திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி வி குமார் தயாரிக்க, கலையரசன், ஜனனி அய்யர், ஷிவதா, பால சரவணன் , ஊமை விழிகள் இயக்குனர் அரவிந்தராஜ் ஆகியோர் நடிப்பில்
ரோகின் வெங்கடேசன் மற்றும் முகில் ஆகியோரின் கதை திரைக்கதையில் , முகில் வசனத்தில், ரோகின் வெங்கடேசன் இயக்கி இருக்கும் படம் அதே கண்கள் . இந்தக் கண்கள் ரசிகர்களை ஈர்க்குமா ? பார்க்கலாம்
சிறுவயதில் பார்வை இழந்த நிலையிலும் , சமையல் கலை கற்று சொந்தமான ஒரு நவீன உணவகம் தொடங்கி முன்னேறி இளம் தொழிலதிபர் விருது பெற்ற வருண் என்ற இளைஞனை (கலையரசன்) ,
அவனது சிறு வயது தொட்ட தோழியான சாதனா (ஜனனி அய்யர்) கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறாள் .
வருணின் பெற்றோரின் விருப்பமும் அதுவே .
இந்த நிலையில் ஏழைகளைத் தேடிச் சென்று உணவளிக்கும் தீபா (ஷிவதா) என்ற பெண் வருணுக்கு அறிமுகமாகிறாள் . வருணுக்கும் தீபாவுக்கும் இடையே காதல் பூக்கிறது .
தீபாவின் அக்கா திருமணத்துக்கு தீபாவின் அப்பா வாங்கிய கடனுக்காக கடன் கொடுத்த தாதாவின் ஆட்கள் தங்களை மிரட்டுவதாக கூறும் தீபா , ”இருபது லட்ச ரூபாய் இருந்தால் பிரச்னையை முடிக்கலாம்” என்கிறாள் . 
தன்னிடம் உள்ள பணத்தை தர வருண் சம்மதிக்கிறான் . அந்த நிலையில் வருணுக்கு எதிர்பாராத விபத்து ஏற்படுகிறது . மூன்று வார சிகிச்சைக்கு பின்பு குணமாகும் வருணுக்கு கண் பார்வையும் வருகிறது .
தீபாவை வருண் தேட , அவளை கண்டு பிடிக்க முடியவில்லை . காலப் போக்கில் சாதனாவை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறான் வருண் 
திருமணத்துக்கு முதல் நாள் தீபாவின் அப்பா வருணை சந்தித்து , ” நீ பணம் தராததால் என் மகளை கடன்காரர்கள் கடத்தி வைத்து கொடுமை செய்கிறார்கள்” என்று கூற ,
கல்யாணத்துக்கு செய்த நகையோடு வருண் போகிறான் . போன இடத்தில் தீபாவின் தந்தை கொல்லப்படுகிறார் . நகையும் பறிபோகிறது . தீபாவையும் காப்பாற்ற முடியாத நிலை .
அதே நேரம் சாதனா — வருண் திருமணமும் நின்று போகிறது . சில நாட்களுக்குப் பிறகு கன்யாகுமரியில் கார் விபத்தில் அடி பட்டு இறந்த ஒருவரின் உருவத்தைப் பார்த்தால் … அது தீபாவின் அப்பா !
நம் கண் முன்னாள் பல நாட்களுக்கு முன்பு இங்கே இறந்த தீபாவின் அப்பா , இப்போது கன்யாகுமரியில் விபத்தில் சிக்கி மறுபடியும் இறந்தது எப்படி என்று குழம்பும் வருண் கன்யாகுமரிக்கு செல்கிறான் . 
அங்கே காவலர் பஞ்சு (பால சரவணன் ) உதவியோடு உண்மைகளை தேடும்போது கிடைக்கும் எதிர்பாராத, தலை கீழ், சம்பவங்களே இந்த அதே கண்கள் .
யாரும் இல்லாத தனிமையில் எந்தத் தொந்தரவும் இல்லாத சூழலில் செல்போனை அணைத்து விட்டு, ராஜேஷ்குமார் அல்லது பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ஒரு துப்பறியும் கதையை ,
ஒரே மூச்சில் படித்து முடித்தால் எப்படி இருக்கும் ? அப்படி ஓர் உணர்வை தருகிறது படம் . 
வருண் கேரக்டரை மிக இயல்பாக நடித்து கவனம் கவர்கிறார் கலையரசன் . மீண்டும் ஒருமுறை தான் ஓர் இயல்பான நடிகன் என்று நிரூபிக்கிறார்.
நல்ல பொண்ணு கதாநாயகி பாத்திரத்தில் கண்கள் விரிய விரிய ஜனனி அய்யர் ! முகத்தில் முக்கால்வாசியை ஆக்கிரமிக்கிறது அந்தக் கண்கள் . 
நெடுஞ்சாலை , ஸீரோ படங்களில் மனம் கவரும் மணமான பூவாக நடித்த ஷிவதா இந்தப் படத்தில் பூ நாகமாக மாறி இருக்கிறார் . நல்ல நடிப்பு .
பால சரவணன் வழக்கம் போல . படத்தின் கதைக்கு ஏற்றபடி ஏதாவது டிரை பண்ணுங்க சார் .
ரவிவர்மன் நீல மேகத்தின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகள் நன்றாக வந்துள்ளது ஜிப்ரானின் இசையில் பாடல்கள் ஜஸ்ட் ஓகேதான் . பின்னணி இசை சிறப்பு .
நிறைய சம்பவங்கள் நிறைந்த திரைக்கதையை கவனமாக நறுக்கி இரண்டு மணி ஒரு நிமிட நேரத்தில் முடித்து போரடிக்காமல் பார்த்துக் கொண்டுள்ளார் படத் தொகுப்பாளர் லியோ ஜான்பால் .
ஆரம்பத்திலேயே சொன்னது போல ஒரு நாவல் படிக்கிற உணர்வை மட்டுமே படம்த ருகிறது . சினிமாவுக்கான மீடியத்துக்கு ஏற்ற ‘காலப்’ , அழுத்தம் படத்தில் குறைவே . அதுதான் இந்தப் படத்தின் ஒரே பலவீனம் . 
படத்தின் முக்கியத் திருப்பத்தை யூகிக்க முடியாத அளவுக்கு காட்சிகளையும் படமாக்கிய விதத்தையும் இன்னும் சிறப்பாக வடிவமைத்து இருக்கலாம் .



