நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , ஒய் ஜி மகேந்திரன் , சுஜாதா ஆகியோர் நடிக்க, முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்திய சோகமான திரைப் படம் பரிட்சைக்கு நேரமாச்சு . இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டாலும் பலராலும் தவறாமல் பார்க்கப்படும் படம் இது .
உண்மையில் படமாவதற்கு முன்பாக மேடை நாடகமாக இந்தியாவிலும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் சுமார் இருநூறு தடவைக்கும் மேல் மேடை கண்டு, சக்கைப் போடு போட்ட நாடகம் இது .
1978 ஆம் ஆண்டு முதன் முதலாக மேடை ஏறிய இந்த நாடகத்தை எழுதியவரே ஒய் ஜி மகேந்திரன்தான். படத்தில் சிவாஜி நடித்த நரசிம்மாச்சாரி வேடத்தில் வேடத்தில் நாடகத்தில் நடித்து அசத்தியவர் மாபெரும் நாடகக் கலைஞரான ஒய் ஜி பார்த்தசாரதி . நாடகத்தில் மகன் வரதுக்குட்டி கேரக்டரில் நடித்தது அவரது பிள்ளையான ஒய் ஜி மகேந்திரன். (ஆக, ரெண்டு பேரும் நடிக்கல கேரக்டராவே வாழ்ந்து இருக்காங்க !)
அப்படி டிராமாவிலும் சினிமாவிலும் அசத்திய பரிட்சைக்கு நேரமாச்சு இப்போது மீண்டும் ரீமேக் ஆகிறது …. சினிமாவாக அல்ல, நாடகமாக !
எஸ் மக்களே…..!
ஸ்ரீராம் புராப்பர்ட்டீஸ் நிறுவனம் வழங்க அவர்களுடன் பாரத் கலாச்சார், அப்பாஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்க தனது தந்தை ஆரமபித்து நடத்திய (பரிட்சைக்கு நேரமாச்சு நாடகத்தை ஆரம்பத்தில் போட்ட) தங்களது யூ ஏ ஏ நாடகக் குழு மூலம், இந்த நாடகத்தை மீண்டும் செப்டம்பர் 14ந்தேதி முதல் 18ந்தேதி வரை சென்னை தி.நகர் வாணி மாகாலிலும் 19ந்தேதி முதல் 21ந்தேதி வரை மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பிலும் நடத்துகிறார் ஒய் ஜி மகேந்திரன்
இதுவரை பரிட்சைக்கு நேரமாச்சு நாடகத்திலும் படத்திலும் மகன் வரதுக்குட்டியாக — இரண்டு வேடத்தில் — நடித்த ஒய் ஜி மகேந்திரன் இப்போது அப்பாவாக புரமோஷன் ஆகி 1978 இல் நாடகத்தில் தனது தந்தையும் 1983 படத்தில் சிவாஜியும் ஏற்ற நரசிம்மாச்சாரி வேடத்தில் நடிக்கிறார் .
நடிகை சுஜாதா வேடத்தில் ஆனந்தி நீண்ட நெடிய அனுபவம் பெற்ற திறமை மிக்க நாடக நடிகை நடிக்கிறார்.
நாடகத்தில் அவரது மகன் வரதுக்குட்டியாக நடிக்கும் ராகவ் பாலாஜி ஆனந்தியின் சொந்த மகன் . (நீங்களும் கேரக்டராகவே வாழலாம்).
படத்தில் ராதா ரவி நடித்த வேடத்தில் பத்திரிக்கையாளர் உசைன் நடிக்கிறார் (வாழ்த்துகள் உசேன்)
இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஒய் ஜி மகேந்திரன் ” எனது பெற்ற தந்தையும் நாடகத் தந்தையுமான ஒய் ஜி பி, நடிப்புத் தந்தையான நடிகர் திலகம் சிவாஜி ஆகிய இருவருமே நடித்த ஒரு வேடத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது .
சிவாஜி நடித்த கீழ் வானம் சிவக்கும் படத்தின் படப்பிடிப்பில் அதன் இயக்குனர் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் சிவாஜியை வைத்து இயக்கு ம் அடுத்த படத்துக்கு அந்த நாடகக் கதையை கேட்டார் . நானே கதையை சிவாஜியிடம் சொன்னேன் . கதை கேட்டு விட்டு அடுத்த நாள் வரச் சொன்ன சிவாஜி , அந்த நரசிம்மாச்சாரி கேரக்டரை எப்படி எல்லாம் செய்யப் போகிறேன் என்பது பற்றி விரிவாக ஒன்றரை மணி நேரம் பேசினார் . இப்போது அந்த வேடத்தை நான் நடிக்கப் போகிறேன் பெருமையாக இருக்கிறது. ஆரம்பத்தில் நாடகமாக வந்த வடிவத்தில் இருந்து சினிமாவாக ஆனபோது சில மாற்றங்களை கண்டது. திரைப்படத்தின் சிறப்பான அம்சங்களை தக்க வைத்துக் கொண்டு கிளைமாக்ஸ் உள்ளிட்ட சில விசயங்களில் நான் மாற்றங்கள் செய்து இருக்கிறேன் ” என்றார் .
பரிட்சையில் முதலிடம் பெற வாழ்த்துகள் !
நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீராம் புராப்பர்டீஸ் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி பாலாஜி பேசும்போது ” சினிமாவில் ஒரு ஷாட் எடுக்கும்போது எத்தனை முறை தவறு செய்து நடித்தாலும் மீண்டும் சரியாக எடுத்து சரியான காட்சிகளை மட்டுமே சேர்த்து காட்டுகிறோம் .
தவறுகள் மறைக்கப் படுகின்றன .
ஆனால் மேஜிக், சர்க்கஸ், நாடகம் மூன்றும் அப்படி அல்ல . ஒவ்வொரு நொடியும் தவறே செய்யாமல மக்கள் முன்பு நேரிடையாக திறமையை காட்ட வேண்டிய உயரிய கலைகள் . அதில் இலக்கியமும் கலக்கிற கலையான நாடகத்தின் மீது கொண்ட மரியாதையால்தான் நாடகங்களை நடத்த நாங்கள் ஸ்பான்சர் செய்கிறோம் “ என்றார் .
பரவாயில்லை…. கட்டிடக் கட்டுமாணம் மட்டுமல்லாது கலைக் கட்டுமாணத்திலும் சிறந்து விளங்குகிறது ஸ்ரீராம் புராப்பர்ட்டீஸ் நிறுவனம் .