ஹாலிவுட்டின் பிரபல நடிகரான டென்சல் வாஷிங்டன் மாதத்தில் ஆறு மாதம் டிராமாவிலும் ஆறு மாதம் சினிமாவிலும் நடிக்கிறார் . இத்தனைக்கும் டிராமாவில் நடிக்க அவருக்கு தரப்படும் சம்பளம் சினிமாவில் நடிக்க அவருக்கு தரப்படும் சம்பளத்தின் முன்னாள் வெறும் கால் தூசு . ஆனாலும் அவர் ” சினிமாவில் நடித்து நடித்து எனக்கு நடிப்பே மறந்து விடும் போல இருக்கிறது. அப்படி நடக்காமல் இருக்கவே நான் நாடகத்தில் நடிக்கிறேன் “என்கிறார்
1978 ஆம் ஆண்டு நாடகமாக நடத்தப்பட்டு பின்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , ஒய் ஜி மகேந்திரன் , சுஜாதா ஆகியோர் நடிக்க, முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்திய பரிட்சைக்கு நேரமாச்சு படத்தை மீண்டும் நாடகமாக்கி மேடை ஏற்றுவது பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பில்…
முதல பாராவில் சொல்லப்பட்டு இருக்கும் டென்சல் வாஷிங்டன் விஷயத்தை சொன்ன ஒய்.ஜி மகேந்திரன் அடுத்து சொன்ன விசயம்தான் ‘அட!’ என்று ஆச்சர்யப்பட வைத்தது.
லிங்கா படத்தை ரிலீஸ் செய்த பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நாடக நடிகராக மேடை ஏறலாம் என்ற செய்திதான் அது. அந்த நாடகத்தின் கதாசிரியரும் ரஜினிதான் என்பது இன்னும் ஒரு ஆஹா செய்தி .
“ரஜினிக்கு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை. நான் அந்த ஆசையை தூண்டி விட்டுக் கொண்டே இருந்தேன் . அவர் நடிக்கும் நாடகத்திற்கு ஏற்ற கதை ஒன்றையும் அவரே சொல்லி இருக்கிறார். அதற்கான ஸ்கிரிப்ட் விரைவில் ரெடியாகும் . லிங்கா படம் முடிந்து அடுத்த படத்துக்கு தயாராகும் இடைவேளையில் ரஜினி அந்த நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது ” என்றார் ஒய் ஜி மகேந்திரன்.
இது சாத்தியமா என்று ஒய் ஜி மகேந்திரனிடம் சந்தேகமாக கேட்டால் “கண்டிப்பாக நடக்கும் . குறைந்த பட்சம் என் நாடகத்தில் நான்கைந்து காட்சிகளில் வருகிற கதாபாத்திரத்திலாவது அவரை நடிக்க வைப்பேன் ” என்கிறார் உறுதியாக .
நடக்கட்டும் . அதன் வழியாக மேடை நாடகத்துக்கும் ஒரு விளம்பர வெளிச்சம் கிடைக்கட்டும் !