பான  விஷயங்கள் இருக்கின்றன என்பது புரிந்தது . உதாரணமாக மரக் கிளையை உடைத்து பிளந்து இடுப்பில் வைத்து மூச்சுப் பிடிப்பை  சரி செய்யும் காட்சி. 

kodai 6

அது படமாகும்வரை எனக்கு தெரியாது . அந்த பாட்டி கதாபாத்திரம் ஹீரோவிடம் ‘போய் குச்சி ஓடிச்சுக்க்கிட்டு வாடா ‘ என்று சொல்லும்போது கூட,,

அந்த குச்சால அடிச்சு சரி செய்வாங்கன்னுதான் நினைச்சேன் . ஆனால் அதை பிளந்து இடுப்பில் இருபுறமும் வைத்து மூச்சுப் பிடிப்பை நீக்கும் அந்த அறிவியல் .. அபாரம் ” என்கிறார் .

நமது விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்த வரியையே கேள்வி ஆக்கினேன். “படத்துக்காக கறுப்பழகியாவே மாறி இருந்தீங்களே ….?”

சந்தோஷச் சிரிப்புடன் “பொதுவா கறுப்பாக்கணும்னா மேக்கப் போடுவாங்க . ஆனா இந்தப் படத்தில் அப்படி  பண்ணல . அந்த கருப்பு அளவோடும் அழகாகவும் மட்டும் இல்லாம இயல்பா இருக்கணும் என்பதற்காக,

kodai 2

என்னை வெயில்ல நிக்க வச்சே கறுப்பாக்கினாங்க.  சும்மா டயலாக் சொல்லித் தரும்போது கூட முகத்து மேல வெயில் பளீர்னு அடிக்கிற மாதிரி நிக்க வச்சுதான் சொல்லித் தருவாங்க .

‘நிழல்ல நின்னு சொல்லலாமே சார்’னா  ‘இல்லம்மா இங்கேயே நின்னு கேளு’ன்னு சொல்வாங்க . அப்படி பண்ணினதாலதான் அந்த இயல்பான கறுப்பு அமைஞ்சது . 

அப்புறம் .. அந்த மொட்டைப் பாறை மலையில பட்டப் பகல் வெயில் சூட்டுல,  சில பேர் கற்பழிக்க முயல்வதையும் ஹீரோ வந்து காப்பாத்துவதையும் எடுத்தப்போ,

 எல்லாரும் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல ” என்கிறார் பிரியங்கா .

இப்போது வருத்தம் என்ன வென்று பார்ப்போம் .

Kodai Mazhai Tamil Movie Stillsபிரியங்கா  பேசிய எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்த இயக்குனர் கதிரவன் மென்மையான குரலில் புன்னகையோடு வேதனையைப் பகிர்ந்து கொள்கிறார் .

“எவ்வளவோ கஷ்டப்பட்டு , ஒரு கண்ணியமான படமா , மண் சார்ந்த படமா , அழகியலோடு , ஒரு நல்ல நோக்கத்தோடு உணர்வு பூர்வமா இந்தப் படத்தை எடுத்தோம் .

ஆனா ஒழுங்கான தியேட்டர்  அமையல . அதனால மக்கள் பார்க்க வர முடியல . 

நாங்க எல்லாம் தியேட்டர்காரங்ககிட்ட எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தோம் .முடியல . கொடுத்த தியேட்டர்கள்லயும் நைட் ஷோ கொடுத்தாங்க .

kathiravan 1

இது பக்கவான கண்ணியமான குடும்பப் படம் . ஐட்டம் சாங் இருக்கிற கிளுகிளுப்புப் படமோ பேய்ப் படமோ இல்ல . இந்தப் படத்தோட ஆடியன்ஸ் பகல்லதான் படம் பார்க்க வருவாங்க .

 அதனால ரெகுலர் ஷோக்கள் கொடுங்கன்னு எவ்வளவோ சொல்லியும் எங்களுக்கு கிடைக்கல. 

படம் ரிலீஸ் பண்றதுக்குன்னு சில பேர் உருவாக்கிட்டாங்க . தியேட்டர்காரங்க எல்லாம் அவங்க சொல்றததான் கேட்கறாங்க .

அதனால புதுசா வர்றவங்க புதுமுகங்களை வச்சு நல்ல படங்கள் பண்ண நினைக்கறவங்க நல்ல படம் எடுத்தாலும் அதை மக்களுக்கு கொடுக்க முடியல.

kathiravan 2

ரொம்ப வருத்தமா இருக்கு சார் ” என்று அமைதியில் மூழ்குகிறார் 

அடுத்துப் பேசும் பிரியங்கா ” எவ்வளவோ கஷ்டப்பட்டு இந்தப் படத்தை  எடுத்தோம் . பார்த்தவங்க எல்லாரும் பாராட்டறாங்க  . ஆனா பாக்க வைக்க முடியலியே . நாங்களும் இந்த சினிமாவை நம்பி வந்துட்டோம் .

எங்களுக்கும் லட்சியங்கள் இருக்கு .. நாங்களும் சின்சியரா உழைக்கறோம் . ஆனா அந்த உழைப்பை மக்களுக்கு கொண்டு போய் மக்கள் கிட்ட கொடுக்க முடியாத நிலை .

அப்போ நாங்க எல்லாம் என்ன சார் செய்யறது ?” என்கிறார் மிக வருத்தமாக . 

கேள்விகள் இங்கே.  பதில் எங்கே ?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →